Monday, December 27, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2011 பிறக்கப் போகிறது. ஒருவருடமும், ஒரு வயதும் கழியப்போகிறது. இந்த ஒரு வருடத்தில் ஏதாவது உருப்படியாய் செய்தேனா? ஒரு டைரி குறிப்பை வாசிக்க மனசு சற்று பின்னோக்கிச் செல்கிறது.

ஜனவரி மாதம் எனது உப்புக் கணக்கு புதினம் வெளியானது. இந்த புத்தகம் எனது மூன்றாண்டு உழைப்பு. இந்த புத்தகத்தின் மூலம் என் வீட்டிற்கருகில் உள்ள விருபாக்ஷீஸ்வரர் கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.. இந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து நேரிடையாக வாங்கும்போது எனக்குக் கிடைக்கும் எழுத்தாளருக்கான கழிவை சிவனுக்கு அளித்து விடுவது என்பதே என் முடிவு. எனது முடிவைக் கேட்டு பல நண்பர்கள் என்னிடமே புத்தகம் வாங்க, கோயிலுக்கு பணம் போய்ச சேர்ந்தது. மனசுக்கு விலை மதிப்பற்ற ஒரு மகிழ்ச்சி கிடைத்தது.


இதுவரை எத்தனையோ வாசர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்றாலும், உப்புக் கணக்கு மூலம் இன்னும் பல நல்ல வாசகர்கள் கிடைத்தார்கள். எனது மின்னஞ்சல் முகவரிக்கு இந்த கதைக்காக வந்த மின்னஞ்சல்கள் நிறைய.


இந்த உப்புக் கணக்கு குறித்து முதலில் மைலாப்பூர் டைம்ஸ் விமர்சித்தது. பிறகு ஹிந்து நாளிதழ் தனது விமர்சனத்தை இந்த புதினத்திற்கு எழுதியது. பிறகு, தொடர்ந்து, கலைமகள், தினமணி, அமுதசுரபி என வரிசையாய் புத்தக மதிப்புரை எழுத, மொத்தத்தில் இந்த மண்ணில் நான் பிறந்ததற்கு இந்த படைப்பு மூலம் நான் இந்த தேசத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்திருப்பதாகவே நினைக்கிறேன்.


மே பதினெட்டு என் பிறந்த நாள் அன்று நான் இருந்தது திருவண்ணாமலையில். என் தங்கை பெண்ணின் கல்யாணம் வேறு. ஜானவாசத்தன்று எல்லோரும் சாப்பிடும்போது ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க, இன்று என் பிறந்த நாள் என்று அறிவிப்பு செய்து ஓசியில் விருந்து கொடுத்தேன்.(தங்கை செலவில்) அன்று இரவு ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி உறவினர்கள் பத்து பேருடன் கிரிவலம் செய்தது மறக்க முடியாதது. அது போல் ஒரு பிறந்த நாள் இது வரை கொண்டாடியதில்லை. அடி அண்ணா மலையிலிருந்து ஒரு பைரவர் எங்களோடு கிரிவலம் வந்து நாங்கள் சத்திரத்தை அடையும் வரை கூடவே வந்து எங்கள் கையால் உணவு சாப்பிட்டுச் சென்றது அதிசயமாக இருந்தது.


ஆகஸ்ட் மாசம் குருவாயூர், பாலக்காடு என்று ஒரு வார யாத்திரை. குருவாயூரில் பதினைந்து முறை சுவாமி தரிசனம். அங்கிருந்து திருநாவாய் என்ற ஷேத்திரத்திற்கு சென்றோம். சிவன், விஷ்ணு, பிரும்மா மூவரும் ஒரு சேர இருக்கும் இடம். நதிக்கு ஒரு கரையில் நவா முகுந்தனின் சந்நிதி. மறுகரையில் சிவனும் பிரும்மாவும். நாங்கள் போகும் போது நேரமாகி விட்ட படியால் முகுந்தனை மட்டுமே தரிசிக்க முடிந்தது. சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த முறை சிவனையும் பிரும்மாவையும் தரிசித்து விடுவது என்ற முடிவோடு பாலக்காட்டுக்கு பயணமானோம்.


பாலக்காட்டில் பஜனோத்சவம் நடந்துகொண்டிருந்தது. மகா கணபதியான் கோயில் மண்டபத்தில் ஐந்து நாள் விடிய விடிய பஜனைகள் நடக்கும். பல பிரபலங்கள் தங்கள் குழுவோடு வந்து பஜன்ஸ் பாடுவது வழக்கம். காலைக் காப்பியில் ஆரம்பித்து இரவு சாப்பாடு வரை கோயிலில்தான். கோயிலை ஒட்டி என் சின்ன மாமியார் வீடு. எந்நேரமும் நாமாவளி கேட்டுக் கொண்டேயிருந்தது. இடையில் ஒருநாள் காவசேரியில் உள்ள எங்கள் குலதெய்வ கோயிலுக்கும் (பரக்காட்டு பகவதி) சென்று வந்தேன். மற்றுமொரு நாள் பதினெட்டு ஆக்ராஹாரங்களில் உள்ள கோயில்களுக்கும் ஒரு விசிட். இந்த பயணம் நிச்சயம் ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீப்தான்.


அக்டோபர் மாசம் எனது சிறுகதை தொகுப்பு தகப்பன் சாமி வெளியாயிற்று. சிறுகதை என்பது தன்னுள் மிகப் பெரிய விருட்சத்தை ஒளித்து வைத்திருக்கும் வீரிய விதை. எனக்கு சிறுகதை மீது அதீத காதல் உண்டு.


17-12-2010 அன்று வெளி வந்த குமுதம் பக்தி இதழில் இதோ எந்தன் தெய்வம் என்ற பகுதியில் எனது ஆன்மீக கட்டுரை வெளிவந்துள்ளது.


இந்த ஆண்டு எனது இரண்டு பதிவுகள் வாசகர்களால் பிரபலப்படுத்தப் பட்டது, பத்திரிகையில் எழுதினால் காசு கிடைக்கும் என்றாலும் என்னமோ எனக்கு இப்போது பதிவு எழுதவே பிடித்திருக்கிறது, காரணம் இங்கே என்னை விட நன்கு எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். எனவே என் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். எனது மனக் குமுறல்களையும் சமூகச் சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கிறேன்.


ஆக மொத்தம் இந்த வருடம் நன்றாகவே கழிந்திருக்கிறது. யாருக்கும், தெரியாமல் கூட எந்த தீமையும் செய்யவில்லை.


புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வித்யா சுப்ரமணியம்

15 comments:

Gopi Ramamoorthy said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

திருநாவாய் ஒரு திவ்யதேசம். நான் 2007 இல் போனேன்.

middleclassmadhavi said...

//ஆக மொத்தம் இந்த வருடம் நன்றாகவே கழிந்திருக்கிறது. யாருக்கும், தெரியாமல் கூட எந்த தீமையும் செய்யவில்லை//
யானும் இதை வழிமொழிகிறேன்.

புத்தாண்டு வாழ்த்துகள்

raji said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்யா மேடம்.

தங்களின் "உப்புக் கணக்கு" ரசிகர்களில் நானும் ஒருத்தி.தங்களுக்கு இது தொடர்பாக
வந்த மின்னஞ்சலில் எனது மின்னஞ்சலும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் அந்த புதினத்தை நூலகத்தில்தான் எடுத்துப் படித்தேன்.எனக்கென்று ஒன்று வேண்டுமென பல நாளாக
முயற்சிக்கிறேன்.கிடைக்கவில்லை.தங்களிடம் கிடைக்குமாயின் விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளேன்.(என்னை பொறுத்த வரை விலை மதிப்பில்லாதது.எனவே விலை பற்றி கூறியதற்காக மன்னிக்கவும்.இருந்தாலும் அதுதான் முறை).

இன்னும் "தகப்பன் சாமி" படிக்கவில்லை.நூலகத்தில் இல்லை.வந்ததும் படித்து விடுவேன்.
இதை பற்றி குறிப்பிடும்போது தங்கள் வரிகளில் உள்ள பிழையை தயவு கூர்ந்து திருத்தி விடவும்(தன்னுள் மிகப் பெரிய விருட்சத்தை ஒழித்து)

எனக்கும் தங்களின் தொடர்பு கிடைத்ததன் மூலம் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டே.நன்றி

மாணவன் said...

உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

சி.பி.செந்தில்குமார் said...

>>>>ஆக மொத்தம் இந்த வருடம் நன்றாகவே கழிந்திருக்கிறது. யாருக்கும், தெரியாமல் கூட எந்த தீமையும் செய்யவில்லை.


நல்ல வரிகள்

வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

சகோதரி,பகிர்வு சுவரஸ்யமாக இருந்தது.இந்த ஆண்டைப்போலவே வரும் ஆண்டுகளும் மகிழ்ச்சி நிறைந்து அமைய என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

R.Gopi said...

//ஆக மொத்தம் இந்த வருடம் நன்றாகவே கழிந்திருக்கிறது. யாருக்கும், தெரியாமல் கூட எந்த தீமையும் செய்யவில்லை//

*****

வாவ் வித்யா....

எவ்ளோ பெரிய விஷயத்த எப்டி இவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க..

உங்கள் நல்ல மனதிற்கு என் வந்தனம்..

2011 ஆண்டும் நன்றே அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

சே.குமார் said...

இந்த ஆண்டைப்போலவே வரும் ஆண்டுகளும் மகிழ்ச்சி நிறைந்து அமைய என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

ரேகா ராகவன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம். 2010 மிகவும் நன்றாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி. இனி வரும் வருடங்களும் அப்படியே அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.

TAMIL MUTTAM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,மேடம்!

ஸ்ரீராம். said...

இந்த ஆண்டுக்குக் குறைவில்லாமல் அடுத்து வரும் ஆண்டுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

//"யாருக்கும், தெரியாமல் கூட எந்த தீமையும் செய்யவில்லை"//

இந்த மனம் எல்லோருக்கும் அமைய வேண்டும். வல்லிசிம்ஹன் பக்கத்தில் பதிவை முடிக்கும்போது 'எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்' என்று முடிப்பார்கள். நல்ல மனங்கள் வாழ்க..

வல்லிசிம்ஹன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் வித்யா.

தீமை நினையாத மனம் மட்டும் இருந்தால் எல்லோர் வாழ்வும் மலர்ந்துவிடும். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

@ஸ்ரீராம் இங்கும் என்னை நினைத்தற்கு ரொம்ப நன்றிமா.

ஜோதிஜி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ரிஷபன் said...

//அடி அண்ணா மலையிலிருந்து ஒரு பைரவர் எங்களோடு கிரிவலம் வந்து நாங்கள் சத்திரத்தை அடையும் வரை கூடவே வந்து எங்கள் கையால் உணவு சாப்பிட்டுச் சென்றது அதிசயமாக இருந்தது.//

கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அனுபவம் உங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி தந்தது.

புத்தாண்டும் பல நல்ல அனுபவங்களுடன் திகழட்டும்.