Sunday, December 5, 2010

இரக்கத்திற்குரியவன் (கவிதை)

மகாபாரதம்! இது துவாபர யுகத்தில்
நடந்த கதை என்கிறார்கள்
நான் சொல்கிறேன், குருஷேத்திரம்
இன்னும் ஓய்ந்தபாடில்லை!

பீஷ்மர், துரோணர், பாண்டு, திருதராட்டிரன்
துரியோதனன், துச்சாதனன், பாண்டவர்கள்
பாஞ்சாலி, குந்தி தேவி என
அனைவரும் இப்போதும் உண்டு

வாழும் மகான்கள் எல்லாம் பீஷ்மர்கள்
(பெண்களோடு ரகசியமாய் வாழ்பவரை நான் சொல்லவில்லை)
ஆட்சிப் பீடத்தில் சில துரியோதனர்கள்
எம்.எல்.எ, எம்.பி. மந்திரிகளாய் கௌரவர்கள்

காவல் நிலையங்களில் துச்சாதனர்கள்
அப்பாவி மக்கள்தான் பாண்டவர்கள்

கள்ளத்தனமாய் பிள்ளை பெற்று
குப்பையில் வீசும் குந்திகள் இன்றும் உண்டு
தர்மம் காக்கும் சில பரந்தாமர்களும் உண்டு

இன்றில்லாமல் போனவன் ஒரே ஒருவன்தான்
இரக்கத்திற்குரியவனும் அவனே

மன்னனாய்ப் பிறந்தவன்
அன்னையால் புறக்கணிக்கப் பட்டவன்
உலகின் முதல் அநாதை
கர்ணன்! ஆம் கர்ணன்தான்

பிறந்தவுடன் பேழையிலே
பின்னர் ஆற்றிலே
இவன் செய்த புண்ணியம்
தேரோட்டியின் உருவிலே

பேழை திறந்தான் தேரோட்டி
உள்ளே சிரித்தது சூரியன்
வாவென இவன் கைநீட்ட
தாவெனக் கேட்பதாக எண்ணி
கையில் பற்றியிருந்த மணிமாலை தந்து
தன் முதல் தானத்தைத் துவக்கிய வள்ளல்

தருமன் ஆடிக் கெட்டான்
இவனோ கொடுத்துக் கெட்டான்
கேட்டவர்க்குக் கேட்டதைக்
கொடுத்தே கெட்டான்

இல்லையெனில் ஓட்டிப் பிறந்த
கவச குண்டலம் அறுத்துக் கொடுத்து
தன் மரணத்திற்கு தானே
கதவு திறந்திருப்பானா?


சத்திரியன் அல்ல நீ என பாண்டவர் இகழ,
நீ சத்திரியனே ! பிராமணன் எனச் சொல்லி
ஏமாற்றிவிட்டாய் என்று பரசுராமன் சபிக்க
இவன் ஷத்திரியனா? தேரோட்டி மகனா?
உண்மையறிந்த அன்னையோ ஊமையாய்!

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
உறவுகள் உதறியவன் இவன்
கொடுப்பதில் இவனுக்கு நிகர் எவருமில்லை
வீரத்திலும் விஜயனுக்கு நிகரானவன்

சுயம்வர மண்டபத்தில் இவன் வில்லேந்தி இருந்தால்
பாஞ்சாலி இவனுக்கே பத்தினியாகி இருப்பாள்


அந்தோ பாவம்! தேரோட்டி மகனுக்கு
இங்கென்ன வேலையென்று விரட்டப் பட்டான்,
வெற்றி விஜயனுக்கு
இப்படி இவன் இழந்தவை ஏராளம்


இதற்கெல்லாம் கரணம் இவன் அன்னை!
அவளுக்கும் அன்போடு 'கேட்ட வரம்' தந்து
தன் மரணத்திற்கு நாள் நிச்சயித்தான்

பலங்கள் அனைத்தும் இழந்த பின்பும்
இவனைக் கொல்ல இயலவில்லை விஜயனால்

பார்த்தான் பரந்தாமன். காத்து நிற்பதது
அவன் செய்த தர்மங்களே என்றுணர்ந்தான்

வேடம் மாற்றி அருகில் சென்றான்
அவனது புண்ணியத்தையும் கேட்டு வாங்கினான்

யார் கொடுப்பார்கள் அதை?
அதையும் கொடுத்தான் நம் கர்ணன்
உதிரத்தால் தாரை வார்த்து
அதையும் கொடுத்தான்

புண்ணியம் கொடுத்ததால் பாவத்மா அல்ல அவன்
மகாத்மாவாய் மாறி விட்டான்

மண்ணில் அவன் வீழ்ந்த போது
கண்ணனும் கண்ணீர் விட்டழுதான்

உபதேசம் பெறாமலே கீதைவழி
நடந்த கர்மவீரன் உண்மையில் இவனே!

நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவன்
நண்பனுக்காக உயிர் விட்டவன்

இன்று இவன் போல் யார் உளர்?

அன்று யாரும் இவனை உணரவில்லை
உதாசீனம் செய்து விட்டார்கள்

அந்தத் தவறை இன்று நாமும் செய்ய வேண்டாம்
இரக்கத்திற்குரியவன் இவனே
எனத் தீர்ப்பெழுதுவோம்

25 comments:

சென்னை பித்தன் said...

//இன்றில்லாமல் போனவன் ஒரே ஒருவன்தான் //
இன்று அவன் இருந்தால் பிழைக்கத் தெரியாதவன், பைத்தியக்காரன் என்று ஏளனம் செய்யப் படுவான்.
நல்ல கவிதை

LK said...

நல்லக் கவிதை. ஆனால் கர்ணன் ஒரு கொடையாளி என்ற வகையில் மட்டுமே நல்லவன். அவனது தனிப்பட்ட பல குணங்கள் அதிகமாக பேசப் படவில்லை. அவை மிகவும் மோசமானவை. அதனால்தான் அவன் செய்த தர்மங்களையும் தாரை வார்க்கும் நிலை ... பிறிதொரு சமயத்தில் வைப்பு கிடைத்தால் விரிவாக எழுதுகிறேன்

raji said...

நல்ல கவிதை.இது தங்களின் ஒரு கதையில் ஒரு பாத்திரம் படைத்த கவிதையாய் தாங்கள் அமைத்திருந்ததை படித்து "அருமை" என்று நினைத்துள்ளேன்.இப்பொழுது படிக்கும்பொழுதும் "முதல் அனாதை" என்ற வார்த்தை மனதை பிசைகிறது

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ராஜி பரவாயில்லையே. மீட்டாத வீணை நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்வதாக அமைந்த கவிதைதான். பின்னூட்டத்திற்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

>>>உலகின் முதல் அநாதை
கர்ணன்! >>>

நல்ல வரிகள்.

மேடம் லேபிளில் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.அதை விட தமிழில் லேபிள் கவிதை என குடுத்தால் திரட்டியில் அதிக பார்வையாலர்களை அது கொண்டு வரும்,நிறைய மக்களை அது சென்றடையும்

சி.பி.செந்தில்குமார் said...

>>>வாவென இவன் கைநீட்ட
தாவெனக் கேட்பதை எண்ணி >

இந்த வரிகளில் கேட்பதாக எண்ணி என வர வேண்டுமோ?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கண்டிப்பாக செந்தில்குமார். அப்படியே செய்கிறேன்

dineshkumar said...

//சத்திரியன் எனச் சொல்லி ஏமாற்றிவிட்டாய்
என்னை என்று பரசுராமன் சபிக்க//

ஒரு சிறு தவறு சத்திரியன் அல்ல எனச் சொல்லி ஏமாற்றிவிட்டாய் என்னை என்று பரசுராமன் சபிக்க.......

dineshkumar said...

பாரதபோர் முடியவில்லை
இன்றும் நம்மண்ணிலே
பாரத முடிவினிலே
நாம் நிற்கிறோம் இன்று

நீதியும் அழிந்து
அநீதியும் அழிக்கப்பட்டு
அன்று
நீதி மட்டும் அழிகிறது
இன்று
நினைவில் கொள்ளவேண்டும்
அநீதி அழிக்கப்பட்டதால்
மறுஜென்மம் கிட்டிய
பாரதம் இன்று
இவ்வொரு ஜென்மமே
போதுமென்கிறது அநீதி
நம்மில் அழிக்கப்படாததால்.........

dineshkumar said...

கர்ணனுக்கு கிடைத்த பரிசாக இக்கவிதை அழகு .........
மறுபிறவி எடுத்த கர்ணன் சிறுதொண்டு நாயனாராகா அன்னதாணாம் செய்து பிரவிப்பலன் கிடைக்கா கருநாகமாக இன்றும் கர்ணனுக்கு கிடைக்கவில்லை மோட்சம் ..........

நான் படித்த வரிகளில் இருந்து

மனோ சாமிநாதன் said...

கவிதை மிக அழகு!
இந்தக்‌ க‌ர்ண‌னிட‌ம் பிற‌ருக்குக் தானம் செய்ய‌, க‌வ‌ச‌ குன்ட‌ல‌ம், புண்ணிய‌ம் என்று செல்வ‌த்திற்கு அப்பாலும்
நிறைய இருந்தன! ஆனால் இந்தக் காலத்திலும் தன்னிடமுள்ள‌ செல்வம் அத்தனையையும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு நடு வீதியில் நிற்பவர்கள் இருக்கிறார்கள் வித்யா!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி தினேஷ்குமார். பிழையை சுட்டியதற்கு நன்றி. தட்டச்சுப் பிழையே. சரி செய்து விட்டேன்.. நன்றி மனோ. இப்போதும் அப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பது சந்தோஷமே. ஆனால் இப்போதெல்லாம் எதோ ஒரு எதிர்பார்ப்போடுதான் தான தர்மங்கள் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

Gopi Ramamoorthy said...

நல்ல கவிதை.

கார்த்திக் சொல்றதும் சரிதான்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கோபி நன்றி. நான் கர்ணன் இரக்கத்திற்குரியவன் என்றுதான் சொல்கிறேன். நல்லவனா கெட்டவனா என்ற ஆராய்ச்சிக்கு செல்லவில்லை.

Chitra said...

நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவன்
நண்பனுக்காக உயிர் விட்டவன்

இன்று இவன் போல் யார் உளர்?

.....சரியான கேள்விங்க. இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒருவன் இருந்தால்? இருக்க முடிந்தால்? தெய்வீக மனிதன்தான்.

Kanchana Radhakrishnan said...

நல்லக் கவிதை.

Gnana Prakash said...

அருமையான கவிதை

சே.குமார் said...

நல்ல கவிதை.
கர்ணனுக்கு கிடைத்த பரிசாக இக்கவிதை அழகு ...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank you Kumar

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank you Gnanaprakash, kanchana

ரிஷபன் said...

கர்ணனைப் பார்த்தால் நிச்சயம் இரக்கம்தான்..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ரிஷபன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பாரதத்தில் கர்ணன்..ராமாயணத்தில் வாலி..
இருவரும் இறைவனாலேயே அசைக்க முடியாத பாத்திரங்கள்!!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank you Ramamurthy sir

P.mahendra Kumar said...

அருமையான கவிதை. உண்மையில் அர்ஜூனனைவிட சிறந்தவன் வலியவன் தர்ம எண்ணங்கள் இருந்தபோதிலும் தான் செல்வது அதர்மவழி என்பது அறிந்திருந்தும் தன்மானம் காத்த துரியனுக்காக செஞ்சோற்றுக்கடன் தீர்க்க தன்உயிர் தந்தவன். யார் எதுகேட்டாலும் இல்லைஎன்று கூறாத வள்ளல் கடைசி நேரத்திலும் கண்ணனுக்கு புண்ணியத்தையும் எமனுக்கு தன் உயிறையும் தானம் கொடுத்தான்