Monday, September 26, 2016

பிணந்தின்னி கழுகுகள்

பிணந்தின்னி கழுகுகள்
வித்யா வீட்டில் வேலை செய்யும் முனியம்மா நேற்று மிகவும் காலதாமதமாக வந்தார். என்ன ஆச்சு என்று கேட்க, மத்திய அரசு வழங்கும் ஆதரவற்றோர் ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தை பெற வங்கிக்குப் போயிருந்ததாகக் கூறினார். இத்தனை ஆண்டு அது போஸ்ட்மேன் மூலம் வழங்கப்பட்டதாகவும் இப்போது வங்கி மூலம் வழங்குமாறு ஆணையிடப் பட்டுள்ளதால் வங்கிக்கு சென்று வரிசையில் நின்றதில், காலதாமதம் ஆகி விட்டதாகவும் கூறினார்.

போஸ்ட்மேன் மூலம் என்றால் கண்டிப்பாக ஏதாவது பணம் வாங்கியிருப்பாரே என்றேன். "ஆமாம் மாசா மாசம் நாப்பது ரூவா குடுத்துடணும்" என்றார். ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் ஒரு இருநூறு பேருக்கு ஒரு போஸ்ட்மேன் பட்டுவாடா செய்வார் என்றால், 200 x 40 = 8000. ஓய்வூதியமாக ஒருவருக்குக் கிடைப்பது வெறும் 960/- ஆனால் ஒரு போஸ்ட்மேனுக்கு தான் வாங்கும் ஊதியத்திற்கு மேல் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை லஞ்சமாகக் கிடைக்கிறது. நல்ல காலம் இப்போது இந்த உதவித் தொகைகள் வங்கி மூலம் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளன என்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் நான் அரசுப் பணியில் சேர்ந்த புதிதில் நிகழ்ந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

சர்வீஸ் கமிஷன் பாஸ் பண்ணின சந்தோஷத்தை ஜீரணிப்பதற்குள் தேர்வாணையம் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது. என்னை தென்னாற்காடு மாவட்டத்தில் தூக்கிப் போட்டிருந்தார்கள். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடனே பதவி ஏற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதன்படி கடலூரில் வேலை செய்த ஒரு மாதத்தில் திண்டிவனம் தாலுகாவுக்கு என்னை மாற்றினார்கள். அங்கே என் பணி முதியோர் உதவித்தொகை, , ஆதரவற்ற பெண்கள், விதவைகள் உதவித் தொகை , ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்குவது. அப்போது எல்லா உதவித்தொகையுமே மாதம் ரூ. 30/- மட்டுமே.


கிட்டத்தட்ட திண்டிவனம் தாலுகாவில் மட்டும் எல்லா உதவித் தொகைகளுக்கும் சேர்த்து நான்காயிரம் பயனாளிகள் இருந்தார்கள். மணியார்டர் எழுதி எழுதி கை ஒடிந்து விடும். பிறகு திரும்பி வரும் ரசீதுகளை பத்திரப்படுத்த வேண்டும். ஆளில்லை என்று திரும்பி வரும் உதவித் தொகைகளுக்கு செலான் போட்டு கருவூலத்தில் திருப்பிக் கட்ட வேண்டும். இவை தவிர புதிதாய் விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். மூச்சு விட நேரமிருக்காது. தலை நிமிராது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.


முதியோர்கள் பல ஊர்களிலிருந்தும் என் உதவித் தொகை என்ன ஆச்சும்மா என்று கேட்டு வருவார்கள். போஸ்ட்மேன் வர நேரம் நா ஊட்ல இல்லாம போயிட்டேன்னு உதவித்தொகையை திருப்பி அனுப்பிட்டாரும்மா. என்ற கோரிக்கையோடு சிலர் வருவார்கள். அவர்களது விவரங்களைக் கேட்டுக் கொண்டு திரும்பி வந்த மணியார்டர்களில் அவர்களுடையது இருக்கிறதா என்று பார்த்து அவர்களிடம் கொடுத்து கையொப்பம் பெற வேண்டும். அப்படி வரவில்லை என்றால் மீண்டும் போஸ்ட்மேன் வந்து தருவார்மா என்று சமாதானம் சொல்லி அனுப்ப வேண்டும்.


ஒரு ரெண்டு மாதம் இப்படியே எவ்வித பிரச்சனையும் ஏற்படாது ஓடியது. ஒருநாள் முகம் முழுக்க சுருக்கங்களோடு கூன் போட்டு கம்பு ஏந்தியபடி ஒரு வயதான பெண்மணி (எழுபது வயதிருக்கும்) வந்தார். என்னம்மா பணம் இன்னும் வரலையா? இல்ல புதுசா மனு போடப் போறீங்களா?


தாயி கலெக்டரம்மா (அவர்களுக்கு அங்கு பணியாற்றும் எல்லோரும் கலெக்டர்தான்) போனமாசம் போஸ்ட்மேன் வந்தாரும்மா. வூட்ல ஒரு சாவு. என் மருமவ காச்சல்ல செத்துட்டா. கைல காசு கூட இல்ல. நல்லகாலத்துக்கு உதவித் தொகை வந்துச்சேன்னு நினைச்சா அந்த போஸ்ட்மேன் ரெண்டு ரூவா காசைக் கீழ வெச்சாத்தான் பணம் தருவேன்னாரு. ரொம்ப கஷ்டம் சாமி. இந்த முறை காசு கேக்காதீங்க, பிணம் விழுந்த வூடுன்னேன். முடியாதுன்னார். நானும் என்னால பணம் தரமுடியாதுன்னு பிடிவாதமா சொன்னேன். அப்டியா சரின்னு போய்ட்டார். மறுபடியும் அந்த ஆளு பணம் கொண்டு வரவேல்ல. இந்த மாசமும் இதுவரை பணம் வரல. போஸ்ட்மேன் கிட்ட கேட்டா பதில் சொல்லாம போறார். ஊர்ல நாலு பேரை விசாரிச்சேன். தாலுகா ஆபீஸ் போய்ப் பாருன்னாங்க அதான் வந்தேன். பஸ்சுக்கு கூட காசில்லாம எட்டு கிலோமீட்டர் நடந்தே வரேன் தாயி. என்னாச்சுன்னு பாத்து சொல்லுங்கம்மா. (முப்பது ரூபாய்க்கு இரண்டு ரூபாய் லஞ்சம். பின்னர் உதவித்தொகை முப்பத்தி ஐந்தாக உயர்ந்த போது லஞ்சமும் இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக உயர்ந்தது)


எனக்கு பரிதாபமாக இருந்தது. உக்காருங்க என்று அவரை அருகிலிருந்த ஸ்டூலில் உட்கார வைத்தேன். அவரது பெயர், ஊர், விலாசம் கேட்டு முதியோர் உதவித்தொகை ரிஜிஸ்டரை எடுத்துப் பார்த்த நான் திடுக்கிட்டேன். அவரது பெயரை சிகப்பு மையால் சுழித்து நான்தான் அவர் இறந்து விட்டதாக குறிப்பு எழுதியிருந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. முந்தின மாதம் திரும்பி வந்த மணியார்டர் பட்டியலையும், கருவூலத்திற்கு திரும்ப செலுத்திய பயனாளிகளின் விவரப் பட்டியலையும் எடுத்துப் பார்த்த என் திகைப்பு அதிகமாகியது. அந்த கிழவிக்கு அனுப்பிய மணியார்டர் அவர் இறந்து விட்டார் என்ற போஸ்ட்மேனின் குறிப்போடு திரும்பியிருந்தது. அதை வைத்துதான் நானும் அவர் பெயரை சுழித்து விட்டு அதற்கடுத்த மாதம் பணமும் அனுப்பவில்லை. உயிரோடு இருப்பவரை ஏன் இறந்து விட்டார் என்று அந்த போஸ்ட்மேன் குறிப்பிட்டிருக்கிறார்? வேறு யாரோ இறந்து போனவரை இவர் என்று தவறுதலாக குறிப்பிட்டு கொடுத்து விட்டாரா? ஒன்றும் புரியவில்லை.


எனக்கு அந்தம்மாவிடம் என்ன சொல்வது எனப் புரியவில்லை. பரிதாபமாக இருந்தது. ஒரு மனுவை நானே எழுதி அதில் அவரது கட்டை விரல் அடையாளத்தை வாங்கி வைத்துக் கொண்டேன். வெளியில் இருந்த தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று டீயும் வடையும் வாங்கிக் கொடுத்தேன். என் பர்சிலிருந்து முப்பது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். நீங்க கிளம்புங்கம்மா. வீடு பூட்டியிருக்குன்னு உங்க பணம் திரும்பிடுச்சு. நா மறுபடியும் தாசில்தார்க்கு எழுதி வெச்சு உங்க பணத்தை அனுப்ப வழி பண்றேன் சரியா? என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன். தளர்ந்த நடையோடு அந்த கிழவி செல்வதைப் பார்த்தபடியே அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் அருகிலிருந்த ஒரு உதவியாளரிடம் இது பற்றி கேட்டேன்.


"இந்தக் கிழவி மாமூல் பணம் குடுத்திருக்காது. அதான் அந்த போஸ்ட்மேன் பயனாளி இறந்துட்டாங்கன்னு அதுங் கதைய முடிச்சுட்டான். இவனுங்களை எல்லாம் பகைச்சுக்கிட்டா இப்டித்தான் பண்ணுவாங்க. இதெல்லாம் இங்க சகஜம்" அந்த உதவியாளர் சொன்னதும் நான் திடுக்கிட்டேன். என் உடம்பு பதறியது. இப்படிக் கூட செய்வார்களா? மகா பாவமில்லையா இது? ஐந்து ரூபாய் லஞ்சம் தரவில்லை என்பதற்காக ஒருவர் உயிரோடிருக்கும் போது இறந்து விட்டதாக தகவல் தருவார்களா? எவ்வளவு ஈனத்தனம் இது? பாவப்பட்ட வயது முதிர்ந்த ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதில் அவ்வளவு ஆனந்தமா இந்த கழுகுகளுக்கு? என் இரத்தம் கொதித்தது. இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் புரொசீஜர் படி என்ன செய்ய வேண்டும் என்று கூட நான் யோசிக்கவில்லை. உடனே அந்தக் கிழவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன்.


அன்று மாலை அந்த  முதியவளை  இறந்து விட்டதாக போஸ்ட்மேன் எழுதிக் கொடுத்த மணியார்டரையும், அந்தக் கிழவியின் ஒரிஜினல் sanction file, மற்றும் கிழவி அன்று கொடுத்த மனுவையும் எடுத்துக் கொண்டு நேராக போஸ்ட் ஆபீஸுக்குச் சென்றேன். அது சரியா தவறா என்று கூட யோசிக்கவில்லை. போஸ்ட் மாஸ்டரிடம் இதைக் காட்டி நியாயம் கேட்டால் விஷயம் சுமுகமாக முடிந்து விடும் என்று நினைத்தேன். அதே போல் போஸ்ட் மாஸ்டரை சந்தித்து விஷயத்தைக் கூறி கையிலிருந்த ஆதாரங்களையும் காட்டினேன். அவர் எவ்வித பதட்டமும் இன்றி நிதானமாக என்னைப் பார்த்தார். நீங்க போங்கம்மா நா பாத்துக்கறேன் என்று அனுப்பி விட்டார்.


மறுநாள் காலை முதல் வேலையாக இந்த ஆதாரங்களை எல்லாம் வைத்து ஒரு கோப்பை உருவாக்கி  முதியவளுக்கு மீண்டும் உதவித்தொகையை அளிக்கலாம் என்றும் அதற்கு அனுமதியளிக்கக் கோரியும் கோப்பினை சமர்ப்பித்து கையேடு துணை தாசில்தாரிடம் உடனடியாக அதில் கையொப்பம் பெற்று நானே கோப்பினை தாசில்தார் அறையில் கொண்டு போய் வைத்து விட்டு வந்து (அப்போது அவர் அறையில் இல்லை) ஒரு பெரு மூச்சோடு உட்கார்ந்தேன்.


ஒருமணி நேரம் ஆகியிருக்கும் தாசில்தார் அழைப்பதாக அவரது காவலாளி என்னை வந்து அழைத்தார். நானும் சென்றேன். எரித்து விடுவது போல் என்னைப் பார்த்தவர் உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் நீ போஸ்ட் மாஸ்டரைப் போய் பார்த்திருப்பாய்? எனக்கு இல்ல தகவல் சொல்லி கோப்பை புட் அப் பண்ணியிருக்கணும்? என்று காட்டுக் கத்தல் கத்தினார். என் தவறு எனக்குப் புரிந்தது. உடனே அதற்கு மன்னிப்பு கேட்டேன். "தெரியாம செய்துட்டேன் சார். இனிமே இப்படி நடக்காது இந்த ஒருமுறை என்னை மன்னிச்சுடுங்க. அனா இப்போ நான் கோப்பை உங்களுக்கு புட் அப் பண்ணியிருக்கேன் என்று அவர் டேபிளில் இருந்த கோப்பை எடுத்து காட்டினேன். அதை வாங்கி அப்படியே கடாசி எறிந்தார். உனக்கு என்ன தெரியும்? பெரிய நியாயவாதியோ நீ? இங்கல்லாம் இப்டித்தான். என் கண்ணு முன்னால நிக்காம போய்டு " காட்டுக் கத்தல் கத்தினார்.


அன்று மதிய உணவுக்குப் பின் டெஸ்பாட்ச் பிரிவிலிருந்து என்னிடம் ஒரு கவரைக் கொடுத்து கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் வந்தது. அதில் ஒரு ஆபீஸ் ஆர்டர். என்னை திண்டிவனத்திலேயே தாசில்தாரின் கண்ட்ரோலின் கீழ் இருந்த மற்றொரு  அலுவலகத்திற்கு  பணி மாறுதல் செய்து தாசில்தார் ஆணையிட்டு கையொப்பமிட்டிருந்தார். என் ரத்தம் இன்னும் கொதித்தது. நேராக போஸ்ட் ஆபீஸ் சென்றது தவறுதான் ஆனால் நான் சென்றதில் ஒரு நியாயமான காரணம் இருப்பது அவருக்குத் தெரியாதா? நான் மீண்டும் தாசில்தார் அறைக்கு வந்தேன். அவர் என்னை நிமிர்ந்து பார்க்காமல் "ஆர்டரை வாங்கிட்டயா? உடனே போய் ஜாய்ன் பண்ணு" என்றார்.


"போறேன் சார். அதுக்கு முன்னாடி ஒரு விண்ணப்பம். அந்த கிழவிக்கு நியாயம் கிடைக்கணும். அந்த போஸ்ட்மேனுக்கு தண்டனை கிடைக்கணும்" என்றேன்.
"இல்லாட்டி என்ன செய்வ?"
"நா இந்த ஆபீஸ்க்கு வரும் போது எனக்கு எந்த உதவி வேணும்னாலும் செய்யச் சொல்லி தலைமைச் செயலகத்துல ஒரு டெபுடி செக்ரெட்டரி போன் பண்ணினார் நினைவிருக்கா? அவர்கிட்ட இந்த விஷயத்தைக் கொண்டு போவேன். அந்தம்மா கொடுத்த மனுவோட நகல், போஸ்ட்மேன் குடுத்த தவறான தகவலின் நகல் நா எழுதின நோட் ஃபைலின் நகல் எல்லாமே எங்கிட்ட இருக்கு. அந்தம்மாக்கு நியாயம் கிடைக்கணும்." எனக்கு எங்கிருந்து அந்த துணிச்சல் வந்ததென்று தெரியாமல் அவரிடம் பேசி விட்டு வெளியில் வந்தேன்.


அன்று மதியம்  மற்றொரு  அலுவலகத்திற்குச்  சென்ற எனக்கு அங்கு பணிபுரியப் பிடிக்காமல் மருத்துவ விடுப்பில் ஊருக்கு வந்து விட்டேன். பிறகு வானூருக்கு மாற்றல் கிடைத்தது. என் நேரம் வானூரிலும் இதே பணிதான் எனக்கு. அங்கு எனக்கு சம்பளப் பட்டியல் போட நான் கடைசியாக வாங்கிய ஊதிய விவரங்களை (Last Pay Certificate) அனுப்பக் கோரி திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஒரு நட்பிடம் போனில் பேசிய போது அவர் சொன்னார். "உஷா மேடம் அந்த கிழவிக்கு மறுபடியும் உதவித் தொகை sanction ஆய்டுச்சு" என்று. கண்டிப்பாக தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை அப்போது ஏற்பட்டது. அனால் தவறு செய்த தபால்காரருக்கு என்ன தண்டனை கிடைத்ததென்று தெரியவில்லை. அதை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சமாதானமானேன்.


இந்த சம்பவத்தை "பிணந்தின்னி கழுகுகள்" என்று பின்னர் சிறுகதையாக எழுதினேன். அது இதயம் பேசுகிறது இதழில் வெளியாயிற்று. ஆனால் இன்று வரை ஏழைகளின் வயிற்றில் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லகாலம் இனி வங்கி மூலம் பணப் பட்டுவாடா என ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இந்த பிணந்தின்னிக் கழுகுகளுக்கு தீனி குறையும் என நினைக்கிறேன். அல்லது வேறு வழியில் பணம் பெறக் கூடும்.
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன?






2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையும், கதையில் தங்களின் எழுத்து நடையும், கதைக்கான தலைப்புத் தேர்வும் மிகவும் அருமை.

படிக்கும் போதே இப்படியும் இன்றும் ஆங்காங்கே சில மனிதர்கள் நல்லவர்களாகவும், பலரும் பிணம் தின்னும் கழுகுகளாகவும் தானே இருக்கிறார்கள் என மிகுந்த வேதனையுடன் நினைக்கத்தோன்றியது.

பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி வைகோ சார்