உதை பந்துகள்
அனந்தராமன்
கரம் நடுங்க அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். ஒரு வருடமாக எதைத் தேடித் தேடி ஊரெல்லாம்
செருப்புகள் தேய அலைந்தானோ
அது ஒரு வழியாய் அவனுக்குக் கிடைத்து விட்டது.
அனந்தராமன் இழுத்து
மூச்சு விட்டான். எவ்வளவு பெரிய ஆசுவாசம்! எத்தனை
கஷ்டங்கள்!
இந்த ஒரு
வருடத்தில்
அண்ணாவும் அம்மாவும் எவ்வளவு குத்திக் குதறி இருப்பார்கள்.
"கணக்குப்
போட்டுப் பார்த்தா இதுவரை எவ்ளோ லட்சம் இவன் படிப்புக்குக் கொட்டி அழுதிருப்போம்!
ஊர் முழுக்க இஞ்சினியரிங் படிப்புலதான் போய் விழறது. தடுக்கி விழுந்தா நூறு எஞ்சினியர். அதனால வேலை
கிடைக்கறது கஷ்டம்னு தலைபாடா அடிச்சுண்டேன். கேட்டேளா? நல்ல மார்க் வாங்கிட்டான்.
எஞ்சினியரிங்தான் படிக்க வெக்கணும்னு ஒத்தைக் கால்ல நின்னார் அப்பா. இருக்கற கடனெல்லாம் வாங்கி
இவம்படிப்புக்கு கொட்டியாச்சு. அத்தனையும் முழுங்கி ஒரு எஞ்சினியர்
பட்டத்தை வாங்கி இப்ப அதை பூஜை பண்ணிண்ருக்கான். படிச்ச படிப்புக்கும்
வேலை கிடைக்கல. மத்த வேலைக்குப் போகவும் கௌரவக் குறைச்சல். இப்பப் பார்.... ஊரைச் சுத்திட்டு வந்து
வெட்டிச் சோறு தின்னுண்ருக்கான்."
அண்ணா
வலிப்பு வந்தாற்போல் கையை உதறி உதறி நாக்கைச் சுழற்றியடித்தான். நாவினால் சுட்ட காயங்கள் இப்படி
ஆயிரக்கணக்கில் உண்டு. அண்ணா
சொன்னது நிஜம்தான். நிறைய எஞ்சினியர்கள் வேலையில்லாமல்
இருந்தார்கள். இருந்தாலும் அண்ணா
பேசும்போது செத்து விடலாம் போலத்தான் இருக்கும். பணம் செலவழித்தது முழுக்க அப்பாதான்
என்றாலும் அண்ணா
என்னமோ தான்தான் செலவு செய்தாற்போல் பேசுவான். அப்பா தன்னை வெறும் பிகாம் மட்டுமே படிக்க
வைத்ததை சொல்லி
சொல்லிக் காட்டுவான்.
அந்த
பீகாமுக்கே அவன் அதிர்ஷ்டம் அப்போது வங்கி வேலை கிடைத்து இப்போது கை நிறைய
சம்பாதித்தாலும் அப்பா தனக்கு பணம் செலவழிக்கவில்லை என்பதைக் குத்திக் காட்டா விட்டால்
தூக்கம்
வராது அவனுக்கு.
அனந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வரசித்தி விநாயகனுக்கு முன் வைத்து
வணங்கி நன்றி
சொன்னான். அப்பாவிடம்தான் முதலில் சொல்ல வேண்டும். இதேபோல் அவர் காலடியில் இதை
வைத்து அவரிடம் ஆசி பெற வேண்டும்.
இந்த ஒரு வருடத்தில் அப்பாதான் அவனுக்கு முழு
சப்போர்ட். அண்ணன்
திட்டும் போதெல்லாம் அவன் மல்லீஸ்வரன் கோயிலுக்குப் போய் அமர்ந்து விடுவான். முதல்
முறை அப்படி
அமர்ந்திருந்த போது பரிவுடன் ஒரு கரம் அவன் முதுகில் தட்டியது.
அப்பாதான்
பின்னால் நின்றிருந்தார்.
"என்னடா
அனந்து அண்ணா
திட்டினதுக்கா இந்த அசோக வனத்துக்கு வந்து உக்காந்துட்ட?"அப்பா
புன்னகையோசு அவனருகில் அமர்ந்தார்.
அவன்
சிரிக்க முயன்றான்.
"அண்ணா
திட்டறது சாதாரண கஷ்டம்டா அனந்து. இதுக்கே சோர்ந்து போய்ட்டா எப்டி? இது சமுத்திரத்துல சின்ன அலை. இன்னும் எவ்ளோ
இருக்கு! ஆளையே
முழுங்கடிக்கற அளவுக்கு வரும்.
அதுக்கெல்லாம் என்ன செய்வ? கமான் கண்ணா கவலையைத் தட்டி விட்டுட்டு வேலையைப் பார்ப்பயா?"
"படிப்பு
முடிஞ்சதுமே வேலை கிடைக்கணும்னா எப்டி? எல்லார்க்குமா உடனே வேளை கிடைச்சுடறது?
அம்மாக்கும்
அண்ணாக்கும் இது ஏன் புரிய மாட்டேங்கறது? முந்தாநேத்து அம்மா கிட்ட கொஞ்சம் பணம் கேட்டேன்.
உன் சில்லற
செலவுகளுக்காவது எதாவது வேலை பார்க்கக் கூடாதான்னு கேக்கறான் அண்ணா
எவ்ளோ கஷ்டமார்க்கும்
எனக்கு?"
"புரியரதுடா.
இங்க பார் அனந்து. படிப்பு முடிஞ்சு நல்ல வேலை கிடைக்கற வரை ஒரு இளைஞனுக்கு
சோதனையான காலம்தான். கால்
பந்து மாதிரிதான் அவன் நிலை. ஆளாளுக்கு எட்டி உதைப்பா. எந்த உதைலயாவது கோல்
பாயன்ட்டுக்குள்ள விழுந்துட மாட்டாநான்னு ஒரு நப்பாசை. அதுக்கெல்லாம் வருத்தப் படக்கூடாது.
இனிமே எதுக்கும் அம்மாட்டயோ அண்ணா கிட்டயோ நீ காசு கேக்க வேண்டாம் சரியா?
மாசா மாசம் உன் அப்ளிகேஷன்
இன்டர்வியு செலவுக்குன்னு நான் ஐநூறு ரூபா தரேன். முதல்லையே நீ எங்கிட்ட
கேட்ருக்கலாம். என் ஞாபகம்
வரலையா உனக்கு?"
"இதுவரை
அம்மாட்டதான் கேட்ருக்கேன்"
"இனிமே
நான் தரேன். இதோ பார் அனந்து வேலைக்கு முயற்சி பண்ணு. அது கிடைக்கறப்போ கிடைச்சுட்டு போறது.
எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு. நமக்கு எப்போ எது கிடைக்கனும்னு இருக்கோ அப்போ அது
கிடைச்சுடும். யாராலையும்
தடுக்க முடியாது. அது
நல்லதார்ந்தாலும் சரி. கெட்டதார்ந்தாலும் சரி. அதனால வேலை கிடைக்கற வரை இப்டி தாடி
வளர்த்துண்டு சோகமா அலையணும்னு அவசியமில்ல. சந்தோஷமா இரு. யார் இளக்காரமா பேசினாலும்
சட்டை பண்ணாதே. சினிமா பாக்கணுமா பாரு. பிரண்ட்சோட ஜாலியா வெளில போணுமா போ.
வேலை கிடைக்காதவன்
சந்தோஷமா இருக்கப் படாதுன்னு எந்த சட்டத்துலயும் சொல்லல. சோ பி ஹாப்பி மேன்" அப்பா அவன் முதுகில் தட்டி விட்டு தன்
பர்ஸ் பிரித்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக்
கொடுத்தார்.
"ஏம்ப்பா
உன் சம்பளம் முழுக்க அம்மா வாங்கிண்ருவாளே
இதுக்கு என்ன கணக்கு சொல்லுவ?"
அப்பா
புன்னகைத்தார். "அதைப்பத்தி என்ன? நான் பாத்துக்கறேன். நீ சந்தோஷமா இரு சரியா?"
அப்பா
மட்டும் அன்பைக் காட்டியிராவிட்டால் கடினமான இந்த ஒரு வருடத்தை அவன் கடந்திருக்க
முடியாது.
மாதம்
ஐநூறு ரூபாய் அவனுக்குத் தருவதற்காகவே அவர் ஒரு வக்கீலிடம் பார்ட் டைம் உத்தியோகம்
பார்த்த விஷயம் கூட இரண்டு மாதம் முன்புதான் அவனுக்குத் தெரிய வந்தது. அடுத்த
மாதம் அப்பா ஐநூறு ரூபாயை நீட்டிய போது அவன் அழுது விட்டான். அதை வாங்கிக் கொள்ள
அவன் மனம் இடம் தரவில்லை.
"என்னடா ...?"
"எனக்காக
எதுக்குப்பா?" பேச்சு
கூட வரவில்லை. அப்பா சிரித்தார்.
"அட
அசடே என் பிள்ளைக்கு நா தராம யார் தருவா? ஒரு பிடிமானம் கிடைக்கற வரை உன்னை
போஷிக்க வேண்டியது என் கடமைடா கண்ணா"
எப்பேர்ப்பட்ட
தகப்பன். யாருக்கு கிடைப்பார்கள் இப்படி.?
"உனக்காகவானும்
எனக்கொரு வேலை கிடைக்கணும். கைநிறைய சம்பாதிக்கணும். அத்தனையும் உன்கிட்ட கொடுத்து நமஸ்காரம் பண்ணனும்.
"
"ம்ஹும் !
இதோ பாருடா அனந்து. என் சந்தோஷத்துக்காக குழந்தைகள்
பெத்துண்டேன். பெற்ற சந்தோஷத்துக்காக உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு
படிக்க வெச்சேன். மற்றபடி
நீங்க கை நிறைய சம்பாதிச்ச்சு என் மடி நிறைய கொட்டணும்னு எந்த எதிர்பார்ப்பும்
எனக்கில்ல. பெத்தவாளைப் பார்த்துண்டே ஆகணும், அது உங்க கடமைன்னு எல்லாம்
சொல்லி பயமுறுத்த மாட்டேன். ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருந்தா போதும். என் காலத்துக்கப்பறம்
உங்களால்
எனக்கு திவசம் போட முடியலன்னா கூட குற்ற உணர்வு வேண்டாம். பித்ரு சாபம் அது இதுன்னு எல்லாம் யாராவது
பயமுறுத்தினாலும் பயப்பட வேண்டாம். வாழும்போது அன்பா இருக்கற தகப்பன் பித்ருவானாலும்
அன்பாத்தான் இருப்பான். சபிக்க மாட்டான்."
"இப்போ
எதுக்கு சாவைப் பத்தி?"
"ஏன்
நாமெல்லாம் சாகாவரமா வாங்கிண்டு வந்திருக்கோம்?"
"அது
வரும்போது வந்துட்டு போகட்டுமே"
அப்டி
ஒரு வேளை வந்துட்டா அவா சொல்றா இவா சொல்றான்னு பயந்துண்டு சாஸ்திரம் சம்பிரதாயம்னு
பணத்தை வாரி இறைக்க வேண்டாம்னுதான் சொல்றேன். தினமும் அன்போட என்னை ஒரு
முறை நினைச்சுண்டாலே போதும். நித்ய திவசம் போட்டாப் போலதான்."
"போருமேப்பா...
இன்னிக்கு என்ன ஆச்சு உனக்கு.?"
நெருப்புன்னா வாய் வெந்துடாதுடா"
சரி
போதும் விடு. பெத்தவாளுக்கு திவசம் போட்டுத்தான் பிள்ளைகள் போண்டியாய்டப்
போறாளாக்கும்"
"மாட்டா.
ஆனா ஒரு அப்பனுக்குப்
போட்டாப் போதுமா? பட்டினத்தார்
படிச்சதில்ல நீ?
அப்பன்
எத்தனை எத்தனையோ!
அன்னை
எத்தனை எத்தனையோ!
ஓரோரு
ஜென்மால ஓரோரு அப்பா. இதுவரை எத்தனை அப்பாவோ? எத்தனை அம்மாவோ? எல்லார்க்கும் போட்டுண்டு இருக்கோமான்ன?
குழந்தைகள் நம் மூலம் பிறக்கிறதே தவிர நம்மால் அல்ல. பிறகெதற்கு பயமுறுத்தல்களும்
பேரங்களும்? ஆனா
அன்புக்கு மட்டும் எல்லையே கிடையாதுடா அனந்து, நாம் முயற்சி செய்தா நம்ம காலுக்கு கீழ
இருக்கற புழு பூச்சிலேர்ந்து ஆண்ட ஆகாசம் வரை எல்லாத்தையும் நேசிக்கலாம். அந்த
மாதிரி ஒரு அன்புதான் உங்க கிட்டேர்ந்து எனக்கு வேணுமே தவிர அப்பாங்கற உறவுக்காக பயந்துண்டு
செய்யப்படற கர்மாக்கள் அல்ல. இதெல்லாம் உன்கிட்ட எப்பவானும் சொல்லணும்னு நினைச்சேன்.
சொல்லிட்டேன். மத்தபடி சாவுங்கறது
பதற்றப்பட வேண்டிய விஷயமில்லை. அதுவும் சுவாரசியமான விஷயம்தான். மனுஷனுக்கு உண்மையான விடுதலை மரணம்தானே?
விடுதலைக்கு யாரானம் பயப்படுவாளோ?"
அப்பா
சிரித்தார். அவன் யோசிக்க ஆரம்பித்தான் . யோசிக்க யோசிக்கத்தான் அவர் எதை
விரும்புகிறார் என்பது புரிந்தது. எல்லையற்ற அன்பு அவனுக்குள் விரிந்தது. இந்த ஜென்மா
அவர் மூலம் கிடைத்ததற்காக அவன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.
வேலைக்கான
உத்தரவைக் கண்டால் அவர் மகிழ்ந்து போவார். அவன் வேகமாக நடந்தான். கடையில் கொஞ்சம் இனிப்பு வாங்கிக்
கொண்டான். வீட்டில்
எல்லோரும் நிச்சயம் முகம் மலர்வார்கள்.
ஆனால் அப்பாவின்
மலர்ச்சி எதையும் எதிர்பாராத மலர்ச்சியாக இருக்கும். மற்றவர்களுடையது உள் நோக்கம்
கொண்டதாயிருக்கும். அது தேவ்வையில்லை அவனுக்கு. அப்பா மட்டும் போதும்.
மன்னி வாசல் பிறையில் விளக்கு வைத்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் அண்ணாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள், அவன் தலையைக் கண்டதும் பேச்சை நிறுத்தினார்கள்.
"அப்பா
இன்னும் வரல?"
"எதுக்கு
அவரைத் தேடற?"
"காரியமாத்தான்"
"வெளில போயிருக்கார். என்ன விஷயம்? நா உன் அம்மாதான். எங்கிட்ட சொல்லலாமோல்யோ?"
"எனக்கு
வேலை கிடைச்சாச்சு. பெரிய கம்பெனி. சம்பளம் மாசம் முப்பத்தஞ்சாயிரம்."
"என்ன?"
அம்மாவின் முகத்தில்
சூரியன் குடியேறினான்.
"நா
சொல்லலம்மா, நிச்சயம்
அவனுக்கு நல்ல வேலை கிடைச்சுடும்னு!"
அண்ணன்
சொன்ன போது பளாரென்று அவனை அறைய வேண்டும் போலிருந்தது. இருப்பினும் அப்பாவின்
குணத்தை தனக்குள் ஏற்றிக் கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். அம்மா சதைகள் ஆட உள்ளே போய் சுடச் சுட
அவனுக்கு காப்பியும் டிபனும் கொண்டு வந்தாள்." நல்லா சாப்டுடா
கண்ணா"
மன்னியின்
பார்வையில் புது மரியாதை தெரிந்தது. அண்ணா ப்ரிஜ்ஜிளிருந்து தண்ணீர்
பாட்டில் கொண்டு வந்து வைத்தான்.
"சித்தப்பா
சாப்ட்டுட்டு வரேளா? கணக்கு
சொல்லித் தரணும்.
ரெண்டு நோட்புக் அட்டையும் போடணும்." அண்ணா பிள்ளை
சொல்ல அம்மா அவசரமாய் குறுக்கிட்டாள்.
"இனிமே
சித்தப்பாவை சிரமப்படுத்தக் கூடாது தெரிஞ்சுதா? எல்லாத்தையும் இனி தாத்தாட்ட
கேளு. அவர்தான்
ரிடயராயாச்சே!. சும்மாதானே இருக்கப் போறார்"
அனந்தராமன்
அதிர்ந்தான். அப்பா அன்றுதான் ஓய்வு பெறுகிறார் என்பதே அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
சாப்பிடப்
பிடிக்காமல் எழுந்து வாசலுக்கு வந்தான். அப்பா பை நிறைய
சாமான்களோடு தெரு
முனையில் வந்து கொண்டிருந்தார். மளிகை சாமான். இத்தனை நாளாக அவன்தான் வாங்கி வருவது வழக்கம். அம்மாவும் அண்ணாவும் உதைத்து விளையாட
புதுசாய் ஒரு கால்பந்து!
அவன்
மனசு வலித்தது. வாழ்க்கையை
பணத்தால் வாழ்பவர்களுக்கு சும்மா இருப்பவர்கள் எல்லோரும் கால்பந்துதான்.
அப்பாவுக்குள்
இருப்பது எப்பேர்ப்பட்ட ஆத்மா என்பதை எப்போதுதான் அறிவார்கள்
அவர்கள்? அறிவார்களா
அல்லது கடைசி வரை அறியாமையிலேயே உழல்வார்களா?
கண்ணீர்ப்
படலத்தில் அப்பா மங்கலாகத் தெரிந்தார்.
6 comments:
கதையின் தலைப்பும், கதையும் மிகவும் அருமையாக உள்ளது. வரிக்கு வரி மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.
Excellent story and it reflects the reality.Many youngsters have gone through such trauma.
It is in deed a very touching story, very nicely presented. Many of the youngsters have this experience in our society. Best wishes for many more such excellent presentations
இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் பணத்தை மட்டும் நேசித்து உறவுகளை உதைத்து தள்ளிக் கொண்டு. அப்பா கேரக்டர் அற்புதம்! மிகவும் நெகிழ வைத்த ஒர் படைப்பு! வாழ்த்துக்கள்!
Too good
எல்லோருக்கும் மிக்க நன்றி.
Post a Comment