Thursday, January 28, 2016

அஹோபிலம் அனுபவம் - 1

அஹோபிலம்   - 1

எத்தனையோ  ஆண்டு  ஆசை  அஹோபிலம்  செல்ல  வேண்டும்  என்பது. அது  இப்போதுதான்  லபித்தது.  என்  சம்பந்தி,  கவிதாவின்  மாமனார்   நாராயணன்தான்  எல்லா  ஏற்பாடும்  செய்திருந்தார்.  தைப்பூசம்  அன்று  கிளம்பினோம்.  திருத்தணி  தாண்டும்போது  மலை தரிசனமாயிற்று.  ஒரு    மணி  வாக்கில்  போய்ச்  சேர்ந்தால்  அஹோபில  மடத்தில்  புக்  பண்ணி  வைத்திருந்த  அறைகள்  கிடைக்கவில்லை.  அதற்கு  முதல் நாள்  அங்கு  தங்கியிருந்து  பாவனா  நரசிம்மரைக்  கானச்சென்றவர்களின்  ஜீப்  பழுதுபட்டு  அவர்கள்  வெகு  தாமதமாக  வந்ததால்,  அறையை  காலி  செய்ய  முடியாத  சூழல்.  இதனால்  எங்களுக்கு  அறைகள்  கிடைப்பதில்  சிக்கல்  ஏற்பட  அருகில்  ஒரு  லாட்ஜில்  ஒருவழியாய்  அறைகள்  கிடைத்தது.

அஹோ  என்றால்  ஆச்சர்யம்.  பிலம்  என்றால்  குகை.  ஆச்சர்யமான  குகைகள்.  அதில்  சுயம்புவாய்  ஒன்பது  நரசிம்ம  மூர்த்தங்கள்    தூணைப் பிளந்து  வந்து  ஹிரண்யனை  நரசிம்மம்  வதம்  செய்த  இடம்.  என  பல  பெருமைகளைக்  கொண்ட  ஒரு  புனிதத்  தலம்.  ஒன்பது  நரசிம்மரும்  ஒவ்வொரு  கிரகத்திற்கு  அதிபதியாய்  இங்கு  அருள்பாலிக்கிறார்.

பார்கவ  நரசிம்மர்  -  சூரியன்
பாவன  நரசிம்மர்  -   புதன்
வராஹ (குரோட) நரசிம்மர்  -  ராகு
அஹோபில  நரசிம்மர் - குரு
ஜ்வாலா  நரசிம்மர்  -  செவ்வாய்
மாலோல  நரசிம்மர்  -  வெள்ளி
காரஞ்ச  நரசிம்மர்  -  திங்கள்
சக்ரவட  நரசிம்மர்  -  கேது
யோகானந்த  நரசிம்மர்  -  சனி

முதலில்  நாங்கள்  பார்கவ  நரசிம்மரை  தரிசித்தோம்.  கொஞ்ச  தூரம்  ஜீப்  பயணம்  பிறகு  அறுபது  எழுபது  படிகள்  ஏறிச்செல்ல  வேண்டும்.  அடிவாரத்தில்  ப்பர்கவா  தீர்த்தம்.   கோயில்  பூட்டியிருந்தாலும்  நரசிம்மரை  தரிசிக்க  முடிந்தது.  வழிகாட்டி  டார்ச்  அடிக்க,  நரசிம்மரும்,  அவர்  மடியில்  கிடந்த,  ஹிரன்யனும்,  கீழே  நின்றிருந்த  பிரஹலாதனும்   துல்லியமைத்  தெரிந்தார்கள்.  சுயம்புவா  இது  என்ற  அச்சர்யமேற்பட்டது.



 அடுத்தாற்போல்  பாவன  நரசிம்மரை  தரிசிக்கச்  சென்றோம்.  போக வர  45  கிலோமீட்டர் பயணம்  நடுக்காட்டில்  உள்ளது.  போகிற  வழியில்  வெள்ளித்  தடாகமாய்  பவநாசினி  நதி.   கூட்டம்  கூட்டமாய்  வெள்ளை  வெளேரென்ற உடலும்,  கரு கருவென்று  கண்களுமாய்   மேய்ந்து  கொண்டிருந்த  நாட்டுப்  பசுக்கள்.  அவற்றின்  பால்  எப்படி  இருக்கும்  என்று  யோசித்தேன்.  நகரத்தில்  எங்கே  மேய்ச்சலுக்கு  விடுகிறார்கள்?   போடுகிற  தீனியைத்  தின்று,  ஊசி  மருந்துக்கு  சுரக்கும்  பசுக்களைப்  பார்த்த  கண்களுக்கு  அந்த  பசுக்கள்  கொள்ளை  அழகாகத்  தெரிந்தன.   ஜீப்  தொடர்ந்து  சென்றது.

உங்களை  ஒரு பெரிய  பாட்டிலில்  போட்டு வேகமாய்க்  குலுக்கினால்   எப்படி  இருக்குமோ  அப்படி  இருந்தது  பயணம்.   வாயில்  நுரை  தள்ளவில்லை  அவ்வளவுதான்.   பாதி  இடங்களில்  ஜீப்  ரெண்டே  சக்கரத்தில்  செல்வது  போல்  சாய்வாக  சென்றது.  ஜீப்கள்  சென்று  சென்றுதான்  பாதை  என்றே  ஒரு  உருவாகியிருக்கிறது.  மற்றபடி  குறுகலான  ஒரு  வழியில்   பாறைக் கற்களில்  ஏறி  இறங்கி,  மேடும்  பள்ளமுமாய்,  பக்கவாட்டில்  மரக்கிளைகள்  மோதிக்  கிழிப்பது  போல் வந்து  படக்கென்று  ஜீப்பில்  மோதி  உடைந்து...சர்ரென்று  சரிவிலிறங்கி,  கிர்ரென்று  மேட்டிலேறி .... செம  அனுபவம் போங்கள்.  குலுங்கின  குலுங்கலில்   வயிற்றுக்குள்  சிறுகுடலும்  பெருங்குடலும்  சிக்கி  சிடுக்காயிருக்கும்.   ஏதோ  ஒரு  இடத்தில்  ஜீப்  நிற்க,  இதோ  வந்து விட்டதோ  என  நினைத்தால்   அது  செக்  போஸ்ட்டாம்.  அதற்குப்  பிறகும்   ஐந்து  கிலோ  மீட்டர்   பயணம்  உண்டு  என்றார்  ஓட்டுனர். அந்த  கடைசி  ஸ்ட்ரெச்  இன்னும்  மோசமான  பாதையாக  இருந்தது.  ஜீப்  கவிழ்ந்து  விடும்  போல்  சாய்ந்து  சென்றது. சுற்றிலும்  அடர்ந்த  காடு. ஆனால் மழையில்லாததால்  காய்ந்து  கிடந்தது.  இந்த  குறுகலான  வழியில்  எதிரில்  தரிசனம்  முடிந்து  திரும்பி  வரும்  ஜீப்களுக்கும்  வழி விட்டு ,  ஜாக்கிரதையாக  ஓட்டிச்சென்ற  ஓட்டுனர்களின்  அபாரமான  திறமை  அசத்துகிறது.




பயணத்தின்   சிரமம்  எல்லாம்  கோவிலைப்  பார்த்ததும்  பறந்து  போயிற்று. பின்புறம்  இரண்டு  மலைமுகடுகள்  தெரிய  சிறிய  கோயில்தான்.  இரு  மலைகளிலிருந்தும்  பவநாசினி நதி பெருகியிணைந்து   அருவியாய்க்  கொட்டுமாம்.   ஆனால்  மழை  இல்லாததால்  வெறும்  நீர்த்தடம்  மட்டுமே  தெரிந்தது. மகாலக்ஷ்மி  இங்கே  வேடுவப்  பெண்ணாய்  அவதரித்து  நரசிம்மரை  மணந்ததால்  இங்கு  மட்டும்  பலி  நடக்கிறது.   தரிசனம்  முடிந்து  மீண்டும்  அதே  பாதை.  அதே  குலுக்கல்.  அந்தி  சாய்ந்து  தைப்பூச  பௌர்ணமி  நிலவு  மலைகளுக்கு  மேலே  தங்கத்  தட்டாக  உயர்ந்து  எங்களை  எட்டிப்  பார்த்த  அழகில்  மனசு  சொக்கிப்  போயிற்று.  புகைப்படம்  எடுத்த  போ து  ஜீப்  ஒட்டிய  இளைஞர்  உங்க  ஊர்ல  நிலா  தெரியாதாம்மா  என்றாரே  பார்க்கலாம்.  வருமே.  ஆனா இங்கே  இயற்கையழகோட  பார்க்கறோம்  இல்லையா  அதான்  ஆசையா  போட்டோ  எடுக்கறேன்  என்று  சிரித்தேன். காட்டில்  எரியும்  நிலவின்  அழகே  அழகுதானே.    முதல்  நாள்  இந்த  இரு  நரசிம்மர்களைத்தான்  தரிசிக்க  முடிந்தது.




4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பயணம் + அனுபவம் + கோயில்கள் பற்றிய செய்திகள் + படங்கள் எல்லாமே அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

பயண அனுபவம் அருமை...

Anuprem said...

அஹோபிலம் ...நாங்களும் உங்களுடன் பயனிப்பது போல் உள்ளது ...அழகான வர்ணனை .....அருமையான இடம்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி வைகோ, குமார், அனுராதா.