Wednesday, December 23, 2015

பாரம்பரியத்தை  நோக்கி.....

என்  பதின்ம  வயதில் வீட்டில் குமுட்டி அடுப்பில்தான்  சமையல். ரெண்டு   குமுட்டி  அடுப்பிருக்கும்.  ஒன்றில்  பாலை வைத்து  விட்டு  மற்றொன்றில்  பருப்பை  வேகப்போடுவாள் அம்மா.  காப்பி  சமாச்சாரங்கள்  முடிந்ததும், பாலை  இறக்கி  விட்டு,  இன்னும் கொஞ்சம்  கரியை   அள்ளிப்  போட்டு,  ஊது  குழலால்  ஊதி   எரிய விட்டு, வெங்கலப்  பானையில்  அரிசிக்கு   தண்ணீர்  விட்டு அந்த  குமுட்டியில்  வைத்து  அது  கொதித்ததும்  அரிசி  களைந்து  அதில்  போட்டு   தட்டால் பானையை   மூடி  வைப்பாள்.  முக்கால்  பதம்  வெந்ததும்  வெண்கலப் பானையை  இறக்கி  விடுவாள்.  அந்த  பானை சூட்டிலேயே  முக்காப் பதம் முழுதுமாய் நன்கு  வெந்து  விடும்.  அடுத்து இரும்புக்   கடாயில்  சாம்பார்  தயாரானதும்  அதை  எடுத்து  வெண்கல  உருளிக்கு  மாற்றி  விட்டு  அதே இரும்பு  வாணலியில் கோஸ் கறியோ,  உருளைக்கிழங்கு  ரோஸ்ட்டோ  ரெடியாகும்.   ஈயச்சொம்பில்  மணக்க  மணக்க  ரசமும்  ஒரு அ டுப்பில் கொதிக்கும். கச்சட்டி எனப்படும் மாக்கல் சட்டியில்  கீரை  மசியலோ   மிளகூட்டலோ  பண்ணுவாள்.   சாப்பிடும்  போது  அந்த  வெண்கலப்  பானை  சாதமும்,  அதன்  மீது  வீட்டில்  தயிர்  கடைந்து  எடுத்த  வெண்ணையில்  காய்ச்சின  பசு  நெய்யும், இரும்பு சத்து  கலந்த சாம்பாரும்,  இரும்புக்  கடாயில்   வதக்கிய காய் கறியும்  எட்டு  ஊருக்கு  மணக்க  இன்னும்  கொஞ்சம்  சாப்பிடேன்  என்று  நாக்கு  கெஞ்சக்  கெஞ்ச  சாப்பிட்ட  காலம் அது.

 நல்லெண்ணெய்  தேய்த்து  வீட்டில்  ஸ்பெஷலாக  அரைத்து வைத்திருக்கும்  சீயக்காயும்  உடம்புக்கு   வாசனைப்  பொடியும்  தேய்த்து  குளித்து  விட்டு  வந்தோமானால்   குமுட்டி  அடுப்புத்  தணல்  ஒரு  இரும்புக்  கரண்டியில்  ரெடியாக  இருக்கும்.  அதில்  ஒரு  கை மட்டிப்பால்    சாம்பிராணியை  போட்டு  அதன்  மீது  ஒரு மூங்கில்  கூடையை  கவிழ்த்து  எங்கள்  அத்தையோ  அல்லது  பெரியம்மாவோ  எங்களை அந்தக்  கூடை மீது  லேசாய் சாய்த்து  எங்கள்   தலைமுடியை  விரித்து  நீவி விட்டு  கேசம்  முழுவதும்  மணக்க  மணக்க  சாம்பிராணி புகையைப்  படர விட அந்த  சுகத்தில் தூங்கியே  போகும்  என்னை  புகையடங்கியதும்  எழுப்பி  விடுவார்கள். எங்கள் வீட்டில்  எல்லோருக்குமே  நீளமான  அடர்த்தியான  கூந்தல்தான்.  இப்படி  சுகமான  குளியலுக்குப்  பிறகு  மேற்படி  சமையலையும்   சாப்பிட்டோமானால்  அதற்குப்  பிறகு  உண்டமயக்கம் வரும் என்றாலும், மதியத்  தூக்கத்திற்கு  அனுமதியில்லை  அப்போதெல்லாம்.    "சாப்ட்டாச்சோன்னோ .....போ  போய்  இட்லிக்கு  ஊறப்  போட்ருக்கு பார்  அதை  வெண்ணையா   அரைச்சுத்  தருவயாம்"  என்று  ஆட்டுக்  கல்லின்  முன்  உட்கார  வைத்து  விடுவாள்  அம்மா.  இட்லிக்கு  அரைக்கும் பணி   இரண்டு நாளைக்கொரு  முறை எங்களில் ஒருவருக்கு  முறைப்பணி  மாதிரி  வந்து   விடும்.  முற்றத்தை  ஒட்டியுள்ள  வராண்டாவில்  ஆட்டுக்கல்  போட்டிருக்கும்.  உளுந்து  வாகிற்கு   மாவு  வெண்ணை  மாதிரிதான்  அரையும். உண்டதெல்லாம்  அந்த மாவாட்டலில்  ஜீரணித்து  விடும்.  ஊளைச்சதையாவது  மண்ணாவது!

ஆட்டுக்கல்லில்  அரைத்த மாவில்  செய்யப்பட்ட  இட்லியின்  சுவைக்கு  இன்றைய  இட்டிலிகள்  எல்லாம்  கால்   தூசி  பெறுமோ?   சட்னியும்,  ஆட்டுக்கல்லில் அரைத்ததுதான்.  அதன்  வாசனையே  தனி.  அரைத்து  விட்ட  சாம்பாரா   அதுவும்  அம்மியில்  அரைப்பதுதான்.  ஆக மொத்தம்  கரி அடுப்பு முதற்கொண்டு   அன்றைக்கு  உபயோகித்த  அத்தனை  பொருட்களுமே   ஆபத்தை  ஏற்படுத்தாத,  ஆரோக்கியத்திற்கு  உத்தரவாதமானதாக  இருந்தவையே. அதற்குப்பிறகு  கரியின்  இடத்தை  பறித்துக் கொண்டது  மண்ணெண்ணெய்.  அதன்  இடத்தையும்  காஸ் அடுப்பு  ஆக்கிரமித்தது..

ஸ்டவ்  வெடித்தது,  காஸ் சிலிண்டர்  வெடித்தது  என்பதெல்லாம்  குமுட்டி அடுப்பு  வழக்கொழிந்து போன  பின்  வந்த  செய்திகள் .  அன்றைய நல்லவைகள்  எல்லாம்  நாகரிகம்  என்ற  போர்வையில் நம்மால்  மெல்ல  மெல்ல  புறக்கணிக்கப்பட,   நமக்கே  தெரியாத  பல  நோய்கள்  நம்மைத் தொற்றிக் கொள்ள  சுற்றி  சுற்றி  வருகின்றன.  இரும்புக்  கடாயுடன்   நாம் இழந்தது அதிலிருந்து  கிடைத்த  இரும்புச்  சத்தையும்தான்.  மிக்ஸி   கிரைண்டர்  என்ற   விஷயங்கள்  நம்  உடலுழைப்பை  நிறுத்தி  ஒபிசிடிக்கு  தள்ளி  விட்டன.  இன்டாலியம், நான் ஸ்டிக்பாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர்   என்ற   அல்ட்ரா மாடர்ன்  சமாச்சாரம்   எல்லாம்  நம் வேலையை சுலபமாக்கலாம். நேரத்தை  மிச்சப்படுத்தலாம்.   ஆனால் அது  உடல்  நலத்திற்கு  எந்த  அளவுக்கு  நல்லது  என்ற  கேள்வி  எழுகிறது.

குமுட்டி  அடுப்பைத்தவிர  மற்ற  விஷயங்களை  எல்லாம்  வித்யாவும்   அவள் சின்ன  வயதில்  அனுபவித்திருக்கிறாள்.   அந்த  ஞாபகங்களின்  சுவையில்  அவளுக்கு இன்றைக்கு  அவள்  உபயோகித்து  வரும்  அல்ட்ரா  மாடர்ன்  சமையல்  பாத்திரங்களின்  மீது  சலிப்பு  ஏற்பட,  மீண்டும்  பாரம்பரியத்திற்கே செல்ல  விரும்பினாள்.  இந்த  நாலு   நாளில்  மயிலை,  தி.நகர்   என்று  அலைந்தோம். இரும்பு ஐட்டங்களில்   தோசைக்கல்  தவிர  வேறெதுவும்  இங்கு  கிடைக்கவில்லை.  என்னடா  இரும்பு  இப்படி  அரிதான  பொருளாகி  விட்டதா  என்று  விக்கிரமாதித்தன்  கணக்கில்  விடாமுயற்சியோடு  இன்று  பாரீஸ்  கார்னரில்  கந்த  கோட்டம்  அருகே சென்றால்.........யப்பா    அங்கே   அத்தனை  வகையறாக்களும்  கொட்டிக் கிடக்கின்றன.  வார்ப்பிரும்பில்  தோசைக்கல்,  வாணலி   முதல், அப்பக் காரல்,  ஆப்பச்சட்டி,  என்று  அனைத்தும்  கிடைத்தது.  பிளாஸ்டிக்  பிளேட்டுகளை  இனி  எதற்கும்  உபயோகிப்பதில்லை  என்று  தீர்மானித்தாயிற்று.

 எத்தனை  தேடியும்  சென்னையில்  எங்கும்  மாக்கல்   சட்டி  மட்டும் கிடைக்கவேயில்லை.  பாலக்காட்டில்  பார்த்திருக்கிறேன்.  அடுத்த முறைபோகும்போது  வாங்கி விட  வேண்டியதுதான்.   அடுத்தாற்போல்  சின்னதாக  ஆட்டுக்கல்   ஒன்றும்  வாங்கி  விட்டால்  வேலை  முடிந்தது.  சென்னை  மழையில்  ஒரு  வாரம்  மின்சாரம்  இல்லாத  நிலையில்  ஆட்டுக்கல்லின்  அவசியம்  புரிந்தது.  வல்லபா  வேறு கரண்ட் இல்லாமல்  ஆட்டுக்கல்லும்  இல்லாமல், கிரைண்டரில்  கையால்  இட்லிக்கு  மாவரைத்து  மறுநாள்  அதில்  சட்டினியும்  கையால்  ஜிம்  ஜிக்  என்று  அரைத்த  கதையைப்  படித்ததும்   ஆட்டுக்கல்  மீது  காதல்  அதிகரித்து விட்டது  வித்யாவுக்கு.

பேத்தி  சான்விக்கு  ரபுன்சல் மாதிரி  நீ..........ள   கூந்தல்வேண்டும்  என்ற ஆசை.  எனவே  மீண்டும்,  நல்லெண்ணைக்   குளியல்,  சீயக்காய்,  என்பது  அடுத்த தீர்மானம்.  நான்  அன்றும்  இன்றும்  வாசனைப்  பொடியை  மாட்டும் விடவில்லை. இபோதும்  டப்பா   செட்டிக் கடையில்  வாசனைப்  பொடிக்கான சாமான்கள்  வாங்கி,  பூஜைக்கு  உபயோகித்த  ரோஜா,  மரு , தவனம், துளசி,  என்று  எல்லாவற்றையும்காய வைத்து அதனோடு  சேர்த்து  அரைத்து அந்தப் பொடியைத்தான்  குளிப்பதற்கு  உபயோகிக்கிறேன்.  அந்தப்  பொடியில் குளிப்பாட்டி விட்டால்  சான்வியின்  முகம் மலரும்.  சூப்பர்  வாசனை  என்று  நாசியை  இழுத்து  சுவாசிக்கும்.

இந்த  விளம்பர  யுகம்  நமது  நல்ல  விஷயங்களை  எல்லாம்  மெல்ல  மெல்ல  பறித்துக்  கொண்டு  வருகிறது.  அதன் மாயையில் நாமும் மயங்கித்தான் போகிறோம். நாம்  ஆரோக்கியம்  தரும் பழக்க  வழக்கங்களை  விட்டு  மொத்தமாக விலகி வருவதால்  இந்த அவசர  உலகத்தில்  அவசரமாகவே  மரணமும்  வந்து  சேருகிறது   ஆனால்  வேகம்  குறைத்து  கொஞ்சம் நிதானமாக  யோசித்துப்   பார்த்தால்   அன்றைய  வாழ்க்கை  முறையின்  அருமை நமக்குப்  புரியும்.   நம்முன்னோர்களின்  அறிவுஜீவித்தனம்  விளங்கும்.  மீண்டும்  அவற்றை  வெளிக்கொணர்வது  அவசியம்  என்பதும்  புரியும்.  ஜிம்மிற்கு  செலவழிக்கும்  காசை,  நம் வீட்டு  சமையலறையில்  உடலுழைப்பாக   செலவழிப்பதன்  மூலம்  மிச்சப்படுத்தலாம்.  தவிரமின்சாரக் கட்டணமும் கணிசமாய்க் குறையும். சமீபத்தில்  ஒரு  விளம்பரம்  பார்த்தேன்,  உங்கள் பழைய  இரும்பு  வாணலிகள்,  பாத்திரங்களைக்  கொடுத்து  விட்டு  புதிதைப்  பெற்றுச்  செல்லுங்கள்  என்று  புதியவை  லிஸ்ட்டில் நான் ஸ்டிக் வகையறாக்களின்  படம் போட்டிருந்தார்கள்.   நாங்கள்  அந்த  புதிய வகையறாக்களை  கொடுத்து  விட்டு  பழைய  வகையறாக்களைத்  தேடித்  தேடி  வாங்கி  வந்தோம்.  

கந்தகோட்டம்  பக்கம்  போகிறவர்களுக்கு  ஒரு ஆலோசனை.  கனம் தாங்கும்   நல்லதொரு கட்டைப் பையும் ஒன்றோ இரண்டோ  எடுத்துச்  செல்லுங்கள்.. வார்ப்பிரும்பு  பொருட்களை  உபயோகிப்பதற்கு  முன்  எப்படி  அவற்றைத் தயார் படுத்த வேண்டுமென்பதையும் கடைக்காரர்களே   அழகாகச்  சொல்லிக் கொடுக்கிறார்கள்.  

பொதுவாக  வாழ்வில்  முன்னேறுவது  நல்லது  என்பார்கள்   ஆனால்  ஆரோக்கிய விஷயத்தில் மட்டும்   கொஞ்சம்   பின்னோக்கிச்  பழைமையை தேடிச் செல்வதுதான்   நல்லது  என்ற  வித்யாவின்  முடிவில்  எனக்கும்  சந்தோஷம்தான்.

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கரண்ட் இல்லாமல் ஆட்டுக்கல்லும் இல்லாமல், கிரைண்டரில் கையால் இட்லிக்கு மாவரைத்து மறுநாள் அதில் சட்டினியும் கையால் ஜிம் ஜிக் என்று அரைத்த கதையைப் படித்ததும் ஆட்டுக்கல் மீது காதல் அதிகரித்து விட்டது வித்யாவுக்கு.//

ரஸித்தேன் ... சிரித்தேன். பாராட்டுகள்.

'பரிவை' சே.குமார் said...

கதையின் கதை அருமை...

radhakrishnan said...

Arumaiyana pathivu. Mikavum rasiththen.thorattum ungal suyapuranam .intha thalaimuraikku mikavum thevai

radhakrishnan said...

மிக அருமையான பதிவு. இப்போது இதையெல்லாம் யார் சொல்லித்தருகிறார்கள்? கண்டிப்பாக
இதுபோல் பழங்கதைகள் தொடரவேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ராதாகிருஷ்ணன்
மதுரை