Monday, August 3, 2015

பாலக்காடு அனுபவங்கள் - 1

இம்முறையும்  பாலக்காடு பயணம் எப்போதும் போல மனதுக்கு நிறைவாய் அமைந்தது. ஆகஸ்ட் ஒன்றாம்  தேதி போய்  இறங்கியதுமே குளித்து காப்பி குடித்து விட்டு காவசேரிக்கு  ஆட்டோவில் கிளம்பி விட்டோம்.  கர்கடக  மாசத்தில் பகவதியைத் தொழுதது மனதுக்கு நிறைவாக இருந்தது. என் கல்யாணம் ஆன புதிதில் என் மாமனார் மாமியார் என்று எல்லாரோடும் ஆண்டுக்கொரு முறை போவோம்.  அப்போதெல்லாம்  மிகச் சாதாரண நிலையில் இருந்த கோயில் இன்று நன்கு develop ஆகி விட்டது.  மாமனாருக்கு அங்கு  எல்லாரையும் தெரியும்.   எங்கள் வகையாக ஒவ்வொரு முறையும் பாயசம் தயாரிக்கச் சொல்வது வழக்கம்.

உள்  நடையிலேயே கருவறையின் பின்னால் பாயசம் தயாரிக்க ஒரு சின்ன இடம் உண்டு.  அரவணைப் பாயசம் என்பதால் மெதுவாகத்தான் தயாராகும். அதுவரை மாமனாரும் மற்றவர்களும் அங்குள்ளவர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். கோவில்  வளாகத்திற்கு  உள்ளே  வலப்பக்கமாய் கொஞ்சம் நடந்தால் ஒரு குளம் இருக்கும். அதில்  குளித்து விட்டு, கோவிலை ஒட்டி வெளிப் பிரகாரத்தில் இருக்கும் ஒரு அறையில் உடை மாற்றிக் கொண்டுதான் பகவதியைத் தொழுவதற்குச் செல்லுவோம்.  பாயசத்திற்கு ஒரு தூக்குப் பாத்திரமும் பாலக்காட்டிலிருந்து எடுத்துச் சென்று விடுவோம்.

காலை ஏழு மணிக்கு சென்றோமானால் அங்கிருந்து கிளம்ப  உச்சிப் பொழுதாகிவிடும். அதெல்லாம் அந்தக் காலம்.  என் கணவர் இருந்த வரை  நாங்கள் குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தோம்.  அவர் போன பிறகு நானும் பெண்களும்  வருடம் தவறாமல் செல்வோம்..  இப்போதெல்லாம்  பழைய முகங்களைக்  காண முடியவில்லை. ரெண்டு பெண்களும் கல்யாணமாகிச்  சென்று  விட்டதால்  இம்முறை இங்கிருந்து நான் மட்டுமே. என் சித்தி (என் மாமியாரின் தங்கை)  என்னோடு காவிற்கு வந்தார்.  கற்கடகம் என்பது இராமாயண மாசமும் கூட. உள்ளே மேடையில் இராமாயண உபன்யாசம் நடக்கத் தயாராகிக்கொண்டிருந்தது.  ராம நாமத்தையும் இராமாயண உபன்யாசத்தையும்  இந்த  கற்கடக மாதத்தில் எல்லா கோவிலிலுமே  கேட்க முடியும்.

பகவதிக்கு பாவாடை சார்த்தி,  எல்லார் பெயருக்கும் புஷ்பாஞ்சலி செய்து, மெய்மறந்து பகவதியின் முன்பு நின்று மானசீகமாய் உரையாடி விட்டு வருவது என்று என் வழிபாடு,  அன்றைய விஸ்தாரமான வழிபாட்டிலிருந்து  நிறையவே மாறி விட்டது.   எப்போதும் காவுக்கு செல்வது என்னை பரவசப்படுத்தி விடுகிறது. அத்தனை அழகும், சாந்தமும், அமைதியும் கொண்டவள் பரக்காட்டு பகவதி.

முன்பொரு காலத்தில்  தேவி மூகாசுரனை வதம் செய்ய முனைந்த போது அவனது ஒவ்வொரு ரத்தத் துளியிளிருந்தும் ஒவ்வொரு அசுரன் உருவாக, ஒவ்வொருவராக சம்ஹாரம் செய்திருக்கிறாள் பகவதி. அதில் ஒருவன் பெயர் "பர".   இந்தக் காட்டில்தான் அவனை வதம் செய்திருக்கிறாள். அதனால்தான் பரக்காட்டு பகவதி என்ற பெயர்.  முன்பு இவளிருந்தது பறச்சேரி என்ற ஸ்தலத்தில் அங்கு ஏதோ அதிருப்தி எழுந்ததால்                                                         அங்கிருந்த உன்னிக்குமாரத்து குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியிடம் தீப்பந்தம் வேண்டுமென்று கேட்டிருக்கிறாள்.  நெற்கதிர்களைக் கொண்டு  அந்தப் பெண் பந்தமொன்று கொளுத்திக் கொடுக்க, அதன் வெளிச்சத்தில் பகவதி இந்த பரக்காட்டுக்கு வந்து குடியேறியதாக சொல்லப்படுகிறது

அதிப்பேட்டு மாங்கோட்டு பகவதி இவளது சகோதரி.  எனவே மீன மாசத்தில் (மார்ச்-ஏப்ரல்) ஏழு நாட்கள் இந்த ஆலயம் பூட்டப்பட்டு , பரக்காட்டு பகவதி தன்  சகோதரி மாங்கோட்டு பகவதியிடம் அழைத்துச்செல்லப்படுகிறாள்.  ஏழு நாட்கள் இவள் தன்  சகோதரியோடு இருந்து விட்டு திரும்புகிறாள்.

(பாலக்காடு அனுபவங்கள் தொடரும்)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயணத்தை தொடர்கிறேன்....

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பயணக் கட்டுரை! தொடர்கிறேன்! குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்று தங்கி அங்கேயே உண்டு மாலை வேளையில் திரும்பி வருவதெல்லாம் ஓர் இனிமையான அனுபவம்.கட்டுரையின் ஆரம்ப பகுதிகள் இளவயதில் நாங்கள் அருகில் உள்ள பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு சென்றுவந்ததை நினைவு கூற வைத்தன. நன்றி!

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள் அம்மா... நாங்களும் தொடர்கிறோம்..