Monday, March 30, 2015

நானும் மயிலையும்

நான் பிறந்து வளர்ந்து இன்று வரை  வாழ்ந்து கொண்டிருப்பது மயிலையில்தான்.  நினைவு தெரிந்த நாளில் நான் கண்ட மயிலைக்கும், இன்று காணும் மயிலைக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்.  சுதந்திர நாட்டில் வளர்ச்சி தேவைதான் என்றாலும், அந்த பண்டைய அழகு அடியோடு அழிந்து விட்டதே என்ற ஆதங்கம் ஏற்படத்தான் செய்கிறது.  குளத்தை சுற்றிலும்  கடைகள் கிடையாது. தென்னை மரங்களைக்  காணலாம். குளக்கரை படியில்தான் ரெண்டு மாசத்துக்கொருதரம் அத்தை அம்பட்டனிடம் தலை மழித்துக்கொண்டு குளத்தில் ஸ்நானம் பண்ணுவாள்.  தலை பண்ணிக்கபோறேன் கூட வா என்று என்னை இழுத்துச் செல்வாள். அந்தக்  கொடுமையெல்லாம் புரியாத வயது அது.  நீ மட்டும் எதுக்கு மொட்டையடிச்சுக்கற  ஏன் நல்ல புடவை கட்டிக்கறதில்ல , சட்டை போட்டுக்கறதில்ல? என்று கேட்பேன். அத்தை பதில் சொல்ல மாட்டாள்.

இப்போது கோயிலைச்சுற்றியிருந்த பாரம்பரிய அழகுகள் எல்லாம்  அடியோடு அழிந்து விட்டது.  அழிக்கம்பி போட்ட திண்ணைகள் கொண்ட பெரிய பெரிய வீடுகள் எல்லாம் வியாபார ஸ்தலங்களாகி விட்டன.  இன்றைய அம்பிகா அப்பளம் கடை,  NAC,  சுக்ரா, விஜயா ஸ்டோர்ஸ் எல்லாம் அன்றைய அழகான  பெரிய வீடுகளிருந்த இடம். அந்த வீடுகளின் மாடியிலிருந்து தேர் இழுத்துச்செல்பவர்கள் மீது சிலீரென தண்ணீரை மோந்து மோந்து கொட்டுவார்கள்.

நள்ளிரவில் எழுந்து, அத்தையின் கை பிடித்து ரிஷப வாகனம் காணவும்,  வியர்க்க விறுவிறுக்க, தேரோட்டம்  காணவும்,  மூன்று மணி வெயிலில் 63 நாயன்மார்கள் அணிவகுத்து செல்வதை  தரிசிக்கவும், சென்றதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

மல்லிகை பூக்கும் காலம் இது.  எங்கள் குடும்பம் அப்போது பெரியது. அத்தை குடும்பங்கள் எல்லாம் அருகருகே வசித்த காலம்.  ஒரு படி மல்லிகை மொக்குகளை வாங்கி கூடத்தில் கொட்டி, பெரியத்தையும், சின்ன அத்தை பெண்களும், அம்மாவும், அக்காக்களும், தொடுப்பார்கள்.  சுவாமிக்கும் அம்பாளுக்கும் சார்த்த அப்பா வேட்டி புடவை வாங்கி தயாராக வைத்திருப்பார். ரெண்டு மணிக்கெல்லாம், ஒவ்வொருவராய் கிளம்பத்தயாராவார்கள்.  அத்தை பெண்ணோ அல்லது அக்காவோ எனக்கு ரெட்டைப் பின்னலிட, அத்தை அதில் பூவை சொருகுவாள்.  நல்ல பாவாடை சட்டை அணிவித்து என்னை தயார் செய்வாள் அக்கா.

மொத்த குடும்பமும் பேச்சும் சிரிப்புமாய்  கிளம்புவோம்.என்னை அத்தையின் கை கெட்டியாய் பிடித்துக் கொள்ளும்.  வீட்டில் எத்தனை பட்சணங்கள் இரைந்தாலும், அங்கே தள்ளுவண்டியில் தட்டு நிறைய அடுக்கி வைத்திருக்கும், கமர்கட்டுக்கு நாக்கு ஏங்கும். வாங்கித்தா என்று கேட்டால் அத்தை விழி உருட்டி முறைப்பாள்.  அதெல்லாம் சாப்டப்படாது. பேசாம வா கேட்டயா?  அவள் ஆசையாய்  வளையல் ரிப்பன்கள்,  சாந்துக் குப்பிகள்,  மணிமாலைகள் என்று வரிசையாய்  வாங்கித் தந்ததும்,  கமர்கட் மறந்து விடும்.

தாவணி அணிய ஆரம்பித்ததிலிருந்தே நான் திருவிழாக்களுக்கு செல்வதை விரும்பவில்லை.  அந்தக் கூட்டம் அலர்ஜியை ஏற்படுத்தியது.  தவிர வாசலில் உட்கார்ந்து வண்ண மயமாய் திருவிழாக்களுக்கு செல்லும் கூட்டத்தைப் பார்ப்பதே ஒரு சுவாரசியமாயிற்று.  ஆனால் பிக்ஷாண்டவர்  தரிசனம் மட்டும் இன்று வரை காணத் தவறியதில்லை   வருடம் முழுக்க நமக்கு படியளப்பவன் அன்று பிட்சை  பாத்திரம் ஏந்தி வளம் வருகிறான். அவன் பிச்சைப் பாத்திரத்தில் பணம் போடுவதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?  அதனால் அதை மட்டும் தவற விடுவதில்லை.


திருவிழாவுக்கு போகா விட்டாலும் அப்போதெல்லாம் திருவிழா  முடிந்து கோயிலில் கச்சேரி களை  கட்டும்  போது  மட்டும் தவறாமல் அத்தையோடு ஆஜராகி விடுவேன்.  பாதி கச்சேரியில் அத்தை போலாம் வாடி  என்று என்னை இழுக்கும் போது  முழுசும் கேட்டுட்டு போலாம் அத்தை என்று கெஞ்சுவேன்.  நாளைக்கு வேலை இருக்குடி, ஏந்துர்க்கணும் வா போலாம் என்று இழுத்துக் கொண்டு செல்வாள்.

ஆனால் ஒருவரது  கச்சேரிக்கு மட்டும் அப்பாவைத்தவிர அத்தனை பேரும் முன்னாலேயே போய்  இடம்பிடித்து உட்கார்ந்து விடுவோம்.  கச்சேரி முடியும் வரை அசங்க மாட்டோம்.  அன்று கோவிலில் எள்ளு போட்டால் கீழே விழாது.  நவக்கிரக சந்நிதி ஆரம்பித்து முன்னால்  இருக்கும் சந்நிதிகளின் மேலே எல்லாம்  சிவகணங்கள் மாதிரி ஏறி அமர்ந்திருக்கும் வாலிபர்களின் கூட்டம்.  அந்த பாடகர் வெண்கலக்குரல் மன்னன் சீர்காழி கோவிந்தராஜன்.  தனி வாசிப்பின் போது கடம் வாசிப்பவர் கடத்தை  ரெண்டு முறை தூக்கிப் போட்டு பிடிப்பார் பாருங்கள், கரகோஷம் அள்ளும்.


அப்போதெல்லாம் அறுபத்திமூவரன்று மிஞ்சிப்போனால் நீர் மோர் கொடுப்பார்கள் பார்த்திருக்கிறேன். பிறகு ரோஸ்  மில்க் அதோடு சேர்ந்து கொண்டது. அதன் பிறகு, சாம்பார் சாதம், தயிர்சாதம் சர்க்கரைப் பொங்கல் என்று விநியோகித்தார்கள்.  இப்போது பிரிஞ்சி பிரியாணி என்று  பட்டை லவங்க  வாசனை மயிலை முழுக்க காற்றில் பரவி வருகிறது. பசிக்கு உண்டது போய்  ருசிக்கு உண்ணும் கூட்டம் அதிகரித்து விட்டது.  தேவையோ தேவையில்லையோ கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, பாதி தின்று, மீதியை வீதி எல்லாம் எறிந்து, கால் வைக்கும் இடமெல்லாம்  அன்று அன்னம்தான். மகா வேதனையாய்  இருக்கும்.

இதோ இப்போது திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.  அத்தையின் நினைவு வருகிறது. அவள் காட்டிய பாசமெல்லாம் நினைவுக்கு வருகிறது. அவளது விரல் ஸ்பரிசத்திற்கு மனசு ஏங்குகிறது. "பைத்தாரி நீயே பாட்டி ஆயாச்சு இன்னும்  என் கையைப் பிடிச்சுப்பயாக்கும்?"  அத்தை கெக்கலிப்பது கேட்கிறது. எனவே,  ஏற்கனவே கண்டதை எல்லாம் மனசில் நிறுத்தி மானசீகமாய் தரிசித்து திருப்திப் பட்டுக் கொள்கிறேன்.

இப்போதெல்லாம்  கோவிலுக்கருகில் சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்குள் நம் சக்தியெல்லாம் வடிந்து விட்டாற்போல் ஆயாசமேற்படுகிறது.  அத்தனை டிராபிக்,  நெரிசல், சத்தம், நடப்பவர்க்கு வழியற்ற பாதுகாப்பற்ற சூழல்.

கீழே  நடைபாதை கடைகளற்ற அழகான அமைதியான மயிலை தெப்பக்குளம்.



9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
உண்மைதான் காலங்கள் மாற மாற ஊர்களின் தோற்றம் மாறிவிடுவது உண்மைதான் ஊரின் நினைவை மீட்டுப்பார்த்த விதம் சிறப்பு...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்றைய அமைதியையும் இன்றைய ஆர்பாட்டங்களையும் வெகு அழகாக தங்களுக்கே உரித்தான தனி எழுத்துத் திறமையுடன் சிலாகித்து எழுதியுள்ளீர்கள்.

மிகவும் பசுமையான இனிய நினைவலைகள் !

படிக்கப்படிக்க மிகவும் பரவசமாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் மனதை பரவசமூட்டின...

ADHI VENKAT said...

மயிலையின் அன்றைய அழகை உங்கள் கையை பிடித்துக் கொண்டு நின்று கண்கள் விரிய பார்த்தது போல் உள்ளது மேம்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ரூபன்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி வைகோ சார்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி, திண்டுகல் தனபாலன், ஆதி வெங்கட்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.