Thursday, November 27, 2014

lலூர்து மேரி - பகுதி 1

நேற்று அபிராமபுரத்திலிருந்து  நடந்து வரும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. அந்த நேரம் எனக்கு லூர்து மேரியின் நினைவு வந்தது. அந்த காட்சி என்ன என்பதை  கடைசியில் சொல்கிறேன். முதலில் லூர்து மேரியைப் பற்றி.

நான்  ஏழாவது வகுப்பில் படிக்கும்போது.  அவள் புது அட்மிஷனாக வந்து சேர்ந்தாள்.    நான் கடைசி பெஞ்ச்.   லூர்து மேரியை  எனக்கு துணையாக என் பக்கத்தில் உட்காரச்சொல்லி அனுப்பினார் டீச்சர்.  இந்திராகாந்தி மாதிரி நீண்டு கூர்மையான மூக்கு, சின்ன கண்கள், மெலிந்த தேகம்,   குச்சி குச்சியாய் ரெட்டை சடை.  டக் டக்கென்று  செருப்புகள் சப்திக்க என்னருகில் வந்து உட்கார்ந்தாள்.   ஆரம்பத்தில் சட்டென்று பேச ஒரு தயக்கம்.   அவளும் பேசவில்லை. நானும் பேசவில்லை.    பிறகு மெதுவாக பேரென்ன என்றேன். என்னை முறைத்து பார்த்து விட்டு லூர்து மேரி என்றாள்.  என் பேர் உஷா என்றேன் அவள் கேட்காமலே.   இதுக்கு முன்னாடி எங்க படிச்ச? எனது அடுத்த கேள்வி இது.   அதற்கு அவள் சொன்ன பதில் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. என்ன சொன்ன?    மறுபடியும் கேட்டேன். அவள்  மீண்டும் அதைத் திரும்பச் சொன்ன போது அது நிச்சயமாகத் தமிழ் மொழி இல்லை என்பது புரிந்தது.  இது என்ன மொழி என்று கேட்டாலும் அவள் சொல்லப் போகும் பதில் எனக்கு புரியுமா என்பது சந்தேகம்.

ஏற்கனவே என் நெருங்கின சிநேகிதியையும் என்னையும்  சேர்ந்து உட்கார விடாத வருத்தத்தில் இருந்த எனக்கு இப்படி பாஷை தெரியாத பெண் வேறு பக்கத்தில் வந்து  படுத்த வேண்டுமா என்ற வருத்தம் கூடியது.   லஞ்ச் நேரம்  எல்லாரும் சாப்பிடப் போன போது எங்கள் பேச்சு முழுக்க லூர்து மேரியைப் பற்றிதான்.   சில சி.ஐ.டி. சிங்கங்கள் அவளைப் பற்றி அத்தனை  தகவல்களையும் எப்படியோ கண்டு பிடித்திருந்தனர்.

அவ வெளியூராம்.  மலாயா  பக்கமாம்.   தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியுமாம். அவ நல்லா  தமிழ் கத்துக்கணும்னுதான் இங்க வந்து தமிழ் மீடியத்துல சேர்த்து விட்டுட்டாராம் அவங்கப்பா. ஹாஸ்டல்லதான் இருப்பாளாம்.  இங்கிலீஷ் ஓரளவுக்கு பேசுவாளாம்.

சரிதான். என் நேரம் சரியில்லைதான் போலருக்கு என்று நான் நொந்து போனேன். அவளுக்கு தமிழ் வராது என்பதை விட அவள் ஆங்கிலம் தெரிந்தவள் என்பதுதான் என் கவலைக்கு காரணம்.  நமக்கு  ஆங்கில அட்சராப்பியாசம் ஆரம்பித்ததே  ஐந்தாம் வகுப்பில்தான்.  அதனால் அவள் என்னிடம் ஆங்கிலத்தில் ஏதாவது பேசி விடப் போகிறாளோ என்று எனக்கு தொடை நடுங்கியது. இனி அவள் பக்கம் திரும்பவே கூடாது என்ற முடிவோடு லஞ்ச் முடித்து வந்து அமர்ந்தேன்.

வகுப்பு ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் லூர்து மேரி திடீரென்று  எழுந்து "பண்ணா  பண்ணா  என்று அலறினாள். டீச்சர் தூக்கி வாரிப்போட போர்டிலிருந்து தலையைத்திருப்பிப் பார்த்தாள். "பண்ணா பண்ணா"  அவள் மீண்டும் கத்த டீ ச்சர் என்னைப் பார்த்தாள் . "

"ஏய் உஷா என்ன பண்ண அவள? "

"அய்யோ நா ஒண்ணும்  பண்ணல டீச்சர்! "

டீச்சர் லூர்து மேரியைப் பார்த்து என்ன என்பது போல்  செய்கையால் கேட்டாள்

லூர்து மே ரிக்கு முகம் சிவந்தது. கீழே குனிந்தவள் என்  காலிலிருந்த செருப்பைக் கழட்டி  கண்ணகி சிலம்பைப் பிடித்திருப்பது மாதிரி  தூக்கி வைத்துக்  கொள்ள  மொத்த வகுப்பும் அவள் என்னை அடிக்கப் போகிறாளா அல்லது டீச்சரையா  என்று மிரண்டு   போ ய் பார்த்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.  நானோ பயத்தில் சர்வ நாடியும் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தேன்.

லூர்து மேரி அடுத்த கணம் என் செருப்பை கீழே போட்டு விட்டு வேகமாய் நடந்தாள் . டீச்சரிடம் ஏதோ செய்கை செய்து விட்டு  வகுப்புக்கு வெளியில் ஓடினாள்  அவள் திரும்பி வந்த போது அவள் கையில் அவளது செருப்புகள். அதை டீச்சரிடம் காட்டி " பண்ணா" என்ற படி தன்  காலில் அணிந்து கொண்டு சிரித்த படி வந்து உட்கார்ந்தாள் . அப்புறம்தான் புரிந்தது செருப்புக்கு அவளது பாஷையில் பண்ணா என்று பெயர் என்பது.  சாப்பிட்டு வரும்போது  செருப்பை அணிய மறந்து வந்திருக்கிறாள். அதற்குதான் இத்தனை அமர்க்களம்.

அதற்குப்பிறகு எங்கள் செருப்புகளும் பண்ணா என்றே  பெயர் பெற்றன

அபிராமபுரத்தில் என்ன பார்த்தேன் என்று சொல்லி விடுகிறேன். ஒரு பெண்மணி குழந்தையோடு சென்று கொண்டிருக்க அவள் இடுப்பிலிருந்த ஒரு ரெண்டு வயது குழந்தை திடீரென்று அழுதது. இவள் ஏன்  அழறடி செல்லம் அது இது என்று கேட்க அந்த குழந்தை மழலையில் இப்பல்  இப்பல் என்று சொல்ல அந்த பெண்மணிக்கு அது என்ன சொல்கிறதென்று புரியவேயில்லை. நான் தயங்கி தயங்கி அவர்களருகில் கைப்பையில் எதையோ எடுப்பது  போல் நின்று கவனித்தேன்.

குழந்தை அவள் இடுப்பை விட்டு இறங்கி தன காலை தூக்கி தூக்கி காட்டியது. அப்போதும் புரியவில்லை. அதற்கு வந்ததே கோபம், அந்த  பெண்ணின் செருப்பை பிடித்து இழுத்து "இப்பல்ல்ல் .." என்று கத்தியது.

ஒ உன் செப்பல் போட்டுக்கலையா என்று அந்த பெண்மணிக்கு அப்போதுதான் புரிய  அவள் மீண்டும் வீடு நோக்கி திரும்பிச் செல்ல எனக்கு லூர்து மேரியின் நினைவு வந்தது.

அவளைப்பற்றி இன்னொரு சுவாரசியமான சம்பவமும் அடுத்த பதிவில் எழுதுகிறேன். லூர்து மேரியை நினைவு படுத்தின குழந்தைக்கு நன்றி.


    

1 comment:

RajalakshmiParamasivam said...

பண்ணா என்றால் செருப்பு . ஆனால் எந்த மொழியில் என்று நீங்கள் சொல்லவில்லையே. அடுத்தப் பகுதிப் படிக்க விரைகிறேன்.