Wednesday, November 26, 2014

மூக்குத்தி - பகுதி - 2

மூக்குத்தி  - II

எனக்கு அப்போது ஆறேழு வயசிருக்கும்.  பூம்புகார் என்னும் படம்  வெளியான நேரம்.  என் அத்தை பெண்கள்,  என் பெரியக்கா எல்லோரும் கிளம்பும் போது   நானும் வருவேன் என்று உடும்புப் பிடியாய் சுகுணாவின் காலைக் கட்டிக் கொண்டேன்.  

நீ தூங்குவ அங்க வந்து  

மாட்டேன் நா வருவேன். 

சமத்தோல்யோ   நா வரச்சே நோக்கு முட்டாய்  வாங்கிண்டு வரேன்.  

வேண்டாம் நா வருவேன்.  நா அழுது ஆர்ப்பாட்டம் பண்ண,   வேறு வழியின்றி என்னை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.  இல்லா விட்டால் அவர்கள்  போவதும் கேட்டு விடுமே என்ற பயம்தான். 

சாந்தி தியேட்டர் என நினைக்கிறேன்,.  நான் சுகுணாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். சொன்னாற்போல் பாதிப் படத்தில் தூங்க ஆரம்பித்து விட்டேன். 

எவ்வளவு நேரம் தூங்கினேனோ   திடீரென்று ஏதோ பெரும் சப்தம் கேட்க  நான்  திடுக்கிட்டு எழுந்த வேகத்தில் என்ன நடந்ததோ   திரையில்  விரித்த கூந்தலும் விழித்த கண்களுமாய்   கையில் சிலம்போடு விஜயகுமாரி நின்றிருக்க,  இங்கே சுகுணா  மூக்கைப் பொத்தியபடி  என்னை முறைத்து பார்த்தபடி கண் கலங்க நின்றிருந்தாள்

விஜயகுமாரி ஆவேசமாக பேசிய பேச்சில் பயந்து போய்   நான் அலறிக் கொண்டு எழுந்த வேகத்தில் என் கை சுகுணாவின் மூக்கில்  வேகமாய் மோத   அவளது முக்குட்டி டைப் மூக்குத்தி  சதையைப் பிய்த்துக் கொண்டு தொங்க மூக்கிலிருந்து ரத்தமாய் வழிய  சுகுணா இன்னொரு கண்ணகியாய்  நின்றிருந்தால்.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.   

கடங்காரி   என்னடி பண்ணின?  என் அக்கா கத்த   அக்கம் பக்கம் பரபரக்க பிறகென்ன கர்ச்சீப்பை மூக்கில் அழுத்தி வைத்துக் கொண்டு   படம் முடிவதற்கு முன் என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.   வழி முழுக்க அவர்கள் திட்ட,  நான் அழ,   போனாப் போட்டும் விடுடி என்று சுகுணாவே சொல்ல,  நல்ல காலம் பெரிய ஆபத்தொன்றுமில்லை என்று மூக்கில் பாலை வார்த்தார் டாக்டர்.  

 கொஞ்ச நாளில் மூக்கு சரியாகி விட்டது.  அதற்குப் பிறகும் என்னைப்  பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொள்வாள் சுகுணா. இனிமே உன்னைக் கூட்டிண்டு சினிமா போறேனா பார் என்பாள். அதற்குப் பிறகு  அவளோடு  கபாலி தியேட்டரில் நான் பார்த்த படம் சிவந்த மண்.   நான்  நன்கு வளர்ந்து விட்டாலும் கூட,  நீ இந்த பக்கமவே  உக்கந்துக்கோடி தாயே என்று மூக்குத்தி இல்லாத,  தனது  இடப்பக்கம்தான் என்னை அமர்த்திக் கொண்டாள். 

இன்று வரை என்னால் மறக்க முடியாத சம்பவம் இது.  இப்போதும் பூம்புகார் படப்  பாட்டு கேட்டால் கூட அதை நினைத்து சிரிப்பேன். 
                                         ******************************
என் பத்து வயதில் நடந்த சம்பவம் இது.,   எண்ணை  தேய்த்து குளிப்பதற்காக  என் பெரியக்கா  தன மூக்குத்தியை  கழட்டி கூடத்தில் இருந்த சின்ன மர  ஷெல்பில்  வைக்க, அவள் அந்தப் பக்கம் போனதும் நான் அதை எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு விஷமத்தனம் பண்ணுவதாக நினைத்து அதை  ஒரு சின்ன டப்பியில் போட்டு வேறொரு இடத்தில் மறைத்து வைத்தேன்.   நான் ஸ்கூலுக்கும் போயாகி விட்டது.


சாயங்காலம் வரும் போது வீடு களேபாரமாக இருந்தது.   என்னாச்சு?   நான் மெதுவாக என் சின்னக்காவிடம் கேட்க   நீ பாத்தயாடி அவ மூக்குத்திய என்றாள்.   எனக்கு சுரீரென்றிருந்தது.   என் அப்பா என் அம்மாவை உச்சஸ்தாயியில்  திட்டிக் கொண்டிருந்தார்.  சவத்தெழவுகள்!, கொரங்கெழவுகள்  கொஞ்சமானும் பொறுப்பிருக்கா பாரு !   எனக்கு பயத்தில் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது.  நான்தான் எடுத்து வைத்தேன் என்று எப்படி சொல்ல? அதே சமயம் இன்னொரு பிரச்சனையும் கூட.  நான் அதை ஒரு டப்பியில் போட்டது மட்டும் நினைவிருக்கிறது. எங்கே வைத்தேன் என்பது நினைவுக்கு வரவில்லை. தவிர மொத்த வீடும்  கலைந்து கிடந்தது.   எனக்குத் தெரியாது  நான் அவசரமாய் தலையாட்டினேன். 

 நானும் எல்லோரோடும் சேர்ந்து மூக்குத்தியைத் தேடினேன்.   டாய்லெட் குழியில்கூட கொட்டாங்குச்சி கரண்டி கொண்டு தேடினாள்  வேலைக்காரி. அன்று முழுக்க என் அம்மாவும் அக்காவும் சாப்பிடாமல் அழுது சிவந்த மூக்கோடு   அசோக வனத்து சீதை மாதிரி அடுக்களையில் சோகமே உருவாய் அமர்ந்திருந்தார்கள்.   

எனக்கு மட்டும் குறுகுறுப்பு.  மூக்குத்திய   எடுத்தேன்....... டப்பில போட்டேன்.   டப்பிய   எங்க வெச்சேன்?   நடுவுல கொஞ்சம் என் பக்கங்கள் காணாமல் போனது அக்காவின் துரதிருஷ்டம்.     அப்படி ஒரு ஞாபக மறதி  உண்டு எனக்கு.  (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்?)   ஒரு வாரம் என் அப்பாவின் கோவத்தோடு நகர்ந்தது. வீட்டில் யாரும் யாரோடும் பேசுவதற்கே பயந்தார்கள்.     துணி மடித்து வைக்கும்  ஷெல்பில்  நான்சட்டை ஒன்று தேடுவதற்காக  முனைந்த போது என் கையில் தட்டுப் பட்டது மூக்குத்தி டப்பி. 
சந்தோஷத்தோடு பயமும் ஏற்பட்டது. நான்தான் வைத்தேன் என்பது தெரிந்தால்  முதுகு பழுத்து விடும்.  

 நான் மெல்ல டப்பியிலிருந்து மூக்குத்தியை எடுத்து டப்பியை மறைத்து விட்டேன்.  மூக்குத்தியைக் கீழே நழுவ விட்டேன். பிறகு கண்கள் பளிச்சிட அய்   மூக்குத்தி என்று குரல் கொடுத்தேன். மொத்த வீடும் பரபரப்பாய்  வந்தது. என் அக்காவின் முகத்தில் சந்தோஷம்.    இருந்தாலும் இதெப்டி இங்க வந்தது என்றாள்.  என்னைக் கேட்டா?    நான் சமாளித்தேன்.  எப்படியோ மூக்குத்தி கிடைத்து விட்ட நிம்மதியில் என் அப்பாவின் கோபமும் குறைந்தது. இதெல்லாம் அறியாத வயதில் செய்யும் குறும்புகள்.  இந்த பதிவைப் படித்தால் என் அக்காவுக்கும் அம்மாவுக்கும் மூக்குத்தி மர்மம் விளங்கும்.  சிரிப்பார்கள் என நம்புகிறேன். . 

                                                      ***********************

இப்போதெல்லாம்  இளசுகள் மூக்கு குத்திக் கொள்ள விரும்புவதில்லை.  என் பெண்கள் மூக்கு குத்திக் கொள்ளவில்லை.   என் பக்கத்து வீட்டு  சாஸ்திரிகள் வீட்டு பெண் வித்யாவிடம் ஒரு நாள் கேட்டது. அதற்கு நாலு வயசிலேயே மூக்கு குத்தியாகி விட்டது. 

"வித்யாக்கா  நீ ஏன் மூக்கு குத்திக்கல?"

"எதுக்குடி குத்திக்கணும்?" 

"அப்பறம் உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா?" 

                                                           ***********************

கவிதாவின்  மூக்கு புரொபைலில் அழகாக இருக்கும்.    அவளுக்கு மூக்கு குத்தினால்  அழகாயிருக்கும்.   அவள் நா குத்திக்க மாட்டேன் எனறாள். ஆனால் கல்யாணத்தின் போது அவள் மூக்கில் ஒற்றை கல் வைத்த ஒட்டும் பொட்டு ஒன்று ஒட்டி விட்ட போது அவளுக்கு அது வெகு அழகாயிருந்தது.   போட்டோவில் மூக்கு குத்தினாற்  போலவே இருக்கும்.  

மூக்குத்தி பற்றி ஆராய்ந்தால் நிறைய தகவல்கள்  இருக்கிறது.  அது நரம்பைத் தூண்டி விடும்.    தங்க மூக்குத்தி உடலில் உள்ள வெப்பத்தையும் நரம்பு மண்டலத்தில் உள்ள  கெட்ட வாயுவையும்  வெளியேற்றும். விஞ்ஞான  ரீதியாய் நிறைய நன்மைகளை நமக்கு தருகிறது. மூக்கு குத்தின பெண்களை யாராலும் மெஸ்மரைஸ்  பண்ண முடியாதாம்.   பொதுவாக வயதுக்கு வந்த பின் தான் மூக்கு குத்த வேண்டுமாம். ஏனெனில் பருவமடைந்த பெண்களுக்கு கபாலத்தில்  ஒரு வித வாயு சேருமாம்.  மூக்கில் ஒரு துளை  போட்டு மூக்குத்தி அணிந்தால்  அந்த வாயு வெளியேறுமாம்.

தவிர ஒற்றைத் தலைவலி, மனத்தடுமாற்றம் இதையும் குறைக்கிறதாம் மூக்குத்தி அணிவது. மூக்குத்தியை வலது மூக்கில் அணிவதை விட இடது பக்கம் அணிவதுதான் நல்லதாம். பெண்களுக்கு இடப்பக்கமும் ஆண்களுக்கு வலப்பக்கமும் இயற்கையிலேயே பலம் மிகுந்ததாக இருப்பதுதான் இதற்கு காரணம். அர்த்தநாரீஸ்வர  தோற்றத்தில் உமைக்கு இடப்பாகம்தான் தந்திருக்கிறான் ஈசன் என்பதில் நிறைய அர்த்தம் இருக்கிறது.

மூக்குத்தி என்பதே 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்த அணிகலன் என்கிறது விக்கிபீடியா. அதற்கு முந்தைய நூற்றாண்டு சிற்பங்களில் மூக்குத்தி கிடையாதாம்.   தமிழர் அணிகலன்களிலும்  காதணி, கழுத்தணி, இடுப்பணி, காலணி,  தலையணி  என்று  உள்ளதே தவிர மூக்கணி  பற்றி சொல்லப் படவில்லை.   எனவே அது பிற்பாடு   அதன் நன்மை கண்டறியப்பட்ட பின் தோன்றிய நாகரிகமாக இருக்கலாம்.    

வட இந்தியாவில் மூக்குத்தியை "நத்"  என்கிறார்கள் பொதுவாக.  ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது மூக்குத்திக்கு.   விதம் விதமாய் நிறைய வகை மூக்குத்திகள் இருக்கின்றன.  "எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு"  என்று  எதிர் நீச்சலில் சௌகார் பாடுவது  போல் நிறைய பேருக்கு அது அழகுதான்.  ஒரு கல் மேலேயும்  இரண்டு முதல் மூன்று கற்கள் அதற்கு கீழேயும் வைத்த முக்குட்டி,  நாலு கல் மூக்குத்தி   என்றும் உண்டு. வட்டமாய் வைத்த கற்களும் உண்டு.   மூக்கு வளையமும்  இப்போது நாகரீகம்.  வட இந்தியாவில் வளையத்திலிருந்து காது வரை ஒரு செயின் கோர்க்கப் பட்டு நெற்றிப் பட்டை நகையோடு இணைந்திருக்கும்.    பழங்குடி மக்களின் மூக்குத்தி  அவர்களைப் போலவே  பழமையின் சின்னமாக இருக்கும்.

ஆண்  குழந்தைகளுக்குக் கூட மூக்கு குத்தும் வழக்கம் நிறைய ஊர்களில் இருந்திருக்கிறது.  நரிக்குறவ ஆண்கள் மூக்கில் வளையம் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் நான்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் போட்டி நடனத்தில் பத்மினியின் அந்த அழகு மூக்குத்தி அவர் முகத்தில் அத்தனை அழகாயிருக்கும்.  தில்லானா  மோகனாம்பாளில் மூக்குத்தி வளயமும், புல்லாக்குமாய்  அழகு சொட்டுவார். 

சங்கராபரணம்  படத்தில் மஞ்சு பார்கவி  அணிந்திருந்த பெரிய முக்கோணம் போன்ற கல் வைத்த மூக்குத்தியில் அவர் வெகு அழகாய்த் தெரிவார்.   "வேதம் புதிது"  படத்தில் அமலாவின் அழகு மூக்கில் அந்த பேசரி அவாளவு அழகாய் இருக்கும்.  ஸ்ரீதேவி மூக்குத்தி பற்றி சொல்லவே வேண்டாம்.   அந்த மூக்குத்திக்கே அவர் பேர் வைக்கப் பட்ட அளவுக்கு பிரபலமாயிற்று.

சிகப்பு கல்லு மூக்குத்தி,    மாணிக்க மூக்குத்தி,  மூக்குத்தி பூ மேலே என்று   சினிமா பாடல்களும் மூக்குத்தி பற்றி இருக்கின்றன.

கீழே உள்ள படங்களை நிதானமாக ரசித்துப் பாருங்கள்.  எத்தனை வகை மூக்குத்திகள்!.  இன்னும் கூட இருக்கின்றன.   கடைசி படம் "பொ ட்டு" மூக் குத்தியோடு  கவிதா 

இருந்தாலும்  மூக்குத்தி என்றால் உடனே மனக்கண்ணில் தோன்றுவது தெய்வீகமான இரண்டு முகங்கள்தான்.  ஒன்று கன்யாகுமரி  பகவதி அம்மன், மற்றொருவர்   எம்.எஸ். சுப்புலட்சுமி.  அந்த முகங்களின் தெய்வீகத்தால்  அந்த மூக்குத்திகள்  ஜொலிக்கிறதா அல்லது அந்த மூக்குத்தியின் அபூர்வ வைரங்களால் அவர்கள் முகம் ஜொலிக்கிறதா என்பது புரியாத புதிர்.












5 comments:

'பரிவை' சே.குமார் said...

மூக்குத்தியில் உங்க குறும்பும்...
அது குறித்த பகிர்வும் படங்களும் அருமை அம்மா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
பகுதி இரண்டை படைத்த போது மூக்குத்தியின் தோற்றம் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் அறியக்கிடைத்து பகிர்வுக்கு நன்றி
எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மனோ சாமிநாதன் said...

மூக்குத்தி மிகச் சிறிய பொருள். ஆனால் அதற்குள் எத்தனை எத்தனை கதைகள்! அத்தனையும் சுவாரஸ்யமாக இருந்தன!

நலமாக இருக்கிறீர்களா வித்யா?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி குமார், நன்றி ரூபன்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மனோ நான் நலம். நீங்களும் நலமே என்று எண்ணுகிறேன்.