பரிசளிப்பு விழா முடிந்து வெளியில் அவர் தன் குடும்பத்தாருடன் நின்று பேசிக்கொண்டிருக்க, என கணவர் என்னையும் அழைத்துக் கொண்டு நேராக அவரருகில் சென்றார். என மனைவி உங்கள் தீவீர வாசகி என்று என்னை அறிமுகப்படுத்த, அவர் என்னை ஏறிட்டு பார்த்தார். "நீ சிறுகதைக்காக பரிசு வாங்கினாய் அல்லவா?" என்றார். ஆமாம் என்றேன்.
தன் மனைவிகளை எனக்கு அறிமுகப் படுத்தினார். பிறகு முடிந்தால் நீ வீட்டுக்கு வாயேன், நாம் நிறைய பேசுவோம் என்றார். என் கணவரிடம். விலாசமும் சொன்னார். வரும் முன் போன் பண்ணி விட்டு வா என்றார்.
அடுத்து வந்த விடுமுறை நாளில் போன் பண்ணி விட்டு கிளம்பினேன்.
என் கணவர் அவர் வீட்டின் காம்பசில் விட்டு விட்டு நீ போய் பேசி விட்டு வா. நான் சற்று பொறுத்து வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார். கமலாவும் சாந்தாவும் புன்னகையோடு என்னை வரவேற்று அமர வைக்க, சற்று பொறுத்து வந்தார் பாலா. கூரை வேயப்பட்ட மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். மெர்க்குரிப் பூக்களில் துவங்கி அதுவரை அவர் எழுதியிருந்தவை அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எழுத்துலகில் பிரவேசித்திருந்த எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்.
மூன்று மணி நேரப் பொழுது மூன்று நிமிடம் போல் கரைந்திருந்தது. நான் விடை பெற்று கிளம்பினேன். எப்படி போவாய்.? இது அவர் கேள்வி.
என்னவர் காத்திருப்பார் - இது என் பதில். அவர் கண்கள் விரிந்தது. அவர் வந்திருக்கிறாரா? சொல்லவே இல்லையே,. என்ன பெண் நீ. அவரையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமே என்றார். இவ்வளவு நேரம் அவரால் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது. என்றேன். நீளவாக்கில் செல்லும் காம்பவுண்டு அது. என்னோடு துணைக்கு வந்தார். கேட் அருகில் நின்றிருந்தார் என்னவர். ச்சே என்ன மாதிரி ஒரு ஆம்படையான் உனக்கு! இப்டி ஒருத்தனை நா பார்த்ததே இல்லை என்று நெகிழ்ந்தார் என் கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு.
அன்று துவங்கியது எங்கள் நட்பு. ஒரு நாள் காலை அவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஒரு பக்கம் சமையல், குழந்தைகளை ஸ்கூலுக்கு கிளப்பும் படலம், ஜன்னல் திட்டில் கிடைக்கும் கேப்பில் நான் எழுதிக்க் கொண்டிருந்த கதை பேப்பர்கள், என்று அமர்க்க்களமாக இருந்தது, குழந்தைகள் ஸ்கூலுக்கு போகும் வரை பொறுமையாய் காத்திருந்தார். பிறகு அரைமணி நேரம் தான் அடுத்து எழுதப் போகும் நாவல் குறித்து பேசி விட்டு கிளம்பினார்.
என் வீட்டு விசேஷங்களுக்கு நான் அவரை அழைப்பதும், அவர் வீட்டு விசேஷங்களுக்கு அவர் எங்களை அழைப்பதும் வாடிக்கையாயிற்று. ஆரம்பத்தில் இருந்த பயமெல்லாம் போய் இலக்கிய தர்க்கம் அதிகரித்தது. சிலநேரம் அது சண்டை போல் தோன்றும் மற்றவர்களுக்கு, என் கதையில் நான் காப்பி தம்ளர்கள் நிறைய அலம்புகிறேன் என்று கிண்டல் செய்வார். கோபமாக வரும். பிறகு என் கதையை படித்து பார்த்த போது அது உண்மைதான் என்று தோன்றியது. மாற்றிக் கொண்டேன். பாலகுமாரன் கிண்டல் செய்யாத அளவுக்கு வெகு ஜாக்கிரதையாக எழுத ஆரம்பித்தேன்.
நட்பு என்பது வெறும் காப்பி சாப்பிட்டு விட்டு பேசி விட்டுப் போவது மட்டுமல்ல என்பதை அவர் பல முறை எனக்குப் புரிய வைத்திருக்கிறார்.
ஒருசமயம் என் அக்காவுக்கு நான் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. என்னிடம் பணமில்லை. நகையை ஏதாவது வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக வந்தார் பாலா. என் முகத்தை பார்த்து விட்டு ஏதாவது பிரச்சனையா என்றார். ஒனறும் இல்லை என்றேன் முகத்தை பார்த்தா அப்டி தெரியலையே. . என்ன சுப்ரமணியம் நீங்கதான் சொல்றது என்றதும் வேறு வழியின்றி பணத்தேவை குறித்து சொன்னோம். அவ்ளோதானே எங்கிட்ட கேட்டா நா தர மாட்டேனா என்றார். எங்களுக்கு கடன் வாங்கி பழக்கமே இல்லை என்றார் என் கணவர். எனக்கும் உங்களுக்கும் நடூல எதுக்கு அவ்ளோ பெரிய வார்த்தை எல்லாம் என்றவர் உடனே கிளம்பினார் தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு கவரில் பணத்தோடு வந்தார். இந்தா. இதை நான் எப்போ திருப்பி கேட்கிறேனோ அப்போது கொடுத்தால போதும் என்றார். இல்லை என் புராவிடன்ட் பண்டு லோன் போட்டு பத்து நாள்ல குடுத்துடறேன் என்றார் என் கணவர். அதேபோல் பணத்தை திருப்பி கொடுத்த போது, வேற ஏதாவது கடன் இருந்தா இதை வைத்து அதை அடை. எனக்கு வேண்டும் என்கிற போது நானே கேட்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விட்டார். வேறு கடன் எதுவும் இல்லாத நிலையில் பணத்தை அப்படியே வங்கியில் போட்டு விட்டு வந்தார் என் கணவர். ஆறு மாதம் கழித்து பணம் குறித்து நான் நினைவு படுத்த, சரி சுமையா இருந்தா கொடுத்து விடு என்று சொல்லி வாங்கிச் சென்றார்.
மற்றொரு முறை சமூக நலத்துறைக்கு துறை மாற்றம் செய்யப்பட்ட எனக்கு சமூக நலத்துறையில் பணியிடம் வழங்கவேயில்லை. லீவுல இருக்கயா நீ என்றார் என்னிடம். நான் விஷயத்தைச் சொன்னேன். உங்க துறைக்கு யார் செயலர் என்றார். நான் சொன்னேன். அட இவரா. எனக்கு நல்லா தெரியுமே. அவரைப் போய்ப் பார்க்கலாம் நாளைக்கு என்றார். அவரே அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் போனில் பேசி நேரம் வாங்கி, மறுநாள் என்னை அழைத்துச் சென்றார். ஆறுமாதம் நான் அலையாய் அலைந்தபோதும் நடக்காத விஷயம் அரைமணியில் மேஜிக் மாதிரி நடந்தது, அடுத்த நாள் நான் பணியில் சேர்ந்தேன். இப்படி சின்னதும் பெரிதுமாக கேட்டும் கேட்காமலும் செய்த உதவிகள் கணக்கற்றவை.
எனது முதல் நாவல் பதிப்பகம் மூலம் புத்தக வடிவில் வெளி வந்தது அவர் தயவால்தான். அந்தப் புத்தகத்திற்கு அவரே முன்னுரையும் எழுதிக் கொடுத்தார். அவருடைய மிகச் சிறந்த சில புத்தகங்களுக்கு என்னை முன்னுரை எழுதவைத்ததார். முன்னுரை என்பது எப்படி எழுதப் பட வேண்டும் என்பதை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.
இதையெல்லாம் விட மிகப் பெரிய உதவியை ஒரு நண்பராக எனக்கு செய்திருக்கிறார். என் கணவருக்கு ஒரு மேஜர் அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. கழுத்து வழியே மூளைக்கு செல்லும் தமனியில் கொழுப்பு அடைத்துக் கொண்டதால் பக்கவாதம் வந்திருந்தது. மிக சிக்கலான அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சை நடக்கும்போதே ஸ்ட்ரோக் ஏற்பட நிறைய வாய்ப்பு இருந்தது. அப்படி ஏற்பட்டால் பிழைப்பதே கஷ்டம்தான்.
தமிழ்நாடு மருத்துவமனையில் என் கணவரோடு நான் மட்டுமே இருந்தேன். அதிகாலை அவரை அறுவை சிகிச்சைக்கு உள்ளே அழைத்துச் சென்றதும், இனி உன்னை நல்ல படியாய் பார்ப்பேனா மாட்டேனா என்கிற பயமும் பதற்றமுமாய் நான் மட்டும் தனியே வெளியில் அமர்ந்திருந்த நிலையில் என் தோளைத் தொட்டது ஒரு கரம. திரும்பினால் பாலா. என் கண்கள் உடைந்தது. அவர் எதுவும் பேசாமல் என்னருகில் அமர்ந்தார். கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. சிலையாய் அமர்ந்திருந்தோம். டாக்டர் வெளியில் வர நான் எழுந்து ஓடினேன். டாக்டர் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். போஸ்ட் ஆபரேஷன் அறையில் இருக்கிறார். போய்ப் பாருங்கள் என்றார். நானும் பாலாவும் உள்ளே போனோம். டாக்டர் என்னைக் காட்டி யார் தெரிகிறதா என்றார். தெரிகிறது என்றார். பாலாவைக் காட்டி இது யார் சொல்லுங்கள் என்றார். பா லா ...மிக மெலிதாக சொன்னதும் பாலகுமாரனின் கண்களில் கண்ணீர். பிறகு என் கணவர் டிஸ்சார்ஜ் ஆன போது, அவரை தன் காரில் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டதும் அவர்தான்.
அங்கிருந்து சற்று நேரத்தில் கிளம்பியவர் நேராக என் வீட்டிற்கு சென்று என் அம்மாவிடம் சற்று கோபமாகவே பேசி இருக்கிறார். இப்டி அவளை தனியா விட்ருக்கப் படாது நீங்க. ஏதோ ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா தாங்கிப் பிடிச்சுக்கக் கூட யாருமில்லாம தன்னந்தனியா அவ உட்கார்ந்திருந்தது வயத்தைக் கலக்கிடுத்து. உங்களால முடியலைன்னா எங்கிட்ட சொல்லியிருந்தா நா சாந்தா கமலா ரெண்டு போரையும் அனுப்பி இருப்பேனே. என்று ஆதங்கப் பட்டிருக்கிறார். பாவம் என் அம்மா என் குழந்தைகளுக்கு காவலாய் தான் வீட்டிலிருந்ததை சொல்லி இருக்கிறாள்.
எப்படியோ காப்பாற்றியும் கூட என் கணவருக்கு தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை. மறுபடியும் புகைப் பழக்கம் தொற்றிக் கொள்ள ஒரு நாள் அது அவரை முழுவதுமாய் எரித்து விட்டது.
பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த பாலா என் பெண்ணிடம் என் கணவரின் புகைப் படத்தை வாங்கிக் கொண்டு சென்று பத்திரிகைகளுக்கு செய்தி சொன்ன கையேடு அந்த படத்தை பெரிதாக்கி லாமினேட்டும் செய்து கொடுத்தார். அந்தப் படம் இன்று வரை பீரோவில்தான் இருக்கிறது. வெறும் புகைப்படமாய் என்னவரை பார்க்க எனக்கு விருப்பமில்லாததுதான் வெளியில் வைக்காத காரணம்.
அதற்கு பிறகு பால குமாரன் என் வீட்டுப் பக்கமே வரவில்லை. நான் போன் செய்து பேசி ஏம்ப்பா அப்பறம் இங்க வரவில்ல என்றபோது அவர் சொன்ன பதில். சுப்பிரமணியம் இல்லாத வீட்டுக்கு வர எனக்கு கஷ்டமார்க்கு. பிடிக்கல. உனக்கு தோணும போது நீ என் வீட்டுக்கு வந்து பேசிட்டு போ. - இதுதான்.
அதன் பிறகு இன்று வரை அவர் என் வீட்டுக்கு வரவில்லை,. வந்தாலும் வாசலோடு பேசி விட்டுப் போவார். நாளாக ஆக நாங்கள் பேசிக்கொள்வது கூட குறைந்து போயிற்று. சிலநேரம் அது வருடக் கணக்கில் கூட இருக்கும். ஆனால் எப்போது பேசினாலும் என்னமோ நேற்று விட்ட இடத்திலிருந்து பேசுவது போல் படு இயல்பாய் பேசிக் கொள்வோம். சண்டையிட்டுக் கொள்வோம். கிண்டலடித்துக் கொள்வோம். பேசாமலே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்.
எதற்கு திடீரென்று பாலாவைப பற்றி எழுதுகிறேன் என்று தோன்றும். இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே அவர் புகைப்பதை நிறுத்தி விட்டாலும், எப்போதோ புகைத்ததன் பாதிப்பு இன்று அவரது நுரையீரலில் கோளாறை ஏற்படுத்தி இருக்கிறது
வீட்டிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் ஆக்சிஜன் சிலிண்டரோடு நடமாடிக் கொண்டிருக்கிறார். எது என் கணவரை என்னிடமிருந்து பறித்துச் சென்றதோ, எது என் நண்பரை இன்று இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறதோ, அதை இனியாவது இந்த உலகம் தூக்கி எறிய வேண்டும். என்ற தவிப்பில்தான் இன்று இந்த பதிவை எழுதி இருக்கிறேன். நீங்கள் புகைப்பவர் ஆனாலும் சரி, அல்லது புகைக்க விரும்புகிறவர் ஆனாலும் சரி, உங்களுக்கு நாள் சொல்ல விரும்புவது,
"உங்கள் உதட்டில் உட்காரும் அந்த சிறு நெருப்பு ஒரு நாள் உங்களையே சுட்டெரிக்கும் என்பதை நினைவில் கொண்டு அதை ஒதுக்கித் தள்ளுங்கள் என்பதே"
36 comments:
உங்களுக்கு வாய்த்த நட்பும் வாழ்க்கையும்
வாசிக்கும்போதே இனிமையானதாக இருக்கிறது
நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள்
பாலகுமாரனை கொண்டாடிய காலம்
வாசிக்கும் அனைவரிடமுமே நிச்சயமாக கைவசமிருக்கும்
பாலகுமாரனே உங்களின் வசம் இருந்திருக்கிறார்
அவரின் வாசலில் நின்ற உங்களின் கணவரும்
உங்களின் வாசலில் நின்ற பாலகுமாரனும்
உயர்ந்து நிற்கிறார்கள்
அப்படி அவர்கள் உயர்ந்து நிற்பதற்கு மிக முக்கிய காரணம்
நீங்களாகத்தான் இருக்க முடியும்
பாலகுமாரனுக்கு நீங்கள் பெரும் விடுதலை
உங்களுக்கு பாலகுமாரன் பெரும் விடுதலை
எல்லாவற்றிலிருந்தும் சட்டென விடுபட்டு அந்தரத்தில் எம்பிப் பறக்கிற உணர்வு எங்கெல்லாம் கிட்டுமோ
அங்கேயே சரனைந்துகிடக்க என்குவதுதானே இயல்பான ஒன்று
உங்களின் பறத்தலை வாசித்தபடியே நிமிர்ந்து பார்த்தேன்
இன்னமும் நீங்கள் பறந்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள்
வாழ்த்துகள்
பாலகுமாரன் சீராக இழுத்து வெளிவிடும் மூச்சோடு
மறுபடியும் வந்து நிற்பார்
உங்களின் வாசலில்
நம்பிக்கையோடு காத்திருங்கள்
நம்பிக்கை பலப்பட எனது நம்பிக்கையையும் அனுப்பி
உங்களின் நம்பிக்கையோடு கைகோக்கிறேன்
கண்களை மூடி ஆழ்மனதிலிருந்து ஆன்மாவின் உச்சிவரை
நிறுத்தி வைக்கிறேன் ஒளி படர நிமிர்கிறது
பா
ல
கு
மா
ர
ன்
.
.
.
நெகிழ்வான உணர்வுகளை வெளிப்படுத்தும் சம்பவங்களின் நினைவலைகளில் மூழ்கிப் போனேன்.
திரு.பாலகுமாரன் மீண்டும் சராசரி வாழ்வில் பயணிப்பார் எனபது என் நம்பிக்கை.
ஒரு உயர்ந்த நட்பு ஒரு அன்பான 'சக உதிர' உறவுக்கு சமம் என்று என்னை நெகிழ வைத்த பதிவு! பாலகுமாரனைப் பற்றி கவலை வேண்டாம். பீனிக்ஸ் பறவை போல் எழுச்சியுடன் மீண்டு வருவார்.
ஆனால் எப்போது பேசினாலும் என்னமோ நேற்று விட்ட இடத்திலிருந்து பேசுவது போல் படு இயல்பாய் பேசிக் கொள்வோம்.
நட்பின் அழகே அதுதான்.
மிகவும் அருமையான விழிப்புணர்வு பதிவு.
//சண்டையிட்டுக் கொள்வோம். கிண்டலடித்துக் கொள்வோம். பேசாமலே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்//
இதை நானும் என் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். வைரம் போன்ற வரிகள்.
பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
உயர்திரு பாலகுமாரன் அவர்கள் நலம்பெற வேண்டுகிறேன்
//பேசாமலே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்.//
உண்மையான வார்த்தைகள். நட்பின் மகத்துவத்தில் அதுவும் ஒன்று.அப்படிப்பட்ட உயர்ந்த நட்பு உங்களுக்கு வாய்த்திருக்கின்றது.அப்படி வாய்த்த நட்பை உணர்ந்து புரிந்து கொள்ளவும் தெரிந்த துணையும் அமையப் பெற்றிருக்கிறீர்கள்.
எழுத்துச் சித்தர் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.இதன் மூலம் விழிப்புணர்வு பதிவு தந்தமைக்கு நன்றி
ஓர் உயர்ந்த நட்பும், அருமையான வாழ்க்கைத் துணையும் அமையப்பெற்ற நீங்கள் பெரும் பேறு பெற்றவர்கள்.
எழுத்துச் சித்தர் விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்.
Very touching. உங்களது நட்பு என்னைப் பொறாமையடைச் செய்கிறது. எனது கல்லூரிப் பருவத்தில் பாலகுமானின் நாவல்களில் லயித்திருக்கிறேன். என்னைத் தொலைத்திருக்கிறேன். தோளில் கைபோட்டு தோழமையுடன் பேசும் உரைநடைகள் அவை. அவர் குணமடைய எல்லாம் வல்ல அண்ணாமலையாரை பிரார்த்திக்கிறேன். யோகி ராம்சுரத்குமாரின் நல்லாசியுடன் அவர் மீண்டும் எழுந்து வருவார். :-)
மனசை நெகிழ வைத்த பதிவு. பாலகுமாரன் அவர்கள் நலம்பெற வேண்டுகிறேன்.
நன்றி புகழேந்தி. அருமையாய் எழுதி இருகிறீர்கள்.
நன்றி நிசாமுதின். நன்றி ராமமூர்த்தி சார்,
நன்றி ரிஷபன். நன்றி வைகோ சார்.
நன்றி வலசு வேலணை. நன்றி ராஜி, ஆர.வி.எஸ், உழவன்
நன்றி அமைதிச்சாரல்.
அன்பின் வித்யா மேடம்,
மிக நெகிழ்ச்சியான உங்களின் பதிவினை வாசித்தேன். இரண்டு காரணங்களுக்காய் எனகு இந்த பதிவின் மீதிருக்கும் ஈர்ப்பு அதிகரித்து இருக்கிறது.
1) புகையிலை பற்றிய விழிப்புணர்வு
2) பாலகுமாரன் ஐயா
உங்களுக்கே தெரியும் நன்றாகத் தெரியும் பதின்மம் கடந்து எதார்த்த வாழ்க்கைக்குள் நுழையும் நிறைய பேருக்கு வாழ்க்கையை எழுத்துக்களின் மூலம் கை பிடித்து கற்றுக் கொடுத்தர் மரியாதைக்குரிய பாலகுமாரன் ஐயா அவர்கள். எனக்கும் கூட...
பாலா என்னும் நெருப்பு பற்ற வைத்த எண்ணற்ற ஒளிச்சுடர்களில் நானும் ஒருவன், பாலாவின் தாக்கத்திலேயே ஏதோ சிலவற்றை கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரணம். பாலகுமாரன் ஐயாவை அவர்களின் எழுத்துக்களின் மூலம் மட்டுமே அறிந்து மானசீகமாய் அவரைத் தொடரும் ஒரு சீடன்.
தங்களின் பாலகுமாரன் ஐயாவோடான நட்பு கண்டு மெய் சிலிர்க்கிறேன். எங்களுக்கு எல்லாம் எழுத்தின் மூலம் தீட்சை கொடுத்தவர் அல்லவா அவர்..? பாலகுமாரன் ஐயா உடல் நலம் குன்றி இருக்கிறார் என்றறிந்து மனம் கலங்கி இன்னமும் பிரார்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. .விரைவில் நலம் பெற்று வர எல்லாம் வல்ல பேரிறை துணை செய்யும்...!
இந்த பதிவின் மூலம் தங்களையும் அறிந்து கொண்டேன்.. ! நன்றிகள் மேடம்...!
பாலகுமாரன் நலம்பெற என் பிரார்த்தனைகள்.
இதை வாசிக்கும் புகைப் பழக்கம் உள்ளவர்கள் உணரட்டும். சிகரெட் பிடிக்காதவங்களுக்கு மட்டும் நுரையீரல் பிரச்னை வருவதில்லையா என்று வாதம் செய்யாமல்...
unga profile photo super..
ஓர் இனிய நட்பின் எளிய பதிவுடன் வலியதான ஓர் வேண்டுகோளையும் முன் வைத்து.. அருமை!
Very touching. பாலகுமாரன் விரைவில் நலம்பெறப் பிரார்த்திக்கிறேன்.
பாலகுமாரன் படித்ததில்லை.
உங்கள் கட்டுரை உருக்கமாக இருக்கிறது. நட்பு என்பதன் பரிமாணங்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொண்டுவிட முடியாது என்பதை மீண்டும் உணர்கிறேன்.
உங்கள் நண்பர் நலமாக விரும்புகிறேன்.
நட்பு என்பது வெறும் காப்பி சாப்பிட்டு விட்டு பேசி விட்டுப் போவது மட்டுமல்ல //
பாலகுமாரனை கொண்டாடிய காலம்
வாசிக்கும் அனைவரிடமுமே நிச்சயமாக கைவசமிருக்கும்//
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்//
பதின்மம் கடந்து எதார்த்த வாழ்க்கைக்குள் நுழையும் நிறைய பேருக்கு வாழ்க்கையை எழுத்துக்களின் மூலம் கை பிடித்து கற்றுக் கொடுத்தர் மரியாதைக்குரிய பாலகுமாரன் ஐயா //
ஓர் இனிய நட்பின் எளிய பதிவுடன் வலியதான ஓர் வேண்டுகோளையும் முன் வைத்து.. அருமை!//
நட்பு என்பதன் பரிமாணங்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொண்டுவிட முடியாது //
பதின்ம வயதுகளில் நானும் அவரது எழுத்துக்களில் பேரவா கொண்டிருந்தவளே. கடவுளின் கருணைக்கு பிரார்த்திக்கிறேன்.
இப்பதிவைப் படிக்கும் புகைப் பழக்கமுடையோர் சற்றேனும் சலனப்பட வாய்ப்புண்டு.
hii.. Nice Post
Thanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..
.
அன்புள்ள திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்களுக்கு,
வணக்கம். உங்களின் சிறுகதைகள், நாவல்கள் நிறையப் படித்திருக்கிறேன். ப்ளாக்கர்.காம் வழியாக உங்கள் பதிவுகளைப் இன்று பார்க்க முடிந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
“ பேசாமலே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நட்பு என்பது வைரத்தின் நீரோட்டமாய் என்றும் இருக்கும்.” மனதைத் தொட்ட வரிகள்.
எழுத்துலகில் நீங்கள் இன்னும் நிறைய சாதிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் ரஞ்ஜனி
உங்கள் மாத நாவல்கள் வாசகன். ஒரு முறை உங்கள் தளத்திற்கு வந்தும், அடுத்த முறை வர தாமதமாகிவிட்டது.
இந்த பதிவு, உங்கள் கணவர் மற்றும் பாலகுமாரன் என்னும் நண்பர் பற்றி இருந்தாலும், இவர்கள் உடல் நலம் கெடுத்த புகைக்கு எதிரான எச்சரிக்கையாகத் தான் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த வரையில், புகைப் பழக்கம் உள்ளவர்கள் எல்லோரும் தெரிந்தேதான் புகை பிடிக்கிறார்கள், அவர்கள் யார் பேச்சையும் கேட்பதில்லை - சொல்வது டாக்டராயிருந்தாலும். அவர்களே பட்டுத் திருந்தினால் ஒழிய அவர்களை மாற்ற முடியாது. (யார் சொன்னது, நான் இதுவரை நூறு தடவை புகை பழக்கத்தை விட்டிருக்கிறேன் என்று தான் சொல்வார்கள்!). இருந்தும் ஊதுகிற சங்கை ஊதவேண்டியது உங்கள் சமுதாயப் பொறுப்பைக் காண்பிக்கிறது.
திரு பாலகுமாரன் உடல் நலம் தேற என் பிரார்த்தனைகளும்.
-ஜெகன்னாதன்
அன்புள்ள வித்யா!
நட்பின் வலிமையையும் புகைபிடித்தலினால் ஏற்படும் தீமைகளையும் இதை விட யாருமே, மனசில் வலிக்கிற மாதிரி சொல்லி விட முடியாது! புகை பிடித்ததினால் ஏற்பட்ட வலியை உங்கள் கணவரைக்காட்டிலும் முழுமையாக அனுபவித்தவர் நீங்கள். அந்த வலியை அடுத்தவர் யாரும் அனுபவித்து விடக்கூடாது என்று மனம் நிறைய பதறும் உங்களின் தவிப்பே உங்களின் இனிய நண்பரை விரைவில் நலமுடன் உயிர்த்தெழ வைக்கும்! இதைப்படிக்கும் ஒரு சிலரையாவது அந்தக் கொடிய பழக்கத்திலிருந்து நிச்சயம் மீட்கும்!!
நன்றி ரஞ்சனி நன்றி ஜெகன்னாதன், நன்றி மனோ.
பாலகுமாரன் ஒரு காலத்தில் சங்கிலித்தொடர் புகைப்பராக இருந்தவர் என்பது அவரது கதைகளின் ஊடேயே புரியவரும்..
உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது சான்றோர் வாக்கு...
உங்களுடைய பதிவிற்கான நோக்கம் உயர்ந்ததாக இருந்தது...வாழ்த்துக்கள்..
ஆயினும் எவ்வளவு உயர்ந்தவர்களாயினும்,எவ்வளவு பிரியமானவர்களாயினும் ஒருவர் தகாதன செய்தால் சண்டப்பிரசண்டமாக முயற்சித்தாவது அவர்களை நல்வழிக்குத் திருப்ப வேண்டும்;அதுவே நாம் அவர்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்ததன்,இருப்பதன் பயன் என்பது,எனது அம்மாவிடமிருந்த,நான் விரும்பிக் கைக் கொண்ட கொள்கை...
இதில் நீங்கள் தோற்றதாகவே நான் கருதுகிறேன்.
:(
Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
என் எழுத்துக்கு என் அறிவுக்கு என்று பலவிதங்களிலும் தன் எழுத்து மூலம் என்னை புடம் போட்டவர் பாலகுமாரன். உங்கள் எழுத்தில் அவரைப் பற்றி படிக்கும் போது கண் கலங்கி விட்டது. அவரின் தற்போதைய நிலைமை குறித்து நிறைய முறை கவலைப்பட்டுள்ளேன். அவரின் கோபத்தை தாண்டி உங்கள் மேல் அவர் வைத்த அக்கறையும் செய்த உதவிகளும் ஆச்சரியமே. நல்வாழ்த்தகள்.
அனானி ரூபத்தில் ஒருவர் தொடர்ந்து போட்டுக் கொண்டே இருக்கிறார்? சற்று கவனிக்கவும். ஆனால் இங்கு வெளியாகவில்லை. ஸ்பேம் பக்கம் தள்ளி விடுங்க.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_20.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
மீண்டும் ஒரு முறை :
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...
நன்றி...
உங்க இந்த பதிவை இப்போதுதான் பார்த்தேன்.. ! இனிமையான நட்பையும், நட்பின் அக்கறையால் அது போன்று இனி யாருக்கும் நிகழக்கூடாது என்ற சமூக விழிப்புணர்வும்.! // எப்போது பேசினாலும் என்னமோ நேற்று விட்ட இடத்திலிருந்து பேசுவது போல் படு இயல்பாய் பேசிக் கொள்வோம்.// - இப்படி ஒரு அழகான நட்பு ஒரு வரம்.!
திரு பாலகுமாரனின் ரசிகர்களில் நானும் ஒருவன்.அவருடனான உங்கள் அனுபவம் நெகிழ வைக்கிறது. பாலகுமாரன் அவர்களின் கவிதைகள் பற்றி என் வலைப்பூவிலும் எழுதி இருக்கிறேன். உங்கள் வலைப பதிவை எனக்கு அறிமுகம் செய்த உஷா அன்பரசு அவர்களுக்கு நன்றி.
Post a Comment