Thursday, September 1, 2011

பாலின்றி அமையாது உலகு.

பாலுடனான நமது உறவு, தாய்ப் பாலிலிருந்தே துவங்கி விடுகிறது. தாய்ப் பாலுக்குப் பிறகு மனிதன் இறுதி வரை நாடுவது மாட்டுப் பாலைத்தான். மயிலையில் நாங்கள் இருப்பது பால் வியாபாரிகள் இருக்கும் ஒரு தெருதான்.


அந்தக் காலத்தில் பசு மாட்டை, வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து கட்டி காலிப் பாத்திரத்தை நம்மிடம் காட்டி விட்டு கண்ணெதிரில் பால் கறந்து அளந்து கொடுத்து விட்டுச் செல்வார்கள். ஆரம்பத்தில் ஆவின் பால் புட்டியில்தான் வரும். அலுமினிய தாளை எடுத்தால் மேலாக கெட்டியாக கொஞ்சம் வெண்ணை. அதன் சுவை அலாதியாக இருக்கும். பிறகுதான் பாக்கெட்டில் வர ஆரம்பித்தது.


நாற்பது வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டை அடுத்துள்ள பஜார் வீதியில் சண்முகம் பால் கடை என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளிச் சொட்டு போல என்பார்களே அப்படி இருக்கும். காலை வேளையில் ஒரு பெரிய கியூவே காத்திருக்கும். சண்முகம் கடை பாலில் காப்பி குடிப்பதே தனி அனுபவம் என்பார்கள். என் துரதிருஷ்டம் திருமணத்திற்குப் பிறகுதான் நான் காப்பிச் சுவையே அறிந்தேன். எத்தனை பெரிய வரிசை இருந்தாலும் என் அம்மா போனால் சண்முகம் முதலில் பாலை அளந்து அம்மாவுக்கு கொடுத்து விடுவார். அவ்வளவு மரியாதை. என்னைத் தவிர வீட்டில் அவ்வளவு பெரும் காப்பிப் பிரியர்கள் என்பதால் காப்பிக் கடை காலையில் வீட்டில் களைகட்டும். எல்லோரும் அடுக்களையில் ஒன்றாய் அமர்ந்து சகல கதைகளையும் பேசிக் கொள்வோம். . காப்பி வாசனை ஊரைக் கூட்டும். துளித்துளியாய் சுவைத்துக் குடிப்பார்கள். பொன்னிற நுரையோடு அந்தக் காபியை சுவைக்காதது இன்று வரை வருத்தமாயிருக்கிறது.

என்னடா இப்படி பாலிஷ்டாக எதைப் பற்றி சொல்ல வருகிறேன் என்று தோன்றுகிறதா? நான் பால் காய்ச்சும் லட்சணத்தைப் பற்றி சொல்லத்தான் இத்தனை பீடிகை.


என்னை நம்பி அரசாங்க கஜானாவைக் கூட ஒப்படைக்கலாம். அரை லிட்டர் பாலை மட்டும் காய்ச்சுவதற்கு கொடுக்கக் கூடாது என்பது என்னைத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். பால் காய்ச்சும் விஷயத்தில் நான் படு ஜாக்கிரதைதான். பாலை அடுப்பில் வைத்து விட்டு அருகிலேயே நின்று விடுவேன் இன்றைக்கு எப்படி நீ பொங்குகிறாய் என்று பார்க்கிறேன் என்கிற வைராக்கியத்தோடு. ஆனால் பாருங்கள் அது பொங்குகிற நேரத்திற்கு கரெக்டாக என் கவனம் மாறிவிடும். ஒரு நொடிதான் ஓடி வருவதற்குள் அடுப்புக்கு பாலாபிஷேகம் ஆகியிருக்கும்.

பால் பொங்கி விட்டால் மட்டும் எனக்கு படு டென்ஷனாகி விடும். பின்னே என்னவாம்.? அடுப்பின் அடி வழியே வழிந்து மேடை முழுக்க ஆறாக ஓடி மேடை மீதிருக்கும் பொருட்களையெல்லாம் நனைத்து தரையெல்லாம் வழிந்து .........யப்பா அமர்க்களம்தான். சுத்தப் படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விடும்.


பாலை அடுப்பில் வைத்த பிறகுதான் என் கற்பனையும் பொங்கோ பொங்ககென்று பொங்கும் . அடுப்பின் எதிரில் பாலைப் பார்த்தபடி நான் நின்றிருக்க பால் பாட்டுக்குப் பொங்கிக்கொண்டிருக்கும். அதென்னடி பாலைப் பொங்க விட்டுண்டு பா(லா)ழாப் போன யோசனை? என்று அம்மாவின் கத்தல் கேட்டபிறகுதான் கற்பனை கலையும். பழி வாங்கி விட்டாயே என்று பாலை முறைத்துப் பார்ப்பேன். பாதி நாள் இந்தக் கதைதான்.

பக்கத்தில் நின்றிருந்தால் நம் பொறுமையை சோதிக்கும் பால், வேறு வேலை செய்யப்போனால் மட்டும் வினாடியில் காய்ந்து பொங்கும். ஒருமுறை பாலை அடுப்பில் வைத்து விட்டு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். அடுப்பை சிம்மில்தான் வைத்திருந்தேன். சற்றுப் பொறுத்து என் பெரிய பெண் அம்மா யாராத்துலயோ வெண்ணை காச்சற வாசனை வரத்து என்றாள். ஆமாம் என்றேன். சற்றுப் பொறுத்து என் சின்ன பெண், குலாப்ஜாமுன் பண்ற வாசனை வரதும்மா என்றாள். இல்லம்மா வேர்க்கடல வேக வைக்கற வாசன மாதிரி இருக்கு என்றாள் என் பெரிய பெண். நானும் அந்த வாசனை என்ன வென்று மூக்கை உறிஞ்சி ஆராய்ந்தேன். தீஞ்சு போன வாசனை மாதிரி தோன்ற, சுரீரென்று உறைக்க எழுந்து அடுக்களை நோக்கி ஓடிப் போனால், கரிக்கட்டையாய் பாத்திரம் மட்டுமே மிஞ்சியிருந்தது. ஏண்டி பெண்களா வித விதமா வாசனை வரதுன்னு சொன்னதுக்கு, பால் பொங்கற வாசனைன்னு தோணவேல்லையா என்று எரிந்து விழுந்தேன். நீ பால் வெச்ச விஷயத்தை எங்க கிட்ட சொன்னயா? பெண்கள் திருப்பிக் கேட்க அசடு வழிந்தேன்.


ஒரு முறை பாலை அடுப்பில் வைத்து விட்டு என் சின்ன பெண்ணிடம் அடுப்புல பால் வெச்சிருக்கேன் பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு காய்கறி வாங்கப் போனேன். நான் வரும்போது பால் பொங்கி வழிந்திருக்க அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி இது என்றால், நீதானம்மா பார்த்துக்கோன்னு சொன்ன அதான் பார்த்துண்டிருந்தேன் என்றாளே பார்க்கலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று முதல் காரியமாய் ஒரு பால் குக்கர் வாங்கி வந்தார் என் கணவர். ஒரு வாரம் ஒழுங்காயப் போயிற்று. ஒரு நாள் குக்கரில் நீர் விடாமல் வைத்து விட்டேன் போலிருக்கிறது. சத்தமே வரவில்லை. விசில் கெட்டுப் போய், குக்கர் தீய்ந்து பாலிலும் தீய்ந்த வாசனை. இது மாதிரி பலமுறை. பால் குக்கரும் சரிப்படாது என்றானது. பால் பொங்கி வழியாமலிருக்க பேசாமல் பெரிய பாத்திரத்தில் வைத்தால் என்ன என்று தோன்றியது. மிகப் பெரிய பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி வைத்தேன். பொங்கினாலும் வழியாதல்லவா. ரெண்டு நாள் வொர்க் அவுட் ஆயிற்று. மூன்றாம் நாள் பால் வற்றி அடியில் ஒட்டிக கொண்டிருந்தது.

ஒரு முறை என் ரசிகர் ஒருவர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார். அடுப்பில் பாலை வைத்து விட்டு அவரோடு பெசிக்கொண்டிருந்ததில் பாலை வைத்ததையே மறந்து விட்டேன். நான் கிளம்பறேன் மேடம் இன்னும் ஒரு மணி நேரத்துல பஸ்ஸை ப் பிடிக்கணும் என்றார். அடடா காப்பி தரேன் இருங்க என்றபடி பால் பொங்கி வற்றியிருக்குமே என்கிற கவலை யோடு உள்ளே வந்தால்.......... ஐயோடா என்ன சமத்து ! அடுப்பை பற்ற வைக்கவேயில்லை. நான் பால் காய்ச்சி காப்பி கலப்பதற்குள் பஸ் போய் விடும் என்று பயந்து விட்டார் வந்தவர். பரவால்ல மேடம், அடுத்த முறை (!) உங்க கையால் சாப்பாடே சாப்பிடறேன் என்றபடி கிளம்பி விட்டார் வந்தவர். சரி நாமாவது சாப்பிடுவோம் என்றபடி அடுப்பை பற்றவைத்து விட்டு கதை எழுத உட்கார்ந்தேன். சற்று நேரத்தில் தொலை பேசி அடித்தது. என் ரசிகர்தான். மேடம் நல்லபடியா பாண்டிச்சேரி வந்து சேர்ந்துட்டேன் என்றார். பக்கென்றது. பால்? வழக்கம்போல்தான். பொங்கின வேகத்தில் அடுப்பு அணைந்திருந்தது. கேஸ் வாசனை கிட்டே போன பிறகுதான் தெரிந்தது. உடனே அடுப்பை அணைத்தேன்.

இன்று பிள்ளையார் சதுர்த்தி. காலையில் குளித்து விட்டு பாலை அடுப்பில் வைத்தேன் டிவியில் அழகழகாய் விநாயகர் காட்சியில் மெய்மறக்க, உள்ளே பாலாறு தான். இந்த பால் படுத்தும்பாட்டை பதிவெழுதியே தீருவது என்று உட்கார்ந்து விட்டேன். பொங்காமல் பால் காய்ச்சுவது எப்படி என்று ஏதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்களேன். ஒரு நிமிஷம்...... அடராமா! அடுப்பில் பால்ல்ல்ல்ல்ல்ல்ல் ! போச்! போயே போச்!