Thursday, September 1, 2011

பாலின்றி அமையாது உலகு.

பாலுடனான நமது உறவு, தாய்ப் பாலிலிருந்தே துவங்கி விடுகிறது. தாய்ப் பாலுக்குப் பிறகு மனிதன் இறுதி வரை நாடுவது மாட்டுப் பாலைத்தான். மயிலையில் நாங்கள் இருப்பது பால் வியாபாரிகள் இருக்கும் ஒரு தெருதான்.


அந்தக் காலத்தில் பசு மாட்டை, வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து கட்டி காலிப் பாத்திரத்தை நம்மிடம் காட்டி விட்டு கண்ணெதிரில் பால் கறந்து அளந்து கொடுத்து விட்டுச் செல்வார்கள். ஆரம்பத்தில் ஆவின் பால் புட்டியில்தான் வரும். அலுமினிய தாளை எடுத்தால் மேலாக கெட்டியாக கொஞ்சம் வெண்ணை. அதன் சுவை அலாதியாக இருக்கும். பிறகுதான் பாக்கெட்டில் வர ஆரம்பித்தது.


நாற்பது வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டை அடுத்துள்ள பஜார் வீதியில் சண்முகம் பால் கடை என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. கள்ளிச் சொட்டு போல என்பார்களே அப்படி இருக்கும். காலை வேளையில் ஒரு பெரிய கியூவே காத்திருக்கும். சண்முகம் கடை பாலில் காப்பி குடிப்பதே தனி அனுபவம் என்பார்கள். என் துரதிருஷ்டம் திருமணத்திற்குப் பிறகுதான் நான் காப்பிச் சுவையே அறிந்தேன். எத்தனை பெரிய வரிசை இருந்தாலும் என் அம்மா போனால் சண்முகம் முதலில் பாலை அளந்து அம்மாவுக்கு கொடுத்து விடுவார். அவ்வளவு மரியாதை. என்னைத் தவிர வீட்டில் அவ்வளவு பெரும் காப்பிப் பிரியர்கள் என்பதால் காப்பிக் கடை காலையில் வீட்டில் களைகட்டும். எல்லோரும் அடுக்களையில் ஒன்றாய் அமர்ந்து சகல கதைகளையும் பேசிக் கொள்வோம். . காப்பி வாசனை ஊரைக் கூட்டும். துளித்துளியாய் சுவைத்துக் குடிப்பார்கள். பொன்னிற நுரையோடு அந்தக் காபியை சுவைக்காதது இன்று வரை வருத்தமாயிருக்கிறது.

என்னடா இப்படி பாலிஷ்டாக எதைப் பற்றி சொல்ல வருகிறேன் என்று தோன்றுகிறதா? நான் பால் காய்ச்சும் லட்சணத்தைப் பற்றி சொல்லத்தான் இத்தனை பீடிகை.


என்னை நம்பி அரசாங்க கஜானாவைக் கூட ஒப்படைக்கலாம். அரை லிட்டர் பாலை மட்டும் காய்ச்சுவதற்கு கொடுக்கக் கூடாது என்பது என்னைத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். பால் காய்ச்சும் விஷயத்தில் நான் படு ஜாக்கிரதைதான். பாலை அடுப்பில் வைத்து விட்டு அருகிலேயே நின்று விடுவேன் இன்றைக்கு எப்படி நீ பொங்குகிறாய் என்று பார்க்கிறேன் என்கிற வைராக்கியத்தோடு. ஆனால் பாருங்கள் அது பொங்குகிற நேரத்திற்கு கரெக்டாக என் கவனம் மாறிவிடும். ஒரு நொடிதான் ஓடி வருவதற்குள் அடுப்புக்கு பாலாபிஷேகம் ஆகியிருக்கும்.

பால் பொங்கி விட்டால் மட்டும் எனக்கு படு டென்ஷனாகி விடும். பின்னே என்னவாம்.? அடுப்பின் அடி வழியே வழிந்து மேடை முழுக்க ஆறாக ஓடி மேடை மீதிருக்கும் பொருட்களையெல்லாம் நனைத்து தரையெல்லாம் வழிந்து .........யப்பா அமர்க்களம்தான். சுத்தப் படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விடும்.


பாலை அடுப்பில் வைத்த பிறகுதான் என் கற்பனையும் பொங்கோ பொங்ககென்று பொங்கும் . அடுப்பின் எதிரில் பாலைப் பார்த்தபடி நான் நின்றிருக்க பால் பாட்டுக்குப் பொங்கிக்கொண்டிருக்கும். அதென்னடி பாலைப் பொங்க விட்டுண்டு பா(லா)ழாப் போன யோசனை? என்று அம்மாவின் கத்தல் கேட்டபிறகுதான் கற்பனை கலையும். பழி வாங்கி விட்டாயே என்று பாலை முறைத்துப் பார்ப்பேன். பாதி நாள் இந்தக் கதைதான்.

பக்கத்தில் நின்றிருந்தால் நம் பொறுமையை சோதிக்கும் பால், வேறு வேலை செய்யப்போனால் மட்டும் வினாடியில் காய்ந்து பொங்கும். ஒருமுறை பாலை அடுப்பில் வைத்து விட்டு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். அடுப்பை சிம்மில்தான் வைத்திருந்தேன். சற்றுப் பொறுத்து என் பெரிய பெண் அம்மா யாராத்துலயோ வெண்ணை காச்சற வாசனை வரத்து என்றாள். ஆமாம் என்றேன். சற்றுப் பொறுத்து என் சின்ன பெண், குலாப்ஜாமுன் பண்ற வாசனை வரதும்மா என்றாள். இல்லம்மா வேர்க்கடல வேக வைக்கற வாசன மாதிரி இருக்கு என்றாள் என் பெரிய பெண். நானும் அந்த வாசனை என்ன வென்று மூக்கை உறிஞ்சி ஆராய்ந்தேன். தீஞ்சு போன வாசனை மாதிரி தோன்ற, சுரீரென்று உறைக்க எழுந்து அடுக்களை நோக்கி ஓடிப் போனால், கரிக்கட்டையாய் பாத்திரம் மட்டுமே மிஞ்சியிருந்தது. ஏண்டி பெண்களா வித விதமா வாசனை வரதுன்னு சொன்னதுக்கு, பால் பொங்கற வாசனைன்னு தோணவேல்லையா என்று எரிந்து விழுந்தேன். நீ பால் வெச்ச விஷயத்தை எங்க கிட்ட சொன்னயா? பெண்கள் திருப்பிக் கேட்க அசடு வழிந்தேன்.


ஒரு முறை பாலை அடுப்பில் வைத்து விட்டு என் சின்ன பெண்ணிடம் அடுப்புல பால் வெச்சிருக்கேன் பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு காய்கறி வாங்கப் போனேன். நான் வரும்போது பால் பொங்கி வழிந்திருக்க அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி இது என்றால், நீதானம்மா பார்த்துக்கோன்னு சொன்ன அதான் பார்த்துண்டிருந்தேன் என்றாளே பார்க்கலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று முதல் காரியமாய் ஒரு பால் குக்கர் வாங்கி வந்தார் என் கணவர். ஒரு வாரம் ஒழுங்காயப் போயிற்று. ஒரு நாள் குக்கரில் நீர் விடாமல் வைத்து விட்டேன் போலிருக்கிறது. சத்தமே வரவில்லை. விசில் கெட்டுப் போய், குக்கர் தீய்ந்து பாலிலும் தீய்ந்த வாசனை. இது மாதிரி பலமுறை. பால் குக்கரும் சரிப்படாது என்றானது. பால் பொங்கி வழியாமலிருக்க பேசாமல் பெரிய பாத்திரத்தில் வைத்தால் என்ன என்று தோன்றியது. மிகப் பெரிய பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி வைத்தேன். பொங்கினாலும் வழியாதல்லவா. ரெண்டு நாள் வொர்க் அவுட் ஆயிற்று. மூன்றாம் நாள் பால் வற்றி அடியில் ஒட்டிக கொண்டிருந்தது.

ஒரு முறை என் ரசிகர் ஒருவர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார். அடுப்பில் பாலை வைத்து விட்டு அவரோடு பெசிக்கொண்டிருந்ததில் பாலை வைத்ததையே மறந்து விட்டேன். நான் கிளம்பறேன் மேடம் இன்னும் ஒரு மணி நேரத்துல பஸ்ஸை ப் பிடிக்கணும் என்றார். அடடா காப்பி தரேன் இருங்க என்றபடி பால் பொங்கி வற்றியிருக்குமே என்கிற கவலை யோடு உள்ளே வந்தால்.......... ஐயோடா என்ன சமத்து ! அடுப்பை பற்ற வைக்கவேயில்லை. நான் பால் காய்ச்சி காப்பி கலப்பதற்குள் பஸ் போய் விடும் என்று பயந்து விட்டார் வந்தவர். பரவால்ல மேடம், அடுத்த முறை (!) உங்க கையால் சாப்பாடே சாப்பிடறேன் என்றபடி கிளம்பி விட்டார் வந்தவர். சரி நாமாவது சாப்பிடுவோம் என்றபடி அடுப்பை பற்றவைத்து விட்டு கதை எழுத உட்கார்ந்தேன். சற்று நேரத்தில் தொலை பேசி அடித்தது. என் ரசிகர்தான். மேடம் நல்லபடியா பாண்டிச்சேரி வந்து சேர்ந்துட்டேன் என்றார். பக்கென்றது. பால்? வழக்கம்போல்தான். பொங்கின வேகத்தில் அடுப்பு அணைந்திருந்தது. கேஸ் வாசனை கிட்டே போன பிறகுதான் தெரிந்தது. உடனே அடுப்பை அணைத்தேன்.

இன்று பிள்ளையார் சதுர்த்தி. காலையில் குளித்து விட்டு பாலை அடுப்பில் வைத்தேன் டிவியில் அழகழகாய் விநாயகர் காட்சியில் மெய்மறக்க, உள்ளே பாலாறு தான். இந்த பால் படுத்தும்பாட்டை பதிவெழுதியே தீருவது என்று உட்கார்ந்து விட்டேன். பொங்காமல் பால் காய்ச்சுவது எப்படி என்று ஏதாவது புத்தகம் இருந்தால் சொல்லுங்களேன். ஒரு நிமிஷம்...... அடராமா! அடுப்பில் பால்ல்ல்ல்ல்ல்ல்ல் ! போச்! போயே போச்!








41 comments:

raji said...

சூப்பர்.படித்து விட்டு நன்றாக சிரித்தேன்
தலைப்பை 'பொங்கும் பாலின்றி அமையாது என் உலகு' 'அப்டின்னு மாத்திரலாமா மேடம்?! :-))

அந்த கால கள்ளிச்சொட்டு பாலெல்லாம் இனி பாக்கவே முடியாது :-((((

//பக்கத்தில் நின்றிருந்தால் நம் பொறுமையை சோதிக்கும் பால், வேறு வேலை செய்யப்போனால் மட்டும் வினாடியில் காய்ந்து பொங்கும்//
அது என்னவோ வாஸ்தவம்தான்

மொத்தத்தில் ஒரு சூப்பர் அனுபவ பகிர்வு

சாந்தி மாரியப்பன் said...

அருமையானதோர் அனுபவப் பகிர்வு..

பேசாம கிச்சன் அலாரம் வாங்கி வெச்சுடுங்க. அடுப்பை சிம்ல வெச்சாலும் பால் பொங்கி வழியறதுக்கு எப்படியும் கால் மணி நேரமாவது ஆகுமில்லையா. அதனால, பதினஞ்சு நிமிஷத்துக்கப்றம் அடிக்கிறமாதிரி அலாரம் செட் பண்ணுங்க. அது ஞாபகப்படுத்தும் :-))

R. Gopi said...

:-))

ஸாதிகா said...

சேம் பிளட்..எனக்கும் இதே கதைதான்.அப்படியே என் பால்காய்ச்சும் அனுபவத்தை நேரில் பார்த்து எழுதி இருப்பதுபோல் எழுதி இருக்கீங்க.பால் காய்ச்சி,தீய்ந்து கருப்பாகி வீணாகிப்போன பாத்திரங்கள்தான் எத்தனை எத்தனை....?:-)

RAMA RAVI (RAMVI) said...

///அந்தக் காலத்தில் பசு மாட்டை, வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து கட்டி காலிப் பாத்திரத்தை நம்மிடம் காட்டி விட்டு கண்ணெதிரில் பால் கறந்து அளந்து கொடுத்து விட்டுச் செல்வார்கள். ஆரம்பத்தில் ஆவின் பால் புட்டியில்தான் வரும். அலுமினிய தாளை எடுத்தால் மேலாக கெட்டியாக கொஞ்சம் வெண்ணை. அதன் சுவை அலாதியாக இருக்கும். பிறகுதான் பாக்கெட்டில் வர ஆரம்பித்தது. //

இது இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது மேடம். அந்த புட்டிப்பாலுக்காக புட்டிய எடுத்துண்டு வரிசையில் நின்று பால வாங்கி வந்ததை நான் இன்னும் மறக்கவில்லை.

நான் பாலை பொங்கி வழியவிட்டதே கிடையாது. ஆனால் என் மாமியாரும் நாத்தனாரும் தினமும் இப்படித்தான் வழிய விடுவார்கள்.அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி நீ மட்டும் எப்படி பொங்கி வழிய விடாம காய்ச்சரே? என்பதுதான்.

கரண்ட் செலவு பரயில்லை என்றால் rice cooker ல் அடியில் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் பாலை வைத்துவிடலாம்.மறந்தாலும் ஒன்றும் ஆகாது.

உங்க அனுபவ பதிவு அருமை.நான் மிகவும் ரசித்து படித்தேன்.
நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ராஜி மாத்திட்டா போச்சு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி அமைதிச்சாரல்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கோபி :-))

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சாதிகா உங்க வீட்டிலும் இதே கதைதானா?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்ல யோசனை ராம்வி

கடம்பவன குயில் said...

ஹய்யோ...பொங்கி பாத்திரம் கருகவிடாமல் பால் காய்ச்சி குடும்பம் நடத்தியிருந்தால் அவங்களை பாங்கான குடும்பத்தலைவி என்கிற லிஸ்ட்டில் எப்படி மேடம் சேர்க்கிறது?.

எல்லோருக்குமே பால்பொங்கி வழியவிட்டு எக்கச்சக்கமாக மேல்வேலைபார்க்கும் அனுபவம் நிறைய உண்டு. கிச்சன் க்வின்ஸ்க்கு அழகே அதுதானே மேடம்.

பக்கத்தில் நின்றால் பொங்க அதிக நேரம் பிடிக்கும் பால் தள்ளிச் சென்றால் உடனே பொங்கும் மாயமென்ன என்று பல நாள் நானும் சிந்தித்ததுண்டு. விடைசொல்வார் யாருமில்லை...

RVS said...

லோக் பால் சலசலக்கிற இந்த நேரத்தில... இப்படி ஒரு டைட்டில்... அருமை..

பால் குக்கர்ல பால் வேகுமான்னு கேட்கிற அளவிற்கு மட்டுமே ஞானம் இருக்கிற ஆளைக் கூட அசத்திடும் இந்தப் பதிவு.

எழுத்தாளர்களின் ட்ரேட் மார்க் முத்திரையுடன் ஜொலிக்கிறது இப்பதிவு!

எங்கவீட்ல கூட அப்பப்போ பாலாறு ஓடும்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>பாலைப் பொங்க விட்டுண்டு பா(லா)ழாப் போன யோசனை?

haa haa ஹா ஹா

பால் பற்றிய பதிவு அழகு.. பை அமலா பால் ரசிகர் மன்ற அடி மட்ட தொண்டன் ஹி ஹி

Anonymous said...

இருக்கவே இருக்கு microwave oven.. ஒரு வாட்டி பாத்து டைம் செட் பண்ணிட்டிங்கன்னா, it takes the same time everytime. :)

ஆமா எதுக்கு பால காய்ச்சரிங்க? அப்படியே சாப்பிடலாமே!! ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஈ.குக் என்று ஒன்று வந்துள்ளது மேடம். அது தான் உங்களுக்கு சரிப்பட்டு வரும் என்று நான் நினைக்கிறேன்.

அதில் 300, 800, 1200 என்று ஹீட் அளவுகள் உண்டு. அடிப்பக்கம் [காப்பர் பாட்டம் இல்லாத] சப்பட்டையாக உள்ள ஒரு பெரிய பாத்திரத்தில் 300 இல் வைத்து விட்டால் போதும். எவ்வளவு நேரம் ஆனாலும் உள்ளுக்குள் பால் பொங்குமே தவிர, பொங்கி பாத்திரத்திலிருந்து வெளியே வழியாது.

டைம் செட்டிங் வசதிகளும் உள்ளது.
800 இல் வைத்து 5 நிமிடம் என்று செட் செய்துவிட்டால், 5 நிமிடம் ஆனதும் அது தானாகவே அணைந்து விடும்.

மின்சார சப்ளை மட்டும் இருந்தால் போதும்.

ஞாபக மறதி ஆசாமிகளுக்கும், கையாள்வது மிகவும் சுலபம்.

நானே உபயோகிக்கிறேன் என்றால் பாருங்களேன்!

மற்றொரு ப்ளஸ் பாயிண்ட்டும் உள்ளது. நன்கு பாத்திரத்தில் கொதிக்கும் பாலை, அப்படியே பாத்திரத்தின் விளிம்பைப்பிடித்து இறக்கலாம். கையைச் சுடவே சுடாது.

என் வீட்டில் நாங்கள் இதைத்தான் பெரும்பாலும் உபயோகிக்கிறோம்.

முக்கியமாக பால்/காஃபி விஷ்யத்திற்கும், குடிக்க வெந்நீர் போடவும், ரஸம், சாம்பார், கூட்டு & இட்லிப்பானை முதலியன கொதிக்க விடவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் [மூன்று வருஷங்கள் முன்பு வாங்கினேன். சாதாரண ஏதோவொரு லோக்கல் ப்ராண்ட் தான்] இன்று வரை நன்றாக உழைக்கிறது.

இப்போது பிரஸ்டீஜ் போன்ற பிரபல கம்பெனிகளிலேயே இந்த ஈ.குக் தயாரித்து விற்கிறார்கள்.

தங்களின் பதிவு நகைச்சுவையாகவும், படிக்க விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

vgk

'பரிவை' சே.குமார் said...

ஹ... ஹ... ஹாஆஆஆஆ...

பால் உங்களை பலவிதத்தில் வாரி இருக்கிறது.... சிரிக்க முடியவில்லை.

Mrs.Mano Saminathan said...

வலைச்சரத்தில் ‘ சிறுகதை முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

ரிஷபன் said...

சற்றுப் பொறுத்து என் பெரிய பெண் அம்மா யாராத்துலயோ வெண்ணை காச்சற வாசனை வரத்து என்றாள். ஆமாம் என்றேன். சற்றுப் பொறுத்து என் சின்ன பெண், குலாப்ஜாமுன் பண்ற வாசனை வரதும்மா என்றாள். இல்லம்மா வேர்க்கடல வேக வைக்கற வாசன மாதிரி இருக்கு என்றாள் என் பெரிய பெண். நானும் அந்த வாசனை என்ன வென்று மூக்கை உறிஞ்சி ஆராய்ந்தேன். தீஞ்சு போன வாசனை மாதிரி தோன்ற, சுரீரென்று உறைக்க எழுந்து அடுக்களை நோக்கி ஓடிப் போனால், கரிக்கட்டையாய் பாத்திரம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

ரசித்து படித்தேன்.
எனக்கும் பாலுக்கும் இதே விதிதான்.. உங்கள் பதிவு பார்த்து ஒரு அல்ப திருப்தி.. சரி எல்லார் வீட்டுலயும் இதே கதைதான் போல..
என்ன.. பொங்கி வழிஞ்சு ஓடியதை.. யாராவது வருவதற்குள் அவசரம் அவசரமாய் துடைத்து கிளீன் செய்து வைத்தாலும் மனைவி கண்டு பிடித்து விடுவார்கள்.. ‘என்ன வழிஞ்சுடுச்சா’
அப்போது தான் வழியும் எனக்கும்!

middleclassmadhavi said...

ஹா ஹா ஹா!
நான் பால் நல்லா காய்ச்சுவேனே! ஆனால் பாருங்க, எது செய்தாலும் சின்ன சின்னதா கையை, விரலைச் சுட்டுப்பேன்! தப்பிச்சா, பாத்திரத்தைக் காலில் போட்டுப்பேன்!!

ஹுஸைனம்மா said...

ஹய்யோ வித்யா மேடம்!! ஸேம் பிஞ்ச்!! நீங்க பால், நான் டீ!! தினம் டீ போடும்போது, அடுப்புக்கும் கொடுத்துட்டுத்தான் நாங்க குடிப்போம் - காக்கைக்கு வைக்கிற மாதிரி!! ;-))))))

நிஜமாலுமே, டீ பொங்கின அடுப்பைக் கழுவி எடுக்கிறது பெரிய தொந்தரவு பிடிச்ச வேலைங்க!! பாலைவிடக் கஷ்டம் - தேயிலையும் சேந்து - கொடுமையா இருக்கும்!! :-((((

ஹுஸைனம்மா said...

கள்ளிச் சொட்டு பால் - சின்ன வயசுல தினம் மூணரைக்கே பால் விக்கும் வீட்டுக்குப் போய் லைன்ல நிப்போம். சுடச் சுடக் கறந்து, நுரை பொங்க தருவாங்க.

இப்பவும் சில பாக்கெட் பால்கள் கள்ளிச் சொட்டு போலத்தான் இருக்கு - கலப்படம் அல்லது ஹார்மோன் ஊசி காரணமா நிஜம்மான கள்ளிச்சொட்டு போல!! :-((((

ஹுஸைனம்மா said...

அப்புறம், இந்த பால் பொங்குறது நம்மளப் போல கற்பனைவளம் நிறைஞ்ச கதாசிரியர்களுக்கேயான அடையாளமோ? (ஹி.. ஹி.. சும்மா..)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பால் பொங்காம இருக்கணும்னா..அதை காய்ச்சாம இருக்கறது தான் ஒரே வழி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்களைக் கேட்டால் ‘பாலின்றி அமையாது உலகு’ என்கிறீர்கள்..பால் காரரைக் கேட்டால்,அவர் ‘ நீரின்றி அமையாது உலகு’ என்கிறார்..என்னத்த சொல்ல?

கே. பி. ஜனா... said...

Very humorous..

குறையொன்றுமில்லை. said...

பதிவு படிக்க ஆரம்பித்து முடிக்கும்வரை
முகத்தில் வந்து ஒட்டிக்கொண்ட சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியல்லே.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி லஷ்மி மேடம்.

KParthasarathi said...

படிக்க சுவையாக இருந்தது.

மனோ சாமிநாதன் said...

சுவாரஸ்யமான பதிவு வித்யா! எங்கள் வீட்டிலும் காலையில் காப்பியுடன் கொஞ்சமாவது அனைவரும் பேசினால்தான் திருப்தி!

க‌ள்ளிச்சொட்டுப் பால் இப்போதெல்லாம் கனவில்தான்! தஞ்சாவூரில் என் அக்கா பேரனுக்கு பசும்பால் கேட்டு பால்காரரிடம் பேசிய போது, அவர் ரொம்பவும் கூலாக கொஞ்சம் தண்ணீர் ஊற்றிய பால் என்றால் ஒரு விலை. சற்று அதிகம் நீர் ஊற்றிய பால் என்றால் ஒரு விலை என்றதும் மயக்கம் வராத குறை தான்!

கதம்ப உணர்வுகள் said...

ஆகமொத்தம் ஸ்வாமிக்கு பண்ணின பால் அபிஷேகத்தை விட வீட்டு கிச்சன் மேடை ஸ்டவ்வுக்கு செய்திருக்கும் பாலபிஷேகம் அதிகம் போலிருக்கேப்பா :)

என்ன தான் சொல்லுங்கோ பால் பொங்கி தீய்ந்தது எப்படின்னு தீஸிஸ் எழுதி சப்மிட் பண்ர அளவுக்கு அசத்தி இருக்கீங்க....

நீங்க சொன்னதுல ஒரு வரி கூட சிரிக்காம என்னால சத்தியமா படிக்க முடியலப்பா...

அதுலயும் உங்க பொண்ணை சித்த பால் பொங்கிட போறது பார்த்துக்கோன்னு சொல்லிட்டு வந்தப்ப பால் பொங்கி வழிந்திருக்க என்னடின்னு கேக்க அம்மா நீ தானே சொன்னே பால் பொங்கும் பார்த்துக்கோன்னு அதான்....

தாங்க முடியலப்பா சிரிப்பு....

இப்ப என்னங்கறேள்? பால் பொங்காம காய்ச்சனும் அவ்ளோ தானே?

நார்மல் குக்கர்ல குட்டி பாத்திரத்துல அரிசிக்கு பதில் பால் வெச்சுட்டு அடியில் மறக்காம தண்ணிஊத்தி வைங்க...

இனி பொங்கவே பொங்காது... இந்த ஐடியா போறுமாப்பா?

ரசித்து படித்தேன்பா உங்க பகிர்வை... இனி ஒவ்வொன்னா படிக்கனும்...

உங்க தளம் மிக மிக அருமைப்பா...

சிரிக்க வைத்தமைக்கு அன்பு நன்றிகள்பா....

Aathira mullai said...

முதல் முறை வந்தேன்..
லோக் பால் மறுபடியும் தலை தூக்குதே என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்தால் இங்கேயும் பால்...
//எழுந்து அடுக்களை நோக்கி ஓடிப் போனால், கரிக்கட்டையாய் பாத்திரம் மட்டுமே மிஞ்சியிருந்தது. //
இது எனக்கும் பலமுறை அனுபவமானது. அழகாக எழுதியுள்ளீர்கள்.

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

Anonymous said...

Simple. Use a milk cooker. It gives a whistle in time.

Anonymous said...

"பழி வாங்கி விட்டாயே என்று பாலை முறைத்துப் பார்ப்பேன்"

"ஒரு நிமிஷம்...... அடராமா! அடுப்பில் பால்ல்ல்ல்ல்ல்ல்ல் ! போச்! போயே போச்!"

- இது ஒரு தொடர்கதை....
பாராட்டுகள் நன்றி

ஆயிஷா said...

இப்பதான் முதல் தடவை உங்கள் பிளாக் வந்துள்ளேன்.

பதிவை படித்தால் நம்ம பால் மேட்டரை அப்படியே எழுதி உள்ளீர்கள்.

//இன்றைக்கு எப்படி நீ பொங்குகிறாய் என்று பார்க்கிறேன் என்கிற வைராக்கியத்தோடு. ஆனால் பாருங்கள் அது பொங்குகிற நேரத்திற்கு கரெக்டாக என் கவனம் மாறிவிடும். ஒரு நொடிதான் ஓடி வருவதற்குள் அடுப்புக்கு பாலாபிஷேகம் ஆகியிருக்கும்.//

இப்படி பல நாள் நடந்துள்ளது. ஒரு நாள் பாலை அடுப்பி வைத்து விட்டு ,ஆட்டோ ஏறி என் தங்கை வீட்டுக்கு போய் விட்டேன் . பாதி தூரம் போனதும் ஞாபகம் வந்து, என் பையனுக்கு போன் பண்ணினால் , அதற்குள் பால் தீர்ந்து,சட்டி கருகி வீடு புல்லா ஒரே புகை மண்டலம்.

வேறு எந்த ஆபத்தும் இல்லாமல் இறைவன் காப்பாத்தி விட்டான்.

Shanmugam Rajamanickam said...

//ஒரு முறை பாலை அடுப்பில் வைத்து விட்டு என் சின்ன பெண்ணிடம் அடுப்புல பால் வெச்சிருக்கேன் பார்த்துக்கோ என்று சொல்லி விட்டு காய்கறி வாங்கப் போனேன். நான் வரும்போது பால் பொங்கி வழிந்திருக்க அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி இது என்றால், நீதானம்மா பார்த்துக்கோன்னு சொன்ன அதான் பார்த்துண்டிருந்தேன் என்றாளே பார்க்கலாம்.//


கலக்கிட்டாங்க,,,

Shanmugam Rajamanickam said...

பால் காச்சுறது எவ்ளோ கஷ்டம்?!,,,

குடந்தை அன்புமணி said...

பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும் பதிவர் தென்றல் மாத இதழ்.விவரங்களுக்கு வாருங்கள்.....

MyKitchen Flavors-BonAppetit!. said...

Maam, I'm ur die-hard fan.What a surprise.Unga Novel Kalyana Sathrangam varai - finished reading.Luv ur decent and family oriented novels.Neega blogspot potirupathe theriyathu.Luvd reading this Paalintri Amaiyathu Ulagam.I write a Foodblog here.Glad to follow U.

Anonymous said...

Madam,
In an era where good Tamil writers are fast diminishing, it is good to know a writer who also blogs.I was shocked that you are writing since 1984. May be you aren't so prolific because you were a working women. I am really aghast that you have managed to strike a balance. Only because of your love for writing you have been able to write so much.

வவ்வால் said...

ஹி..ஹி இந்த பதிவ 1984 ல எழுதி இப்போ மீள்பதிவா போடுறிங்களா? எனக்கு ஒன்னுமே புரியலை.. ஒருத்தர் என்னனா இண்டக்‌ஷன் ஸ்டவ் அ ஈ-குக் அப்படினு சொல்லிட்டு இருக்கார், இன்னும் பால் குக்கர்லாம் சொல்றாங்க, பால் காச்சுறத அணு உலைரேஞ்சுல பேசிக்கிறாங்க, எனக்கு தான் எதாவது கால எந்திரம் பிரபளமா இல்லை இங்கே இருக்கவங்களுக்கா :-((