Friday, December 9, 2011

ஆஹா, மெல்ல நட மெல்ல நட ...

சென்ற சனிக்கிழமைக்கும் முந்தைய சனிக்கிழமை காலை ஒரு ஒன்பதரை மணி இருக்கும். மைலாப்பூர் வடக்கு மாடவீதியில் சரவணபவன் அருகில் சாலையைக் கடக்கலாம் என எண்ணி இரண்டடி எடுத்து வைத்திருப்பேன். ஒரு வினாடி கும்மிருட்டு. ஒரு ஸ்கூட்டர் என்னை இடித்த வேகத்தில் நான் அப்படியே உட்கார்ந்த வாக்கில் கீழே விழுந்திருப்பது அடுத்த வினாடியில்தான் எனக்குப்புரிந்தது. என் தவறா ஸ்கூட்டர் ஒட்டி வந்த இளைஞனின் தவறா தெரியவில்லை. நான் தடுமாறி எழுந்து நின்றேன். பார்த்து வர வேணாமா? இது அந்த இளைஞனின் கேள்வி. நான் நடக்கலாம் என எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தால் இடது காலை ஊன்றவே முடியவில்லை. வலி என்னைப் பிளந்தது. “பார்த்துப் போங்க என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். நான் நடக்க முடியாமல் திகைத்து நின்றேன். ஒரு பெண் உதவிக்கு வர, ஆட்டோ ஒன்று பிடித்து மிகுந்த சிரமத்தோடு எப்படியோ ஏறிக் கொண்டேன். உடனே என் பெரிய பெண் வித்யாவுடன் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன்.

அவள் கீழேயே காத்திருந்தாள. ஆட்டோவிலிருந்து இறங்குவது அதை விட சவாலாயிருந்தது. என் பெண் பயந்து விட்டாள் என்னை காம்பவுண்டுக்குள் ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு மாடிக்குப் போனாள். குழந்தைகள் இருவரையும் சர்வன்ட்டின் பொறுப்பில் விட்டு விட்டு பெண்ணும் மருமகனும் கீழே வந்தார்கள். மறுபடியும் கார் ஏறும படலம். மலர் மருத்துவமனையில் எனக்காக ஒரு சக்கர நாற்காலி காத்திருந்தது. எக்ஸ்ரே பெஞ்ச்சில் ஏறிப் படுப்பதற்குள் வலி பிராணன் போயிற்று.

மனசு குருவாயூரப்பனுடன் தர்க்கம் செய்தது. “இடிச்சு கீழ தள்ளியாச்சு. சந்தோஷம்தானே? அதோட நிறுத்திக்கோ சொல்லிட்டேன். எலும்பு கிலும்பு ஏதாவது முறிஞ்சிருந்துதோ படவா உன்னை சும்மா விட மாட்டேன். அப்டி எதாவது இருந்தா பாவம் என் பொண்ணு கைக்குழந்தைகளோட என்னையும் எப்டி பார்த்துப்பா? அவளை நீ கஷ்டப் படுத்தப்படாது சொல்லிட்டேன்.

சற்று நேரத்தில் என் பெண் வந்தாள். “அம்மா பிராக்ச்சர் இல்ல. லிகமென்ட் டேர் ஆகியிருக்கு. பெல்விக் போன்ல லேசா கிராக் விட்ருக்கு. தானா சரியாய்டும்னார் டாக்டர் என்றாள் அந்த வரை தலைப்பாகையோடு போயிற்று என்றாலும் வலி பெரும் பிரச்சனையாக இருந்தது. இடது காலை ஊனவே முடியவில்லை என்றால் எப்படி நடப்பது? வாக்கரில் கூட நடப்பது சிரமமாகவே இருந்தது. வலி தெரியாமலிருக்க ஊசியும் மாத்திரைகளும் கொடுத்தார்கள். வீடு வந்தால் அங்கே மாற்றொரு சோதனை. லிப்ட் இயங்கவில்லை. மழை வேறு கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய ஆலோசனையே நடந்தது. இறுதியில் சேரில் உட்கார வைத்து தூக்கிச் சென்று விடுவதென்று முடிவாயிற்று.

கார் டிரைவரும் வாச்மேனும் மாடிப்படி வரை தூக்கி வந்து சற்று மூச்சு வாங்குவதற்கு நிற்க என் வில் பவர் விழித்துக் கொண்டது.

“நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிரித்தார்கள். முடிந்தால் ஏறு என்றாள் பெண். கீழ்ப் படியில் உட்கார்ந்தேன். அப்படியே மெது மெதுவாக பின்பக்கமாகவே ஒவ்வொரு படியாக உட்கார்ந்தபடியே ஏறினேன். இனி படிகள் திரும்பும். மறுபடியும் சேர் பயணம். இதுவே அந்தக் காலத்து ராஜ ராணி கதைகளில் வரும் பல்லாக்காக இருந்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். (குசும்புதான்)

இந்த லிகமென்ட் டேர் எப்போது சரியாகும் எப்போது நான் நன்றாக நடப்பேன் என்கிற விக்ரமாதித்யன் கேள்வியோடு படுக்கையில் அமர்ந்தேன். “கழுத அது நடக்கறப்போ நடந்துட்டு போகட்டும். அது வரை இந்த அனுபவத்தையும் என்ஜாய் பண்ணி விட்டு போவோமே. மனம் குதூகலத்திற்கு தயாராயிற்று.

ஆறு வருடம் முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோது உபயோகித்த வாக்கர் புத்தம் புது பெயின்ட் வாசத்தோடு வந்து சேர்ந்தது. பத்து மாத இரட்டைப் பேரக்குழந்தைகள் வாக்கரில் நான் நடப்பதை கண்ணகலப் பார்த்தார்கள். நடக்க முடியவில்லையே தவிர உட்கார்ந்தபடி என்னால் என்னென்ன செய்ய முடியுமோ செய்து கொடுத்தேன்.

என் உலகம் என் பேரக்குழந்தைகளிடம் ஒடுங்கியது. அவர்களும் இப்போதுதான் எதையாவது பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பேரக் குழந்தைகளோடுநானும் நடை பயின்று கொண்டிருக்கிறேன். எப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது! நான் வாக்கர் பிடித்து நடக்கத் துவங்கினால் போதும் ஆளுக்கொரு திசையிலிருந்து தவழ்ந்தோடி வந்து வாக்கரின் இரு பக்கத்தையும் பிடித்துக் கொண்டு நின்று விடுவார்கள்.

வாக்கரில் அழுத்தம் கொடுத்து நடக்கும் போது விலாப் பக்கம் வலிப்பதால் நேற்று வாக்கர் இல்லாமல் சுவற்றைப் பிடித்தபடி கால்களைத் தரையில் இப்படியும் அப்படியுமாய் திருப்பியபடி நான் நடந்தது என் பேரக் குழந்தைகளுக்கு நாட்டியமாடுவது போல் தோன்றியது போலும் அப்படி ஒரு சிரிப்பு இருவருக்கும். அந்த சிரிப்பில் வலி போயே போச் என்பது போலிருந்தது. .

இந்த பதினைந்து நாளில் நானுமே பாதி குழந்தையாகி விட்டேன் எனலாம்.

குழந்தைகள் கேட்பதற்க்காக போடப்படும் நர்சரி ரைம்ஸ் எல்லாம் இப்போது மனப்பாடம். படிக்கிற காலத்தில் ஒன்று கூட உருப்படியாய் சொன்னதில்லை. எங்கே அந்த என் ஒன்றாம் கிளாஸ் மிஸ்? இப்போது வந்து கேட்கட்டும். பஸ்ட் மார்க் எனக்குத்தான் நிச்சயம்..

இதோ பதினைந்து நாட்கள் ஓடியே போய் விட்டது. இன்டர்நெட்டில் லிகமென்ட் டேர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இதில் மூன்று நிலை உண்டாம். முதல்நிலை சாதாரணமானது. நான்கைந்து நாளில் சரியாகி விடும். இரண்டாம் நிலை ஒன்றிலிருந்து இரண்டு மாதம் வரை ஆகலாம். மூன்றாம் நிலைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. ஆக என்னுடையது இரண்டாம் நிலை என்று தெரிந்து கொண்டேன்.

இது இறைவன் எனக்குக் கொடுத்திருக்கும் கட்டாய தற்காலிக ஓய்வு. அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும்தான் நடக்கவில்லையே தவிர மற்றபடி எனக்கு எல்லாம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. வேளா வேளைக்கு என் பெண் சுடச் சுட சாப்பிடக் கையில் கொண்டு வந்து கொடுக்கிறாள். அனுபவி ராணி அனுபவி! கால் சரியானதும் எந்த மலை ஏறலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் மலை ஏறும் நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என் பாலிசி நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும். எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும்.

இது வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே. சாலையில் நடக்கும்போது கவனத்துடன் நடக்க வேண்டும் என்று சொல்லவே எழுதியுள்ளேன்.

தினமும் என் நலம் விசாரிக்கும் “கற்றலும் கேட்டலும் ராஜிக்கும், ராஜி மூலம் விஷயம் தெரிந்து என்னோடு பேசிய கோபி ராமமூர்த்திக்கும் என் நன்றி.

42 comments:

Angel said...

எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும். //
உண்மைதான்.Take care .Get well Soon .
//சாலையில் நடக்கும்போது கவனத்துடன் நடக்க வேண்டும் என்று சொல்லவே எழுதியுள்ளேன்.//

அதுவும் நம்ம ஊர் சாலைகளில் அசாத்திய கவனம் வேண்டும் .

Rathnavel Natarajan said...

இது இறைவன் எனக்குக் கொடுத்திருக்கும் கட்டாய தற்காலிக ஓய்வு. அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

நல்ல மன தைரியம். நல்ல பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துகள் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...
நம் வாழ்க்கை நம் கையில் தான்!
பகிர்விற்கு நன்றி சகோதரி!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

சுபத்ரா said...

//என் பாலிசி நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும்//

மிகவும் ரசித்தேன் அம்மா...
Get well soon. My prayers..

ஸாதிகா said...

இது இறைவன் எனக்குக் கொடுத்திருக்கும் கட்டாய தற்காலிக ஓய்வு. அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும்தான் நடக்கவில்லையே தவிர மற்றபடி எனக்கு எல்லாம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. வேளா வேளைக்கு என் பெண் சுடச் சுட சாப்பிடக் கையில் கொண்டு வந்து கொடுக்கிறாள். அனுபவி ராணி அனுபவி! கால் சரியானதும் எந்த மலை ஏறலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் மலை ஏறும் நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.///

கஷ்டமான அனுபவத்தையும் நகைச்சுவையோடு விவரித்து இருப்பது உங்கள் மனோ தைரியத்திற்கு சான்றுதான்.விரைவில் குணமாகி மலை ஏறி அதனையும் பதிவாக எங்களுடன் விரைவில் பகிர அன்பான வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

//நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும். எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும்.//

ரொம்பச் சரி..

விரைவில் குணமாகி கட்டாய ஓய்வு முடிஞ்சு மலையேற்றத்தையும் எங்க கூட பகிர்ந்துக்கும் நாளுக்காக காத்திருக்கோம்.

சாந்தி மாரியப்பன் said...
This comment has been removed by the author.
விச்சு said...

இது நமக்கு கிடைத்திருக்கும் ஓய்வாகக் கொண்டாலும் வேதனையான ஓய்வு அல்லவா. இப்போது கால் பரவாயில்லையா?

RVS said...

Get well soon!!

பால கணேஷ் said...

அடடா... இத்தனை நாள் நீங்க ப்ளாக் எழுதறதை கவனிக்காமப் போயிட்டனே! (உங்க தாயுமானவன் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்) நீங்க பட்ட கஷ்டத்தைக் கூட நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கறது அருமை. வில்பவர் இருந்தால் போதும் விரைவில் குணமாகி வாருங்கள். நானும் தொடர்ந்து வருகிறேன். நன்றி!

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு.

R. Gopi said...

உங்கள் பதிவு இடுக்கண் வருங்கால் நகுக... எனத் தொடங்கும் குறளை நினைவுறுத்துகிறது.

RAMA RAVI (RAMVI) said...

// நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும். எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும்.//

இவ்வளவு கஷ்டத்திலியும் தங்களின் மன உறுதி போற்ற வேண்டிய ஒன்று.

சீக்கிரம் குணமடைய பிராத்திக்கிறேன்.

ஓய்வு கிடைத்த நாட்களில் உங்க பேரக்குழந்தைகளோடு சந்தோஷமாக இருங்க.

ஜீவன்சிவம் said...

எப்பொழுது பிரச்சனையை நேருக்கு நேர் சந்தித்து அதையும் அனுபவிக்க மனத்தால் முடிகிறதோ அப்போதே
அது அவன் கடன். விரைவில் மீண்டுவர அவன் துணை நிற்பான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தெருவில் போகும் போது மிகவும் உஷாராகவே தான் இருக்க வேண்டியுள்ளது. நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் போதாதகாலம் இதுபோலெல்லாம் நடந்து நம்மை மிகவும் தொல்லைக்கு ஆளாக்கி விடுவதுண்டு. தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளாலும், அவற்றை யாராவது துரத்துவதாலும் கூட பாதச்சாரிகளுக்கு எதிர்பாராத விபத்துகள் நிகழ்வதுண்டு.

தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும், வேதனைகளையும் கூட சுவைபட எழுதியுள்ளீர்கள். அது உங்களின் தனித்திறமை தான்.

குழந்தைகளின் ஆயுஷ்ஹோமத்திற்குள் பாட்டி, பழையபடி எழுச்சியுடன் ஆக வேண்டும் என்பதே எங்கள் எல்லோருடைய விருப்பமும்.

விரைவாக பரிபூர்ண குணம் அடையப் பிரார்த்திப்போம்.

தங்கள் நலம் விரும்பும் vgk

raji said...

மருந்து நம்மகிட்டத்தான் இருக்கு.ரொம்ப சரியா சொன்னீங்க.எந்த நோய்க்கும் மருத்துவர்கள் என்னதான் குணமாக மருந்து கொடுத்தாலும் நாம குணமாக நாம்தான் முதல்ல நம்பிக்கையோட இருக்கணும்.

என்னது பல்லக்கு வேணுமா?சரி அப்படியே உக்காந்துகிட்டு பொன்னியின் செல்வன் படிப்பீங்களாம்.அதுல பல்லக்கு வருமாம்

குழந்தைகளுக்கு நடக்க கத்து தர வேண்டியதுதான்.அதுக்குன்னுட்டு இப்டி கீழ விழுந்து ப்ராக்டிகல் க்ளாஸ்தான் எடுப்பேன்னுலாம் அடம் பிடிக்கப் படாது

பதிவிலயே அப்டியே ஒரு நர்சரி ரைம்ஸ் எடுத்து விட்டிருக்கலாம்.கரக்டா சொல்றீங்களான்னு நாங்கள்ல்லாம் செக் பண்ணியிருப்போமாக்கும்.

அப்பாதுரை said...

எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு கொண்ட உங்களை துன்பம் நெருங்க சிரமப்படும்.

ஹுஸைனம்மா said...

உங்க பாஸிடிவ் அப்ரோச் எங்களுக்கும் தைரியம் தருது. Get well soon!!

நிலாமகள் said...

நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும். எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும்.//

விரைவில் ந‌ல‌ம‌டைய‌ நாங்க‌ளும் பிரார்த்திக்கிறோம். குருவாயூர‌ப்ப‌னோடான‌ 'பேச்சு வார்த்தை'யை மிக‌ ர‌சித்தேன். 'அஹ‌ம் பிர‌ம்மாஸ்மி' என்ப‌தால் 'சினேக‌ பாவ‌ம்' வெகு பொருத்த‌ம்தான்.
தாங்கிப் பிடிக்க‌ உற‌வும் ந‌ட்பும் இருக்க‌ எத்த‌னை இட‌ர்வ‌ரினும் என்ன‌?
அதுவும் ந‌கைச்சுவையுண‌ர்வு நிர‌ம்பிய‌ வாழ்த‌லை அத‌ன் வ‌லியையும் சேர்த்து அனுப‌வித்துப் பார்க்க‌ ஆவ‌ல் கொள்ளும் ஒருவ‌ருக்கு...?!
என் பைய‌ன் ஒரு முறை இதுபோல் ப‌ள்ளியில் எதிரில் ஓடிவ‌ந்த‌வ‌னுட‌ன் த‌டுக்கி விழுந்து லிக‌மெண்ட் டேர் ஆன‌போது ம‌ருத்துவ‌ம‌னையில் உட்கார்ந்திருந்த‌ வீல் சேரை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான். ப‌க்க‌த்து நோயாளிக‌ளெல்லாம் விய‌ப்புட‌ன் நோக்கின‌ர்.வ‌லியும் வேத‌னையும் அவ‌ர்க‌ளை வாட‌ச் செய்திருந்த‌து. இந்த‌ வாய்ப்பை விட்டால் அந்த‌ விளையாட்டு விளையாட‌ முடியாதாம்! தோன்றிய‌ போதெல்லாம் ப‌டுக்கையிலிருந்து எழுந்து வார்டிலிருக்கும் வீல் சேரில் உட்கார‌ வைக்க‌ச் சொல்வான்.
பேர‌ப்பிள்ளைக‌ளுட‌ன் ந‌டை ப‌ழ‌குவ‌து யாருக்கும் கிடைக்காத‌ பாக்கிய‌மே.

மீனாட்சிசுந்தரம் சோமையா said...

மிகவும் நேர்மறை சிந்தனையுடன் ஒவ்வொரு வினாடி அனுபவத்தையும் மகிழ்ச்சியுடன் கழித்திருக்கீறிர்கள் மிகுந்த மன பக்குவம் இல்லை என்றால் இயலாது வாழ்க வளமுடன்

yellam nanmaikae said...

“கழுத அது நடக்கறப்போ நடந்துட்டு போகட்டும். அது வரை இந்த அனுபவத்தையும் என்ஜாய் பண்ணி விட்டு போவோமே.” மனம் குதூகலத்திற்கு தயாராயிற்று.

இது இறைவன் எனக்குக் கொடுத்திருக்கும் கட்டாய தற்காலிக ஓய்வு. அதை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

மருத்துவர்கள் கூறும் கால கட்டத்திற்கு முன்னதாகவே நீங்கள் பூரண குணம் அடைந்துவிடுவீர்கள். இறையருள் கூடி வரும்.
என்று உங்கள் உடல் மண வலியை மறந்து மகிழ்வை ஏற்று கொண்டுவிட்டதோ, அன்றே உங்கள் துயரம் யாவும் நீங்கி விட்டது.
அருணாசலம் சோமசுந்தரம்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ஏன்ஜெலின்
நன்றி ரத்தினவேல்.
நன்றி சுபத்ரா
நன்றி தனபாலன்
நன்றி சாதிக்கா,
நன்றி அமைதிச்சாரல்
நன்றி விச்சு
நன்றி ஆர.வி.எஸ்
நன்றி கணேஷ்
நன்றி கோபி,
நன்றி ஹுசைனம்மா
நன்றி காஞ்சனா
நன்றி வை.கோ.சார்
நன்றி ராம்வி.
நன்றி ஜீவன் சிவம் அய்யா
நன்றி ஜெயக்குமார்
நன்றி ராஜி

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி நிலாமகள். உங்கள் பையனின் குணம் பெரியவர்களுக்கும் இருந்து விட்டால் துன்பங்களை சுலபமாகக் கடந்து விடுவோம்.

ஸ்ரீராம். said...

உங்கள் பாசிட்டிவ் எண்ணமும் வலியை பொருட்படுத்தாது எழுத்தில் தெரியும் நகைச்சுவையும் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது. சீக்கிரம் குணமாக எங்கள் பிரார்த்தனைகள்.

rishvan said...

உங்களின் நகைச்சுவை உணர்வு உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது..... நலம் பெற கடவுளை வேண்டிக்கொள்கிறென்.

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

சிவகுமாரன் said...

உங்கள் வலியை எங்களுக்கும் transfer செய்து விட்டீர்கள் வித்யா மேடம். நலம் பெற வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

விரைவில் நலம் பெற விழைகிறோம்.

radhakrishnan said...

உங்கள் நேற்மறைச்சிந்தனை மிகவும்
பயனுள்ளது.எல்லாரும் கடைபிடிக்க
வேண்டியது.அநுராதா ரமணன் அவர்களும் இப்படி எதையும் பாசிடிவ்வாக எடுத்துக் கொண்டு வருவதை எதிர்நோக்குவார்.அவருக்கு வராத நோய்களா? கஷ்டங்களா?
பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா

radhakrishnan said...

உங்கள் தொலைக்காடசிப் பேட்டியை
இன்றுதான பார்த்தேன்.மிகவும்நன்றாக
இருக்கிறது.நேரநெருக்கடியால் பலகதைகளைப பற்றி உங்களால்
விவரமாக்கஃ கூறமுடியவில்லை என்று
நினைக்கிறேன்.உங்கள் மாஸ்டர்பீஸ்
என்று நான் கருதும் ''ஆகாய தூது''
பற்றி எதுவும் கூறவில்லையே. அந்த நாவல் பற்றி பதிவு ஏதேனும் கொடுத்திருக்கிறீர்களா? தி.ஜா. போல
அந்த கிராமத்தின் வர்ணனையில்
நான் மனதைப பறி கொடுத்திருக்கிறேன்.தென்னங்காற்று
உடனே படிக்க வேண்டும்.நனறி
அம்மா

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ராதாகிருஷ்ணன்.

குறையொன்றுமில்லை. said...

நான் இன்னிக்குத்தான் உங்க பக்கம் வரேன்னு நினைக்கிரேன். நீங்களும் நம்ம பக்கம் வாங்க. நமக்குன்னு ஒரு கஷ்ட்டம் வரும்போது ஒரு சக்தி நமக்குள்ளே வந்துடும் போல இருக்கு.உங்க அனுபவம் சுவாரசியமா சொல்லி இருக்கீங்க எனக்கும் இதுபோல நிறையாவே உண்டு அப்பப்போ என் பதிவில் சொல்லி இருக்கேன். எல்லாத்தையும் டேக் இட் ஈசி யா எடுத்துக்கர மனோ பக்குவம் வந்துட்டா எதுவும் கடந்து போம் தான் இல்லியா?

மனோ சாமிநாதன் said...

வலியுடன் ஒரு அனுபவ‌ப் பகிர்வு! வலியும் நகைச்சுவையாய் மிளிர்கிறது!! எதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ள நிறைய பேருக்கு உங்களின் தைரிய வ‌ரிகள் உபயோகப்படும் வித்யா!

Angel said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

இராஜராஜேஸ்வரி said...

எல்லா நோய்க்கும் நமக்குள்ளேயே மருந்து இருக்கிறது. அதுதான் நம்மை வேகமாகக் குணப்படுத்தும்.'

அருமையான அனுபவப்பகிர்வு..

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்..

Thoduvanam said...

Wish you a happy new year,belated though.Happy pongal..in advance..get well soon..please relax only to revitalize..Nice reading..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என் பாலிசி நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அது மீண்டும் கிடைக்காது. எனவே அதை மகிழ்ச்சியோடு அனுபவித்து விட வேண்டும்//


GET WELL SOON NOT JUNE!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்னங்க ஆச்சு..ஒரு சாதாரண ஸ்கூட்டர் தானே இடிச்சது..இதுக்குப் போய் அலட்டிக்கலாமா...
விட்டு தள்ளுங்க..தூக்கி கடாசி எறிஞ்சுட்டு எழுத வாங்க..எத்தனை நாளாயிற்று உங்கள் எழுத்தைப் பார்த்து!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது. பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.

"ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

நலம் பெற பிராத்தனைகள் அக்கா.

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

Krishnakumar Sathiyawageeswaran said...

Dear Madam,

I am writng a too much belated message about this accident happened to you at North Mada street. It is long time since I opened my blog in full as I put follow up for your blogs. I have been writing to Govt. on making some of the roads as walking only streets. Typical Govt. dept. answers only I am getting. We have to gather to ensure same thing doesnt happen to others. Hope you are doing very well now. I am sorry for the belated message.Just I was giving a reference about you to a budding writer about you. I was sharing your blog details to him. then only it struck me I have not gone through that & it brought me here today.