Monday, March 7, 2011

பெயர்க் காரணம்

பெயர்க் காரணத்தை ஆரம்பித்து வைத்த ராஜிக்கும், தொடர் பதிவு எழுத அழைத்த கோபிக்கும், நன்றி.

எனக்கு பல பெயர்கள் (அம்பாள் மாதிரி?) எல்லாவற்றிற்கும் காரணம் சொல்ல வேண்டாமா?

எக்மோர் ஹாஸ்பிடலில் அன்று ஒரு குழந்தை சிரித்துக் கொண்டே பிறந்ததாம். (இந்தக் கதைதானே வேணான்றதுன்னு யார் முணுமுணுப்பது?)

சூரியன் சுட்டுப் பொசுக்கும் நட்ட நடு மே மாதம். ஒரு பெண் பிரசவ வேதனையும் பிரார்த்தனயுமாய் தவிக்கிறாள். என்ன பிரார்த்தனை என்கிறீர்களா? இருக்கிறதே. வரிசையாய் நான்கு பெண்கள் (மூன்றாவது தவறி விட்டது.) இது நான்காவது முயற்சி. இதுவாவது பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கட்டுமே என்கிற பிரார்த்தனைதான்.. தாயின் பிரார்த்தனை கேட்டு வயிற்றுக்குள் பிறப்புக்குக் காத்திருந்த எனக்கு சிரிப்பாக இருந்தது. ஒரு பெண்ணாக முழுவதும் உருவாகி விட்ட பிறகு காதில் விழுந்த பிரார்த்தனை கேட்டு சிரிக்காமல் என்னசெய்ய?

அம்மா: கடவுளே இதுவானம் பிள்ளையா பொறக்கணும்

கடவுள்: இதுவும் பிள்ளை மாதிரிதான். உருவத்தில் என்ன இருக்கிறது? நிறைய சாதிப்பாள் உன் பெண்

அம்மா: அதெல்லாம் வேண்டாம். கொள்ளி போட ஒரு பிள்ளை போதும்.

நான் (உள்ளேயிருந்து): கொள்ளி வைக்க என்னாலும் முடியும் அம்மா. நான் வைத்தாலும் நீ ஜோராக எரிவாய். ::

அம்மா: கடவுளே பிள்ளை வேண்டும்

கடவுள்: நீ மீண்டும் முயற்சி செய். இம்முறை என் விருப்பப்படி பெண்தான்.

நான்: நன்றி கடவுளே. உன்னை இறுதி வரை நினைத்துக் கொண்டிருப்பேன். நீ எந்த மலை மீது இருந்தாலும் ஏறி வந்து பார்ப்பேன். (கயிலாயம், பொதிகை,முக்திநாத், சதுரகிரி என்றுமலை மலையாய் ஏறி இறங்கின காரணம் புரிந்திருக்குமே) என்னைப் படைத்த உன்னை நானும் படைத்துக்கொண்டேயிருப்பேன்

(நான்தெய்வ திரு உருவங்களை ஓவியமாகப் போடுவதன் காரணமும் புரிந்திருக்குமே

இப்படித்தான் நான் சிரித்துக் கொண்டே பிறந்தேன்)

பெண்ணா? அம்மா முகம் சுருங்கி விட்டது. கவலைபடாதே அம்மா. நான் நன்கு படிப்பேன். வேலைக்குப் போவேன். இதர கலைகளையும் கற்பேன். பின்னாளில் BLOG எல்லாம் எழுதுவேன் அம்மா.

அம்மா காதில் விழுந்ததா எனத் தெரியவில்லை. எங்கே என் அப்பாவைக் காணவில்லை. பெண் என்பதால் அவருக்கும் ஏமாற்றமா?

“பெண் கொழந்த அழகா இருக்குடா பார்த்தா விட மாட்ட(அது சரி. நெனப்ஸ் தான் பொளப்ச கெடுக்கும்ன்னு சித்ரா முனகுவது கேட்குது.) என் அத்தை அப்பாவிடம் சொல்ல அப்பா ஆஸ்பத்திரி வந்து என்னைப் பார்த்தவர்தான். சாகும் வரை என் மீது தனி அன்பு அவருக்கு.

இனி பெயர்க் காரணம் பார்ப்போம். மயிலாப்பூரில்தான் அப்போது வாசம்.(இப்போதும்தான்) கோயிலில் வேறு எதோ விசேஷம். எனவே கற்பகவல்லி என்று பத்தாம் நாள் நெல்லில் பெயரெழுதி காதில் மூன்று முறை சொன்னதோடு சரி. அதன் பின் அந்தப் பெயரை கல்யாணப் பத்திரிகையில்தான் மீண்டும் பார்த்தேன். (கற்பகவல்லி என்கிற உஷா.) (நானும் கப்பிதான் ராஜி) இந்த உஷா என்கிற பெயர் என் பெரியக்கா வைத்ததாம் கற்பகவல்லி கர்நாடகப் பெயர். மாடர்னா வைக்கணும் என்று வைத்ததாக அறிந்தேன்.

ஆக கற்பகவல்லி அலைஸ் உஷாவானேன். அந்த உஷாவும் செல்லமாக உஷிக் குட்டியாகி விட்டது. எனக்கு நகை நட்டு எதுவும் பிடிக்காது. சின்ன வயதில் ஒரு பாசி மாலை கூட அணிந்ததில்லை. ஆனாலும் என் அத்தை மகன் என்னை குருவிக்காரி என்று அழைத்ததன் காரணத்தை அவனிடம்தான் கேட்க வேண்டும்.

சின்ன வயதில் சலசலவென்று பேசிக்கொண்டேயிருப்பேன். வாயாடி என்பது டீச்சர் வைத்த பெயர்.

தெருவில் ஆம்பளைப் பசங்க விளையாடும் அத்தனை விளையாட்டையும் விளையாடி இருக்கிறேன். கில்லி, கோலி, முந்திரிக்கொட்டை வைத்து கோலி மாதிரி ஆடுவது, பம்பரம் விடுவது, மாஞ்சா போட்டு காற்றாடி விடுவது என்று ஒன்றையும் விட்டு வைத்ததில்லை. எங்கள் வீட்டு மாடிக்கு செல்ல ஒரு போதும் படிகளை உபயோகித்தது கிடையாது. தண்ணீர்க் குழாய் மூலம்தான் ஏறிப் போயிருக்கிறேன். அதனால் ரவுடி ராக்கம்மா என்று ஒரு பெயரும் உண்டு. யார் வைத்தது என நினைவில்லை.

எனக்கு மறதி அதிகம். மிளகாய் வாங்கி வரச் சொன்னால் சீயக்காய் வாங்கி வரும் ரகம். அதனால் அரணை என்றும் ஒரு பெயருண்டு. என் மறதி குறித்து ஒரு பதிவு எழுத மறந்து விட்டது.

ஏழெட்டு வயசில் அம்புலிமாமா வாசிக்க அர்ரம்பித்த பிறகு ஒரூ சுப முகூர்த்தத்தில் முழு நிலா என்னும் நாவலை படித்தேன். பிறகு தொடர்ந்து வாசிப்புதான். கல்கியும், சாண்டில்யனும், தேவனும், தி.ஜா. வும் ஒரு கட்டத்தில் என்னை மிகவும் பாடாய்ப் படுத்த உங்க கெட்ட நேரம், நான் எழுத்தாளினி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன பெயரில் எழுதலாம் என்ற கேள்வி குடைந்தது. சொந்தப் பெயரில் எழுதுவதில் சுவாரசியமில்லை. நான் சுஜாதாவின் சிறுகதைகளுக்கு அடிமை. எனது துரோணாச்சாரியாரும் அவர்தான்.(கட்டை விரல் கேட்காத) .

எனவே, எழுதுவதற்கு முதலில் . நான் தேர்ந்தெடுத்த பெயர் சுஜாதாப்ரியா

ம்ஹும்.. க்ளிக்காகவில்லை.. (சுஜாதா தப்பித்தார்.) பிறகு உஷா என்றே எழுதினேன். அப்போது இன்னொரு உஷாவும் இருந்தார். சரி வேண்டாம் என நினைத்தபோது, ஒரு சுப முஹூர்த்தத்தில் திருமதி சுப்ரமணியம் ஆனேன். ஆஹா உஷா சுப்ரமணியம் என்றே எழுதலாம் என சந்தோஷப் பட இயலவில்லை. ஏனெனில் என்னைவிட சீனியர் எழுத்தாளர் உஷா சுப்ரமணியம் அபோது பிரபலமாக இருந்தார். (ஆமா...! ஏதோ என் கதைக்காக பத்திரிகைகள் எல்லாம் வரிசையில் காத்திருக்கிறார் போல் நான் பெயர் தேடிக் கொண்டிருந்தேன்.)

ஒருவழியாய் என் பெண் பிறந்ததும் பெயர்ப் பிரச்சனை தீர்ந்தது. நான் வித்யா சுப்ரமணியம் ஆனேன். என் பெண் மாஸ் கம்யூனிகேஷன் முடித்து தூர்தர்ஷனில் செய்தியாளராகப் பணியாற்றிய போது அவளது பெயரும் வித்யா சுப்ரமணியம்தான். போன் வந்தால் கூத்துதான்.

இட்ட பெயர் கற்பகவல்லி, அழைக்கப்பட்டது உஷா, நானே எனக்கு வைத்துக் கொண்டு பிரபலமாகி பெயர் பெற்றது வித்யா சுப்ரமணியமாக. இதற்கு நடுவில் பட்டப் பெயர்கள் வேறு. பெண்கள் என்னை அழைப்பது அம்மா என்று. சக பதிவர்களுக்கு சகோதரி. இப்போது பாட்டி என்று அழைக்கவும் இரண்டு குழந்தைகள் வந்தாயிற்று.

எந்த பெயருக்குள்ளும் நான் நானாக மட்டுமே இருக்கிறேன். எனக்குள் இருக்கும் குழந்தை மனம் அவ்வப்போது மேலே வந்து எட்டிப் பார்க்கும். அது என்னோடு இறுதி வரை இருக்கும்.

ஆக மொத்தம் பெயர் என்பது ஒரு அடையாளம். பிறந்த நிமிடம் குழந்தை என்பார்கள். இறந்த நிமிடம் பாடி என்பார்கள். இறப்புக்குப் பின்னும் என் பெயர் சொல்கிராற்போல் எனது சில படைப்புகளாவது இருக்கும் என நம்புகிறேன். வாழும்போது புகழ் பெற்று மரணத்திற்குப் பின்னும் அவன் பெயர் போற்றப் படுவதே உண்மையான வாழ்வு. பாரதியார், விவேகானந்தர், காந்தி, ரமணர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அதுவே உண்மையில் சாகா வரம். (ரொம்ப அறுத்துட்டேனோ?)

14 comments:

R. Gopi said...

சூப்பர்.

கட்டை விரல் கேட்காத துரோணர், மறதி குறித்த பதிவு எழுத மறந்தது எல்லாமே சுவையாக இருக்கின்றன படிப்பதற்கு.

எனக்கென்னவோ பேரப் பிள்ளைகள் வந்ததும் ஒரு கூடுதலான உற்சாகம் உங்கள் எழுத்தில் தொற்றிக்கொண்டுவிட்டது என்று நினைக்கிறேன்:-)

ஹுஸைனம்மா said...

வாவ்!! ரொம்ப சுவாரசியமா எழுதிருக்கீங்க.

//எந்த பெயருக்குள்ளும் நான் நானாக மட்டுமே இருக்கிறேன்.//

ரொம்ப கரெக்ட்!!

Gopi Ramamoorthy said...//பேரப் பிள்ளைகள் வந்ததும் ஒரு கூடுதலான உற்சாகம் //

பெர்ரீய்ய ரிப்பீட்டு!! ;-))))))

pichaikaaran said...

என் பெயர் சொல்கிராற்போல் எனது சில படைப்புகளாவது இருக்கும் என நம்புகிறேன்"

நீங்கள் யார் என தெரியாத காலத்தில்யே உங்கள் எழுத்து என்னை பாதித்து இருக்கின்றன.. இவர் யார் என தேடியதுண்டு...

Ahamed irshad said...

Good Post Madam :)

Chitra said...

கடவுள்: நீ மீண்டும் முயற்சி செய். இம்முறை என் விருப்பப்படி

பெண்தான்.


....Excellent!

Chitra said...

நானும் இன்றுதான் அழைப்பு ஏற்று ...பெயர் காரண பதிவு போட்டு இருக்கிறேன். உங்கள் பேரக்குழந்தையுடன் நல்லா நேரம் போகுதா?

raji said...

1.மேடம்,பெயர்க்காரணத்தை முதன்முதலில் தொடங்கி வைத்து
புண்ணியம் தேடிக் கொண்டவர் பதிவர் ஸ்ரீ அகிலா அவர்கள்.

2.ஹை! நீங்களும் கப்பிதானா?

3.அட!எனக்கும் நகைகள் மேல் காதல் கிடையாது.
நானும் சிறிய வயதில் அண்ணாக்களோடு கொய்யா மரத்தில்
எல்லாம் ஏறி அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கேன்

4.பெயர்க்காரணம் சூப்பர்.யார் எப்படி கூப்பிட்டாலும்
பேரக்குழந்தைகள் பாட்டி என்று கூப்பிடும் போது சிலிர்த்து விடும்தான்

5.ஹூசைனம்மா சொன்னது போல் நீங்கள் யார் என்று உங்களை
வாசித்த பின் பல முறை தேடியிருக்கிறேன்(இப்பதான் வலை போட்டு கண்டு பிடிச்சிட்டோம்ல)

6.எனக்கு நீங்க எழுத்தாளினி ஆனதும் உங்க அறிமுகம் கிடைச்சதும் நல்ல நேரம்தான்,

7.எனக்கு நீங்க "மேடம்" தான்.இந்த பெயரை விட்டுட்டீங்க(எவ்வளவு மருவாதியா கூப்பிடறோம்)

எல் கே said...

அந்த காலத்தில் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ரெண்டு பெயர் இருக்கும்


ஒரே பேர்ல ரெண்டு பேரு .பல குழப்பங்கள் வருமே

சகாதேவன் said...

கற்பகவல்லி நின் பொற்கரம் பதிந்த
ப்ளாக ஐ நான் படித்தேனம்மா

நன்றாக இருக்கிறது.
சகாதேவன்

middleclassmadhavi said...

பெயர்க் காரணங்களை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்! உங்கள் மகளின் பெயரை select செய்தது மிகப் பொருத்தம்!!

சாந்தி மாரியப்பன் said...

//அம்மா: கடவுளே இதுவானம் பிள்ளையா பொறக்கணும்

கடவுள்: இதுவும் பிள்ளை மாதிரிதான். உருவத்தில் என்ன இருக்கிறது? நிறைய சாதிப்பாள் உன் பெண்//

உண்மையான வார்த்தைகள்.. அருமையான இடுகை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நாம இந்த பூவுலகை விட்டுப் போன பின்பும்,ஒரு பத்து பேராவது நம்மை நினைக்கணும்னா, எதுக்கு, மண்டை,மூளையை கசக்கிட்டு கதை எளுதணும்..ஒரு பத்து பேர் கிட்ட கடன் வாங்கிட்டு மண்டையை போட்டோம்னா, அவங்க காலம் பூராவும் பய மக்க நம்மள நினைக்க மாட்டாகளா?

banumathi said...

உங்களின் எழுத்து திறமைக்காகவே இவ்வளவு நாளாக உங்கள் கதைகளையும் (இப்போது பதிவுகளையும்) நாங்கள் படித்துக்கொண்டு வருகிறோம், அதனால் உங்கள் படைப்புக்கள் எப்போதுமே சாகா வரம் பெற்றவையாகவே இருக்கும்

thirukkannapurathaan said...

உங்கள் பெயர்க்காரணம் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. உங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வீட்டில் சந்தித்தது ஞாபகத்திற்கு வந்தது. ( ஆன்மிக மாத இதழில் பணிசெய்தபோது மேகலா, நந்தின் மாத இதழுக்கு நாவல் வாங்க வந்திருக்கிறேன்.)