Sunday, November 28, 2010

தாய் மண்ணே வணக்கம்

சுற்றிலும் வெள்ளிப் பனி மலைகள்
சல சலவென ஓடும் நதிகள்
மனிதர்களில்லாத உயரத்தில்
பிராண வாயுவும் கூட குறைவாகவே
உள்ள இடத்தில் நான் மட்டும்
தனித்திருக்கிறேன், விழித்திருக்கிறேன்,
பசித்திருக்கிறேன், உங்களைப் பாதுகாக்க.


என் குடி நீர் வாயருகில் செல்வதற்கு முன்
உறைந்து விடும். என் உணவில் இரு சுவைதான்
ரொட்டியும் பருப்பும் மட்டுமே.
என்னை மகிழ்விக்க அங்கே எதுவுமில்லை
என் குடும்பம் புகைப் படமாய் என் பர்சில்.
என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீர்ந்து பல நாளாகிறது.
என் பொழுதுபோக்கு என் வீட்டிலிருந்து
எழுதப்பட்ட கடிதங்களே.
என் குழந்தையின் அசைவும் அழுகையும்
சிரிப்பும் எனக்குள் நான் சேமித்து
வைத்திருக்கும் சக்தி.

ஹோவென கூச்சலிடும் பேய்க் காற்றும்
சுள்ளென தசைச் சுடும் சூரியனும்
ஊசியாய் தரையிறங்கும் மழையுமாய்
சட்சட்டென பருவநிலை மாறினாலும்
என் பணி விழித்திருப்பதே எந்நேரமும்.
மாசற்ற வானில் கோடிகோடியாய்
மின்னும் நட்சத்திரங்களே உற்ற துணையாய்
என் இரவுகள் கரையும்.

எந்நேரமும் எமனை முதுகில் சுமந்து செல்லும்
நானும் இந்திய அரசு ஊழியன்தான்.
இந்தியாவைக் காக்கும் அரசு ஊழியன்.
எனது ஒவ்வொரு விடியலுமே நிச்சயமற்ற பிச்சைதான்
இருப்பினும் தினமும் நான் உற்சாகமாகவே
புதிதாய்ப் பிறக்கிறேன்.

எங்கள் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில்
வீர மரணம் அடைந்திருக்கிறார்கள்.
கார்கில் போரில் என்னுயிர்த் தோழனின் மரணம்
கண் முன்னே கண்டவன் நான்.

எங்கள் சாமி இந்தியத் தாய்தான்
எங்கள் மந்திரம் தாய் மண்ணே வணக்கம்தான்.

நா செத்துட்டா அழக்கூடாது
சல்யுட் அடித்து கர்வப்படனும் சரியா?
எனக்குப் பிறகு நீ அனாதையில்லை
என் சாமி உன்னை கை விட்டு விடாது

இது என் மனைவிக்கு இரு மாதம் முன்பு
நான் அனுப்பிய கடிதம்.

என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீருவதற்கு முன்
நான் கேட்ட கடைசி செய்தி கார்கில் வீட்டு
மனைகள் பற்றிய ஊழல்தான்.
செத்தவன் பேரைச் சொல்லி யாராரோ
அபகரித்திருக்கிறார்களே!
என்ன கொடுமை ஐயா இது?

நாளை என் குடும்பத்திற்கும்
இதே நிலைதானா? இதற்காகவா
இங்கே நான் தனித்திருக்கிறேன்,
விழித்திருக்கிறேன், பசித்திருக்கிறேன்?

பிள்ளைக்கறி தின்னும் இந்த
காட்டு மிராண்டிகளையுமா பெற்றிருக்கிறாள்
என் இந்திய அன்னை?

உண்மையில் யாரைக் காப்பாற்றிக்
கொண்டிருக்கிறேன் நான் ?

தேசத் துரோகிகள் உள்ளேயும் இருக்கிறார்கள்
என் துப்பாக்கி முனை உட்புறமாய் திரும்பி விடுமோ ?
என் கரம் நடுங்குகிறது, இன்னொரு விடுதலைப்போர்
வேண்டும் அவசியம், நம்மை நம்மிடமிருந்து
காப்பாற்றிக் கொள்ள.

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி- கிளியே
வாய் சொல்லில் வீரரடி!







11 comments:

Unknown said...

//என் துப்பாக்கி உட்புறமாய் திரும்பி விடுமோ ?
என் கரம் நடுங்குகிறது, இன்னொரு விடுதலைப்போர்
வேண்டும் அவசியம், நம்மை நம்மிடமிருந்து
காப்பாற்றிக் கொள்ள//
அருமையான வரிகள்,கதர் சட்டை போட்ட குள்ளநரிகளை களை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது

Rekha raghavan said...

//என் டிரான்சிஸ்டரில் பாட்டரி தீருவதற்கு முன்
நான் கேட்ட கடைசி செய்தி கார்கில் வீட்டு
மனைகள் பற்றிய ஊழல்தான்.
செத்தவன் பேரைச் சொல்லி யாராரோ
அபகரித்திருக்கிறார்களே!
என்ன கொடுமை ஐயா இது?//

உண்மைதான். என்ன கொடுமைங்க இது? சுடும் கவிதை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//என் பொழுதுபோக்கு என் வீட்டிலிருந்து
எழுதப்பட்ட கடிதங்களே.//

உண்மைதான். அதே சமயம் வித்தியாசமான
கற்பனை!
கார்கில் ராணுவ வீரனின் மன புழுக்கத்தை;
அரசியல் பற்றிய வெறுப்பை
தீக்கனல் வார்த்தைகளில் வ(வெ)டித்த
கவிதை!

ரிஷபன் said...

//எனது ஒவ்வொரு விடியலுமே நிச்சயமற்ற பிச்சைதான்
இருப்பினும் தினமும் நான் உற்சாகமாகவே
புதிதாய்ப் பிறக்கிறேன்.//

ஆஹா..
மனக் குமுறலின் வெளிப்பாடு அப்படியே அக்னிக் கங்குகளாய்..கவிதை முழுவதும்.
ஏன் நம் தேசம் இப்படி ஆனது.. இந்த அரசியல்வாதிகளிடமிருந்து எப்படி காப்பாற்றப் போகிறோம்..
//என் துப்பாக்கி முனை உட்புறமாய் திரும்பி விடுமோ ?// இந்த சிந்தனை ஒரு அபாயத்தையும் அல்லவா சுட்டுகிறது..

R. Gopi said...

ராணுவ வீரனின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அடப் பாவி? அடி மடியிலும் கை வைத்து விட்டார்களே!

raji said...
This comment has been removed by the author.
raji said...

உண்மையில் நாட்டின்
உள்பக்கம்தான் பிராணவாயு குறைபாடு
உள்ளது அல்லவா?

பிஞ்சுப்பூக்களை பிய்த்து எறியும்
பிண வெறியர்களையும்
பணவெறியர்களையும்
பொடிப்பொடியாக்க உன் ஒரு
துப்பாக்கி முனை போதாது

நடுங்காத கரங்களுடன் பல
முனைகள் திரும்ப வேண்டும்

விஷ விதைகளை களைய ஒரு
வித்யாவின் வார்த்தை சாட்டைகள் போதாது

ஓட்டை சட்டங்களை ஒழுங்கமைக்க
ஓராயிரம் கோடி கரங்கள் ஒன்று கூடட்டும்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கிடில்?

raji said...

மொழி மாற்றப்படாத கருத்துரை அனுப்பியமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உடனடியாய் பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் எந்நன்றி. ஊழல் குறைய நம்மாலானதைச் செய்வோம்

krish said...

கொஞச காலம் ராணுவ ஆட்சி வந்தால் தான் இந்தியா மாறும்

கிருஷ்ண்மூர்த்தி