Tuesday, April 20, 2010

தனிமையும் இனிமையும்

        கொஞ்சம் தனிமையும், நல்ல புத்தகங்களும்  கொடுக்கின்ற வாசிப்பு சுகத்திற்கு ஈடு வேறு எதுவுமில்லை என்று அடித்துச் சொல்வேன். பொதுவாக அந்த மூன்று நாட்கள் வரும்போது  முகம் சுழிப்பதற்கு பதில்  நான் முகம் மலர்ந்திருக்கிறேன். தனிமையாய் ஒரு இடம், (வாசல் ரேழியில் மறைப்பு கட்டி விட்டால் தனிமைதானே?)  எந்த வீட்டு வேலையும் செய்ய வேண்டாம். வேளா வேளைக்கு சூடான பானமும், சிற்றுண்டியும், சுடச் சுடச் சாப்பாடும்  கொரிப்பதற்கு பட்சணங்களும் டாணென்று என் இருப்பிடத்திற்கு வந்து விடும்.  நாள் முழுவதும் படித்துக் கொண்டிருந்தாலும் யாரும் திட்ட மாட்டார்கள்.  அதுவும் அனைவரும் பரபரப்பாக இயங்க ஆரம்பிக்கும் விடியற்காலத்தில், நான் மட்டும் கடல்புறாவில் பயணம் செய்து கொண்டிருப்பேன். மால்டோவா குடித்தபடி, தோசை சாப்பிட்டபடி உணவு உண்டபடி என்று நாள் முழுக்க புத்தகம் படித்த சுகம் இருக்கிறதே! அது ஒரு அற்புதமான காலம் என்றுதான் சொல்ல வேண்டும். புத்தகங்கள் இன்பம் என்றால் புத்தகம் வாசித்தபடி சாப்பிடுவது பேரின்பம்.  இன்று வரை வாசித்தபடி  சாப்பிடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நல்ல உணவு  உடலுக்கு ஆரோக்கியம்.  நல்ல புத்தகங்கள் உள்ளத்திற்கு ஆரோக்கியம்.  காலமும் கடமைகளும்  இன்று   என் வாசிப்பு நேரத்தைக் குறைத்திருந்தாலும் புத்தகங்களோடான என் காதல் குறையவில்லை.
            அம்புலி மாமாவிற்குப் பிறகு நான் படித்த முதல் தொடர்கதை முழு நிலா எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அதே நேரம், நான் வாசித்த முதல் சிறுகதை எதுவென நினைவில்லை.  நான் பார்த்த முதல் சினிமா நினைவிருக்கிறது. எனக்கு ஏழு அல்லது எட்டு வயசிருக்கும் . என் அத்தையோடு வள்ளியூரில் ஒரு கொட்டகையில் பெஞ்ச் டிக்கெட்டில் பார்த்த படம் தூக்குத் தூக்கி. மலங்க மலங்க படம் பார்த்ததும், பாதியில் தூங்கிப் போனதும் நன்கு நினைவிருக்கிறது.
             நான் படித்த முதல் சிறுகதைதான் நினைவில்  இல்லையே தவிர என்  நினைவில் நிற்கும் சிறுகதைகள் ஏராளம். தி. ஜா. வின் கண்டாமணியும், சண்பகப் பூவும்,  லா.சா.ரா.வின் கிண்ணங்களும்,  புதுமைப்பித்தனின் ஆற்றங்கரைப் பிள்ளையாரும்,  விநாயகச் சதுர்த்தியும், பாலகுமாரனின் டம்ப்ளரும்,    சுஜாதாவின் சிறுகதைகளும் என்னைப் பல நாள் தூங்க விடாமல் யோசிக்க வைத்திருக்கிறது.  சிறுகதைகளின் மீதான என் காதல் அளவிடமுடியாதது. என்றும் அழியாதது. சுஜாதாவிடமிருந்துதான் சிறுகதை இலக்கணத்தை (ஏகலைவியாக) நான் அறிந்துகொண்டேன். நல்ல  சிறுகதைகள்  ஒவ்வொன்றும்    சின்ன விதைக்குள் உயிர்த்திருக்கும் மாபெரும் விருட்சங்கள்.

8 comments:

Unknown said...

அட..! வித்யா சுப்ரமண்யம்!
நீங்களும் பிளாக்ஆரம்பிசுட்டீஙகளா?

என் வலையின் வருகைக்கு நன்றி.

ஆஹா!எப்போவோ(ஜனவரி-09) எழுதின பதிவுக்கு இப்ப வந்து உங்கள் புத்தகம்வாங்கச்சொல்கிறீர்கள்.முயற்சி செய்கிறேன்.எங்கு கிடைக்கும்.

நானும் கல்கி,தினமணிக்கதிர்,சாவி எழுதினவன்.(90”s)

இப்போதும் என் வலையில் கதைகள்,கவிதைகள்,இசை,
இளையராஜா,கட்டுரை, என்று எழுதுவதுண்டு.எதையும் விட்டு வைப்பதில்லை. இன்று கூட ஒரு கதை எழுதி இருக்கிறேன்.
படிப்பதுண்டா?

முடிந்தால் படிக்கவும்.

உங்கள் இரண்டொரு சிறுகதைகள் படித்திருக்கிறேன்.(ஞாபகம் இல்லை.)அந்தக் காலம் எல்லாம் தலைகிழாய் மாறிப் போய்விட்டது.

நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கலாமே.word verification எடுத்துவிடுங்கள்.வர கமெண்டும் வராது.

நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

டியர் ரவி, என் வலைக்கு வந்து கமெண்ட் அளித்ததற்கு நன்றி. உங்கள் புத்தக கண் காட்சி அனுபவம் சுவாரசியமாக இருந்தது. உங்கள் எழுத்து நடை (சுஜாதாவின் சாயலோடு) நன்றாகவே இருந்தது. நிறைய எழுதுங்கள். எனது புத்தகம் `உப்புக் கணக்கு' அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும் (தேவி வெளியீடு).அது குறித்து உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் கணிப்பொறியில் பெரிய புலி இல்லை. டேச்னியால் விஷயங்கள் எதுவும் பெரிதாக தெரியாது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் கற்று வருகிறேன்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நலமா?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அட வேமன் ! எப்படி இருக்கிறீர்கள்? ஆச்சர்யமார்க்கு. என் வலைத்தளத்திற்கு வந்து நலம் விசாரித்ததற்கு நன்றி. எழுத்துப்பணி எப்படி இருக்கிறது? கடைசியாய் கணையாழியில் படித்தது. வீட்டில் அனைவரும் நலம்தானே?

சே.வேங்கடசுப்ரமணியன் said...

உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்கவும்.என்னுடையது maniseshan@gmail.com

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

nilavidya@yahoo.com
ushasubramaniam18@gmail.com

கோவை குமரன் said...

//கொஞ்சம் தனிமையும், நல்ல புத்தகங்களும் கொடுக்கின்ற வாசிப்பு சுகத்திற்கு ஈடு வேறு எதுவுமில்லை//

வெளி நாட்டில் பணி புரியும் எங்களுக்கு தமிழ்blog ம் தனிமையும்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..அந்த முழு நிலா..உப்பிலி கேரக்டரை மறக்க முடியுமா? கதைக்கு கனம் சேர்க்க கோபுலுவின் படங்கள்!!!