Saturday, March 22, 2014

கடவுள் விளம்பரம்

நான் ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கிற காலத்தில் எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. ஏதோ ஒரு கடவுளைப் (நினைவில்லை) புகழ்ந்து எழுதி இதை இருபது பேருக்கு நகல் எடுத்து அனுப்பவேண்டும், அப்படிச் செய்தால் ஒரு வாரத்திற்குள் நீ நினைத்ததெல்லாம் நடக்கும். தவறினால் இன்றிரவுக்குள் நீ ரத்தம் கக்கி சாவாய் என்று எழுதப் பட்டிருந்தது. அப்படி ஒரு பயம் எனக்கு. என் உண்டியலில் இருந்த காசை மறைத்து எடுத்துச் சென்று போஸ்ட் கார்ட் வாங்கி மாங்கு மாங்கென்று இம்பொசிஷன் போல் அதை எழுதி எனது பள்ளித் தோழிகள் சொந்தங்கள் எல்லோருக்கும் அனுப்பி விட்டு வந்து விட்டேன்.

அன்றிரவு நான் என்னென்ன நினைத்து அவை நடக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் கற்பனை வேறு. எனக்கு நேந்திரங்காய் சிப்ஸ் மிகவும் பிடிக்கும். ஒரு அரை கிலோ எனக்கு வீட்டில் வாங்கித் தர வேண்டும், அதற்கு யாரும் பங்குக்கு வந்து விடக் கூடாது. நான் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பெரிய ரப்பர் பந்து காணாமல் போயிருந்தது, அது கிடைத்து விடவேண்டும். கணக்கில் நான் வீக். எனக்கு கணக்கு நன்றாய் வந்து 100க்கு 100 வாங்க வேண்டும். மஹா கவி காளிதாஸின் நாக்கில் காளி எழுதி அவர் கவியாய் மாறியது போல் விடிந்தால் நானும் சரளமாக, ஆங்கிலேயனே வெட்கப்படும் அளவுக்கு ஆங்கிலத்தில் பேசித்தள்ள வேண்டும், என்னோடு டூ விட்டிருந்த என் தோழி என்னிடம் மீண்டும் பேசி விட வேண்டும், நான் கிளாஸ் லீடராக வேண்டும் இப்படி நிறைய விஷயங்கள், நான் 20 பேருக்கு கார்ட் அனுப்பி விட்ட காரணத்தால் ஒரு வாரத்தில் எனக்கு லபித்து விடும் என்ற சந்தோஷத்தோடு தூங்கிப்போனேன்.

அதில் ஒரு தோழி அவளது வகையாக எனக்கே ஒரு கார்ட் எழுதி அனுப்ப, மீண்டும் நான் பயத்தில் உறைந்து போனேன். என் உண்டியலிலும் காசில்லை. அம்மாவிடம் கேட்டால் நிச்சயம் தர மாட்டாள். அவளுக்கு என் கஷ்டமெல்லாம் புரியாது. கடவுளே நான் என்ன செய்வேன் என்று பயத்தில் உறைந்து போனேன். கையாலாகாதவாலாக படுத்துக் கொண்டேன். பாதி ராத்திரி திடுக்கிட்டு எழுவேன். வாயெல்லாம் தொட்டு பார்ப்பேன் ரத்தம் வடிகிறதா என்று. சந்தேகத்திற்கு உள்ளறைக்கு சென்று பீரோ கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டு அப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும், விடிவதற்குள் நான் ரத்தம் கக்கி செத்து விடுவேன் என்று தூங்காமல் தவித்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அந்த குழந்தைத்தனம் தொலைந்து விட்டதற்காக லேசான வருத்தமும் ஏற்படுகிறது.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் முன்பு போஸ்ட் கார்டில் வந்து பயமுறுத்திய விஷயம் இப்போது முக நூலிலும் தொடர்கிறது. ஒரு புகைப்படத்தை போட்டு அதனை ஷேர் செய்தால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள். மனிதர்கள் மாறவே இல்லை. கம்ப்யூட்டர் காலத்திலும் மூட நம்பிக்கை குறையவில்லை.தெய்வத்தை உணர்ந்தவர்களிடம் அதன் மீது அன்பும் பக்தியும் மட்டுமே இருக்கும். பயமிருக்காது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திருந்தவே மாட்டார்கள் போல... ம்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

காலங்கள் மாறினாலும்
ஆளுங்க மாறவேயில்லை!

”தளிர் சுரேஷ்” said...

இதே போன்று கடிதங்கள் எனக்கும் வந்ததுண்டு! ஆனால் நான் பயந்தது இல்லை! சுவையான பகிர்வு! நன்றி!

கே. பி. ஜனா... said...

மறக்க முடியாத அனுபவம்தான்!

Krishnakumar Sathiyawageeswaran said...

Even if we all shift to Mars this kind of people with these kind of belief will continue. Many have this feeling of insecurity so they are trying to gather mass.

Sundar Purushothaman said...

பிச்சைக்காரன் கண்களுக்கு கடவுள் தென்பட்டால், அவன் கடவுளிடம் பொன்னால் ஆன "திரு ஓடு" கேட்பதைபோல் தான் இதுவும்.

காகிதமும் தொழில் நுட்பமும், ஈரக்களிமண்ணைப் போல! அது அகப்படுபவரின் கைலாவகத்தைப் பொருத்து குரங்காகவும், பிள்ளையாராகவும் மாறுகிறது!

என்ன செய்ய.....
ஆனால் மனிதமனம் தான் மாறவே மாட்டேனென முரண்டுபிடிக்கிறது.

உங்கள் பதிவில் எந்தன் நினைவும் இறந்த காலத்தில் தவழ்ந்து மீண்டது. நன்றி அம்மா :)

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்