Sunday, November 21, 2010

நடைபாதையும் பாதசாரியும்

இரண்டு நாள் முன்பு மயிலை வடக்கு மாடவீதியில் சரவண பவன் அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன். மாடவீதி சந்தைக்கடையாக இருக்கிறது. நடுவீதியில் வாகனங்களோடுதான் பாதசாரிகளும் நடக்க வேண்டியிருக்கிறது. பின்னால் வாகனம், முன்னால் வாகனம், பக்கவாட்டில் ரிவர்ஸ் எடுக்கும் வாகனங்கள் என்று தடுமாறிப் போகிறோம். யாரிடமும் எந்த ஒழுங்கு முறையும் இல்லை. எனக்கு எதிரே ஒரு முதியவர் எதிர் திசையில் நாடு ரோடில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை மோதுவது போல் ஒரு கார் அவரது பின்னால் வந்து நிற்கிறது.

"யோவ் பெரிசு என்ன இப்டி நாடு ரோட்ல நடக்கற ஓரமா நடக்க மாட்டியா?" கார் ஓட்டுனர் எட்டிப் பார்த்து கேட்க நான் ஒரு வினாடி திகைத்தேன். அடுத்த நிமிடம்தான் அது நடந்தது. அந்த பெரியவர் அந்த ஓட்டுனரை எரித்து விடுவது போல் பார்த்தார். ஓரமா நடக்கணுமா? நடக்கறேனே. ஆனா எங்க நடககறதுன்னு நீ நடந்து காட்டு முதல்ல என்றாரே பார்க்கலாம். அந்த ஓட்டுனர் மேற்கொண்டு ஏன் பேசுகிறான். " நல்லா கேட்டீங்க "நான் பெரியவரை பாராட்டிவிட்டு நடந்தேன்.

வடக்கு மாடவீதியின் ஒருபக்கம் தெப்பக் குளத்தை ஒட்டியபடி ஒரு நடைபாதை உண்டு. ஆனால் அதை பாதசாரிகள் உபயோகப்படுத்த முடியாதபடி நடைபாதைக் கடைகள் ஆக்ரமித்திருக்கிறது. அதற்கு எதிர்ப்புரமும் நடைபாதை உண்டு. அதையும் அந்தந்த கடைக்காரர்களே ஆக்ரமித்திருக்கிரார்கள். நகைக்கடைக்காரர்களும் ஓட்டல்காரர்களும் நடைபாதைக்கும் வெளியே சாலையில் அவர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனம் பார்க் செய்ய வசதியாக சங்கிலி போட்ட ஸ்டான்டுகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆக சாலையின் ஒரு பகுதியும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது, ஒருபக்கம் முழுக்க நடைபாதைக்கடைகள். மறுபக்கம் முழுக்க கோடீஸ்வர முதலாளிகளின் ஆக்ரமிப்பு. அணிவகுத்து நிற்கும் கார்கள், சாலையின் இப்புறமும் அப்புறமும் செல்லும் நாற்சக்கர இருசக்கர வாகனங்கள், பழ வண்டிகள், , காய்கறி வியாபாரிகள்.

இந்த நெரிசலில் பாதசாரிகள் நடக்க எங்கே இடம் இருக்கிறது? எனவே நடுவீதியில் நடப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலைதான் அங்கு பாதசாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாதசாரிகளுக்கு எந்த உரிமையும் இல்லையா? வெளிநாட்டில் எல்லாம் பாதசாரிகளுக்குதான் முதல் மரியாதை என்று சொல்கிறார்கள். அந்த மரியாதை இங்கு எப்போது நடைமுறைக்கு வரும்?

நடைபாதைக் கடைக்காரர்களுக்கு பாதிப்பும் வராமல், அதே நேரம் பாதசாரிகள் நடப்பதற்கும் உதவும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய மாநகராட்சி முடிவெடுத்தால் இலவசமாக ஒரு ஆலோசனை தரத் தயாராக இருக்கிறேன். மெட்ரோ ரயில் நிலையங்கள் எல்லாம் ஆளில்லாமல் காலியாக சிலநேரம் பயமாகக் கூட உள்ளது. ரயிலில் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலாக இருக்கும் இடங்களில் உள்ள நடைபாதை கடைகளுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய அரசோடு பேசி இடம் ஒதுக்கித்தரலாமே. இதன் மூலம் மயிலையில், luz carner
மற்றும் மாடவீதி ஆகிய இடங்களில் பாதசாரிகள் நடந்து செல்ல இடம் கிடைக்கும். யோசிக்குமா நம் அரசும் மாநகராட்சியும்?

13 comments:

R. Gopi said...

இதே பிரச்சனை பெங்களூரிலும் உண்டு. யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

நீங்கள் சொல்லியிருக்கும் தீர்வு சரியே. ஆனால் இது மயிலாப்பூர் பிரச்சனையைத் தீர்க்க உதவும். மற்ற பகுதிகள்?

முதலில் இதை ஒழுங்காகச் செய்யட்டும். மற்றதை அப்புறம் பாப்போம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

ப.கந்தசாமி said...

கடிகாரத்தைத் திருப்பி வைக்க முடியாது. இந்தியா இப்படியேதான் போகும். இதைவிட மோசமாகவும் ஆகும். ஒரு சந்தோஷம். அதைப் பார்க்க நாம் இருக்க மாட்டோம்.

Rekha raghavan said...

நல்ல யோசனை.செய்வார்கள் என்று நம்புவோம்.

geethappriyan said...

நகரம் என்றால் இனி நரகம் போல.எல்லோரும் இப்போது கிராமத்தை நேசிக்க துவங்குகின்றனர்.இனி வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது போல ஆனாலும் ஆச்சரியமில்லை.அவ்வளவு போக்குவரத்து நெரிசல்.
ஏற்கனவே எல்லா மாசுக்களையும் அனுபவித்தாகிவிட்டது.இப்போது செல்போன் டவர்களில் இருந்து வேறு வெளிப்படும் அபாயமான கதிர்வீச்சு வேறு.இது நகருக்குள் எல்லா பறவைகளையுமே கொன்றுவிட்டது என்கிறார்கள்.

எல் கே said...

இந்தியாவில் எல்லாம் தலைகீழ்தான். நடந்து செல்பவர்குக்கும் சைக்கிளில் செல்பவருக்கும் இங்கு மரியாதை இல்லை

வல்லிசிம்ஹன் said...

ஹலொ!! என்ன ஒரு இனிமையான சந்தர்ப்பம் இது. நீங்கள் இணையத்தில் எழுதுவது எனக்கு இன்றுதான் தெரியும். உங்கள் ரசிகைன்னு சொல்லிக்கலாமா:)
மாடவீதிக்குப் போவதை ஒரு சந்தோஷமாக நினைத்த காலம் ஒரு ஐந்து பத்துவருடங்களுக்கு முன் இருக்குமா?
இப்போ யார் இடிப்பார்களொ.பர்ஸ் பத்ரமா இருக்கா காலுக்குக் கீழ பழத்தோல் இல்லாமல் இருக்கா இப்படிப் பார்ப்பதில் வளையல் வாங்கும் ஆசையே போய்விடுகிறதுமா. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்ல யோசனை தான்....

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஹலோ வல்லிசிம்ஹன் நன்றி. நீங்கள் மயிலைவாசியா?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
This comment has been removed by the author.
Chitra said...

நடைபாதைக் கடைக்காரர்களுக்கு பாதிப்பும் வராமல், அதே நேரம் பாதசாரிகள் நடப்பதற்கும் உதவும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய மாநகராட்சி முடிவெடுத்தால் ......


..... It is a big challenge. இடம் காலி ஆக காலி ஆக, புதிய கடைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தீர்வுதரும் தங்களின் இலவச ஆலோசனை நன்று.
ஆனால், அதே சமயம் இதுவும் தற்காலிகம்தான்
என்று யோசிக்க வேண்டியிருக்கின்றது.
இருப்பினும் செயல்படுத்தலாம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உடனடியாய் பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நம் கனவு நனவாக வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,வித்யா.நானும் மயிலை வாசிதான்.45 வருடங்களாக:)